←தமிழகத்தில் அரபிகள்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்துலுக்கர்

சோனகர்→

 

 

 

 

 


437577முஸ்லீம்களும் தமிழகமும் — துலுக்கர்எஸ். எம். கமால்

 

 


3
துலுக்கர்


இவர்களை, பிற்காலத் தமிழ் இலக்கியங்கள் சோனகர் எனவும், துருக்கர் எனவும், ராவுத்தர் எனவும், இனம்பிரித்துக் காட்டியுள்ளன. இந்தச் சொல் தமிழகத்தில் பதினோராவது நூற்றாண்டிலேயே வழக்கில் இருந்தமைக்குச் சான்றாக பதினோராவது நூற்றாண்டு இலக்கியமான ஜெயங்கொண்டாரது கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுரம் மாளிகையில், முதற்குலோத்துங்க சோழ மன்னனுக்கு திறையளந்த நாற்பத்து எட்டுத் தேய மன்னர்களின் பட்டியலில் “துருக்கரையும்” சேர்த்துள்ளது[1] அதே மன்னன் மீது புனையப்பட்டுள்ள பிள்ளைத் தமிழில், கவியரசு ஒட்டக்கூத்தரும் துருக்கரைப்பற்றிய குறிப்பினைத் தருகிறார்.[2] மகாகவி கம்பனது இராமாவதாரமும் “துருக்கர் தரவந்த வயப்பரிகள் ....” என துருக்கர்களைக் குறிப்பிட்டுள்ளது.[3] துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துலுக்கர் - எனவும் மருவி வழங்கியுள்ளது. இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் “துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது. “சீமத்த சனீகார துலுஸ்க தானுஸ்க” என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்.[4] விஜய நகர மன்னர்களுக்கு “துலுக்க மோகந் தவிழ்ந்தான்” “துலுக்க தள விபாடன்” என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது.[5] வீரபாண்டிய தேவரது நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு” என வரையறுத்துள்ளது.[6] கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது. மற்றும் தாராபுரம் கல்வெட்டு “துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாம லாகிவிட்ட[7]....” என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும் “முன்னாள் ராஜராஜன் ஶ்ரீசுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் ... ...” என்ற திருக்களர் கல்வெட்டும்[8] “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ....” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன. இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்” குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,

 


1.
துலுக்கபட்டி
— வில்லிபுத்துர் வட்டம்


2.
துலுக்கபட்டி
— சாத்துரர் வட்டம்
 

 

3.
துலுக்கபட்டி 
— விருதுநகர் வட்டம்


4.
துலுக்கன் குளம் 
— நெல்லை வட்டம்


5.
துலுக்கன் குளம் 
—  ராஜபாளையம் வட்டம்


6.
துலுக்கன் குளம் 
—  அருப்புக்கோட்டை வட்டம்


7.
துலுக்கன் குறிச்சி 
— முதுகுளத்துார் வட்டம்


8.
துலுக்க முத்துார் 
— அவினாசி வட்டம்


9.
துலுக்க மொட்டை
— கோவை வட்டம்


10.
துலுக்க தண்டாளம் 
— காஞ்சி வட்டம்


பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் “துலுக்கராயன் குழி” என்ற நில அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.[9] இதிலிருந்து துலுக்களில் சிறப்புடையவர் “துலுக்கராயன்” என அழைக்கப்பட்டார் என்பது புலனாகிறது. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். திரிகடராஜப்பகவிராயரது “திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்”[10] இராமநாதபுரம் மன்னர் “திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்”[11] இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல்வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழூர் வட்டம் பணத்தளை என்ற ஊர் “துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது.[12] இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க “துலுக்காணியம்” என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் கோநகராகக் கொண்டு ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை “துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.[13] காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை “துலுக்க அவாணம்” “துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது.[14] இன்னும், “துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[15] துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன. இன்னும் “துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு” என்ற சொல் கூட கையாளப்பட்டுள்ளது. திருவீழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டூழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.

“ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல
வீழித்துலுக்கு வந்துற்றதே ... ... ...”[16]
என்பது அந்தக் கவியின் பகுதியாகும்.
இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு” என்று மருவி பிற்காலத்தில் “மலுக்கு” என்று கூட பிரயோகம் பெறிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இன்னும், இந்த “துருக்கர்”, “துலுக்கர்” என்ற சொற்களை வேராகப் பெற்று பல புதிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளன

அவை யாவன : 

 

துருக்கம்
—
செல்லுதற்கரிய இடம், காடு, மலையரசன்


துருக்கம் 
—
கஸ்துாரி, குங்குமம்


துருக்க வேம்பு  
—
மலை வேம்பு


துருக்கற்பொடி 
—
செம்பிளைக் கற்பொடி


துருக்கமாலை 
—
குங்கும மலர்மாலை


துருக்கத்தலை 
—
கரு நிறமுள்ள கடல் மீன் வகை


துலுக்கி 
—
சிங்காரி


துலுக்கடுவன் 
—
ஒருவகை நெல்


துலுக்கப்பூ  
—
துலுக்கச் செவ்வந்தி


துலுக்க மல்லிகை 
—
பிள்ளையார் பூ என வழங்கப்படும் மலர், செடி


துலுக்க பசளை 
—
கீரை வகை


துலுக்க பயறு 
—
பயறு வகை


துலுக்க கற்றாழை 
—
கரிய பவளம் (நாட்டு மருந்து)


மற்றும், “துருக்கர்நாடு” என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும்[17] இங்குபொருத்தமுடையதாக உள்ளது. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.
 

 

↑ புலவர் ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணி பாடல் 333

வத்தலர், மத்திகர், மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
சூத்திரர் குத்தர் குடக்கர்
பிடக்கர் குருக்கர் துருக்கர்”

 

↑ கவியரசு ஒட்டக்கூத்தர்; குலோத்துங்க சோழன் பிள்ளைத்

தமிழ் (முத்தபருவம் பாடல் எண் 52

↑ மகாகவி கம்பன் – இராமாவதாரம் பாலகாண்டம் : வரை

காட்சி படலம் பாடல் எண் : 208.

↑ தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்

↑ சுப்பிரமணியம் பூ - மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D — 2871

↑ தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949

↑ A. R. 642/1902 திருக்களர்

↑ தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி - - எண். 523. பக்கம். 82-17

↑ வள்ளியம்மை - திருப்புத்துரர் (1981) பககம் 17

↑ "மக்கம், மராடம், துலுக்காணம்,
மெச்சி குறமகளும் ... பாடல் எண் 63-1
திரிகூடராசப்ய கவிராயர் - திருக்குற்றால குறவஞ்சி

↑ “வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் ...” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)

↑ A. R. 409, 406 / 1913.

↑  மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு)

↑ A. R. 587 / 1902

↑ தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி I.L.R. 52, திருவொற்றியல்.

↑ பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638

↑ பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்–மாணிக்கம்விற்ற படலம். பாடல் : எண் 65.

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel