←முகவுரை

இலங்கைக் காட்சிகள்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்புறப்பாடு

இலங்கையில் இறங்கினேன்→

 

 

 

 

 


437335இலங்கைக் காட்சிகள் — புறப்பாடுகி. வா. ஜகந்நாதன்

 

 

 
இலங்கைக் காட்சிகள்
 
1

புறப்பாடு
மரகதத் தீவு!—எத்தனை அழகான பெயர்! காவியங்களிலும் நாவல்களிலும் பவளத் தீவுகளையும் ரத்தினத் தீவுகளையும் பற்றிப் படித்திருக்கிறேன். அப்படி உண்மையாகவே தீவுகள் இருக்கின்றனவோ, இல்லையோ தெரியாது. ஆனால் உண்மையிலேயே மரகதத் தீவை நான் கண்டேன். எங்கே பார்த்தாலும் இயற்கை எழில் குலுங்க, மலையும் அருவியும், பொழிலும் காடும், மரமும் கொடியும், மலரும் இலையும் செறிந்து பரந்து எங்கு நோக்கினும் கண்ணைக் கவ்வும் பேரழகோடு காட்சி அளிப்பதைக் கண்டேன். காவியங்களிலே வருணித்திருக்கும் காட்சிகளையும், சங்க நூல்களிலே நல்லிசைப் புலவர்கள் தீந்தமிழ்ச் சொற்களால் கோலம் செய்திருக்கும் குறிஞ்சி நிலத் தோற்றங்களையும் கண்ணாலே கண்டேன்.
மரகதத் தீவு என்ற அழகான பெயர் இலங்கைக்கு உரியது. “எங்கள் மரகதத் தீவுக்கு வாருங்கள். இங்குள்ள இயற்கை யழகைப் பருக வாருங்கள்” என்று ஆசைகாட்டி அழைத்தார் அன்பர் கணேஷ்.
"கண்டியில் ஒரு சிறிய தமிழ் விழா நடத்தப் போகிறோம். அதோடு ஒரு தமிழ்ச் சங்கத்தையும் நிறுவப்போகிறோம். பாரதியார் திருநாளும் எழுத்தாளர் சங்க அங்குரார்ப்பணமும் நிகழ்த்த நினைத்திருக்கிறோம். நீங்கள் வந்து தலைமை வகித்துச் சிறப்பிக்கவேண்டும்” என்று அவர் எழுதினார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம்[1] தமிழ் விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற அந்தப் பெரிய விழாவுக்குப் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடினார்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்து தமிழ் ஆர்வம் மிக்க அன்பர்கள் வந்திருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் பலர் போயிருந்தார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு புதிய ஊக்கம் அந்தத் தமிழ் விழாவினால் உண்டாகிவிட்டது. இயல்பாகவே அவர்களுக்குத் தமிழன்பு அதிகம். இப்போது அது பன்மடங்கு பெருகி வளர்ந்தது. அதனுடைய பயனாகவே கண்டியில் செப்டம்பர் மாதத்தில் ஒரு சிறிய தமிழ் விழாவை நடத்த வேண்டும் என்ற ஆசை அந்தப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உண்டாயிற்று.
யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவுக்கு நான் போகவில்லை. பல காலமாக அன்பர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென்று அழைத்திருந்தும் சந்தர்ப்பம் கூடவில்லை. ஆனால் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பல வகைத் தொடர்புகளை இலக்கியத்தின் வாயிலாகவும் சரித்திரத்தின் வழியாகவும் தெரிந்து கொண்டிருந்தவன்தானே?
இராமாயணத்தில் காணும் இலங்கை, ஆற்றலுக்கும் செல்வத்துக்கும் உறைவிடம். மணிமேகலையில் இலங்கா தீபம் வருகிறது. மணிமேகலை இலங்கைக்குச் சென்று அங்குள்ள பல இடங்களைப் பார்த்தாளென்று தமிழ்க் காவியம் சொல்லுகிறது. சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கைக்குச் சென்றதும் இலங்கை யரசர்களுக்கு உதவியதும் ஆகிய பல செய்திகளைச் சரித்திரம் சொல்லுகிறது. புலவர்கள் பலர் இலங்கைக்குச் சென்று பரிசு பெற்று வந்த செய்திகளைப் பல தனிப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல பல நினைவுகள் இலங்கை என்ற போதே உள்ளத்தே தோன்றின.
செப்டம்பர் மாதம் நடக்கப்போகும் கூட்டத்துக்கு ஜூலை மாதமே ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டார், நண்பர். இலங்கை, தமிழ் நாட்டுக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 16 மைல் தூரந்தான். அதைக் கடக்கக் கப்பலும் வான விமானமும் இருக்கின்றன. ஆனாலும் இலங்கைக்கு நினைத்தவுடன் போய்விட முடியாது. ஆயிர மைலுக்கு அப்பாலுள்ள டில்லிக்குப் போக நினைத்தால் அடுத்தபடி புறப்படும் விமானத்தில் ஏறிப் போய்விடலாம். இலங்கை டில்லியைவிட நமக்கு எவ்வளவோ பக்கத்தில்தான் இருக்கிறது. ஆலுைம் அது தூரத்தில் இருக்கிறது. எளிதிலே நினைத்தவுடன் போகும்படியான நிலையில் இல்லை. காரணம், இலங்கை நமக்கு அந்நிய நாடு. இன்று இந்தியா சுதந்தரம் பெற்றிருக்கிறது. அப்படியே இலங்கையும் சுதந்தரம் பெற்று விட்டது. உலகம் முழுவதும் இந்தியாவையும் இலங்கையையும் ஒன்றுகவே ஜனங்கள் எண்ணுகிருர்கள். நாம்கூட, சமயத் தொடர்பாலும் பழக்கவழக்க ஒற்றுமையாலும் இலங்கையும் இந்தியாவும் சொந்தமுள்ளன என்று எண்ணுகிறேம். ஆபிரிக்காவையும் சீனவையும் ஆஸ்திரேலியாவையும் நினைக்கும்போது வேற்று நாடாகவே நினைக்கிருேம். நேற்றுவரைக்கும் நம்மோடு சேர்ந்திருந்த பர்மாவைக்கூட வேற்று நாடென்றே நினைக்கிறோம். ஆனால் இலங்கையை நினைக்கும்போது அத்தகைய நினைவு வருவதில்லை. அக்கா தங்கைகளின் வீடாகவே கருதுகிறோம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முன் காலத்தில் ஆயிரக்கணக்கான கூலிகள் போனார்கள். இங்கே தொழில் செய்ய வகையில்லாமல் அல்லற்பட்ட ஏழைகளெல்லாம் இலங்கைக்குப் போனார்கள். இலங்கையென்று சொல்வதில்லை. கண்டி தேசம் என்றுதான் சொல்வார்கள். கங்காணிமார்கள் மூலம் கண்டிக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பரவியிருந்தது. கங்காணிமார்களும் எப்படியாவது இந்தியத் தொழிலாளர்களை இலங்கைக்குக் கொண்டு போவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் இந்தியத் தொழிலாளிகள் வடித்த வேர்வையில் வளம் பெற்றன. அந்தக் காலத்தில் வெள்ளைக்கார முதலாளிகள் தோட்டங்களுக்கு உடையவர்களாக இருந்தார்கள். இந்தியத் தொழிலாளர்கள் நன்றாக வேலை  செய்வதைக் கண்டவர்கள் அவர்கள். ஆகையால் எத்தனை பேர் வந்தாலும் இலங்கைத் தோட்டங்களில் இடம் இருந்தது. கப்பலிலே நூற்றுக்கணக்காகத் தொழிலாளர் போனார்கள்.
கண்டிக்கும் காதலுக்குங்கூடச் சம்பந்தம் உண்டு. சங்ககால நூல்களில் வரும் காதற் காட்சிகள் பல. ஒரு காதலன் தன் மனத்துக்கு உவந்த மங்கையைக் காதலித்து அவளை மணம் செய்துகொள்ள முயல்வான். அவளுடைய பெற்றோர்கள் அந்த மணத்துக்கு இசையமாட்டார்கள் என்று தெரிந்தால் காதலன் தன் காதலியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு போய்விடுவான். அதற்கு உடன் போக்கு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காதலனுடன் காதலி பிறர் அறியாமல் போய்விடுவதனால் அந்தப் பெயர் வந்தது. 
தமிழ் நாட்டில் தொழில் செய்து வாழும் மக்களிடத்தில் காதல் வளரக் கண்டி துணை செய்தது. ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று தெரிந்தால் அதற்காக அவன் கவலைப்படுவதில்லை. கண்டியிலுள்ள தேயிலைத் தோட்டம் அவனை வா வா என்று அழைக்கும். கங்காணி அவனுக்குத் தூபம் போடுவான். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் அவன் தன் காதலியை அழைத்துக்கொண்டு கப்பலேறிப் போய்விடுவான். இப்படி 'ஓடிப்போன' பறவைகளுக்கு இலங்கை இடம் அளித்திருக்கிறது. இதெல்லாம் பழைய கதை.
ஆனால் இன்றும் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள இணைப்பை இறுக வைத்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழ்: மற்றொன்று  கதிர்காம வேலவன். கதிர்காமத்துக்கு இந்த நாட்டிலிருந்து அடிக்கடி பக்தர்கள் போய்வருகிறார்கள். மிகப் பழங்கால முதற்கொண்டே கதிர்காம யாத்திரை செய்வதைத் தமிழ்நாட்டு அன்பர்கள் விரும்பினர்கள். கதிர்காமத்தைப்பற்றி அதிசயமும் அற்புதமும் நிறைந்த செய்திகள் தமிழ்நாட்டில் பரவின.
இவ்வளவு வகையில் நெருக்கம் இருந்தாலும் இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள். ஆதலால் அமெரிக்காவுக்குப் போவதற்கு என்ன என்ன முன் ஏற்பாடுகளை அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளை இலங்கை போவதற்கும் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போவதற்கு முதலில் இந்திய அரசாங்கத்தின் பாஸ்போர்ட்டு வாங்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு உரிய அநுமதிச் சீட்டுத் தான் 'பாஸ்போர்ட்டு'. 'பாரதநாட்டின் ஜனாதிபதியின் உத்தரவுப்படி, அந்த அநுமதி நமக்கு அளிக்கப்படும். 
போலீஸ் கமிஷனர் காரியாலயத்துக்கு முதலில் விண்ணப்பம் போட்டு அவர்களுடைய விசாரணைக்கு உட்படவேண்டும். நம்முடைய சுய சரித்திரம் முழுவதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டி வரும். எங்கே பிறந்தோம், தகப்பனர் எந்த ஊரில் இருந்தார், எங்கே வாசித்தோம், என்ன என்ன வேலைகள் செய்தோம், என்ன என்ன இயக்கங்களில் கலந்துகொண்டோம் என்பனபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டி வரும். நாம் படித்த பள்ளிக்கூடங்களையும், வாங்கின அடிகளையும், செய்த விஷமங்களையும் பெற்ற வெற்றி தோல்விகளையும் சாமான்யமாக நாம் எங்கே நினைந்து பார்க்கப்போகிருேம் ! நாம் நம்முடைய சுய சரித்திரத்தை எழுதுவதாக இருந்தால் அவற்றை நினைந்து பார்க்கச் சந்தர்ப்பம் வரும். ஒவ்வொரு நாளும் அடுத்த நாளைப்பற்றிய கவலை முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும்போது போன நாளைப்பற்றி நின்று நினைத்துப் பார்க்கச் சமயம் ஏது? ஆகவே சுய சரித்திரம் எழுதினல் அவற்றை நினைத்துப் பார்க்கும் அவசியம் நேரும்.
எல்லோருமே சுய சரித்திரம் எழுதிவிட முடியுமா? மகாத்மா காந்தி எழுதலாம் ; ஜவாஹர்லால் எழுதலாம்; மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதிலாம். அவை காவியங்களைப்போல ஜனங்களுக்குச் சுவையையும் நன்மையையும் உண்டாக்கும். நாம் எழுதினால் திருப்பித் திருப்பி நாமே வாசித்து மகிழ வேண்டியதுதான்.
இலங்கைக்குப் போகப் பாஸ்போர்ட்டு வேண்டுமானால் கொஞ்சம் சுயசரித்திரம் எழுதும் மனோபாவம் வரவேண்டும். அப்போதுதான் கமிஷனர் காரியாலயத்தில் கேட்கும் கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதில் அளிக்க முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் எதற்காக வைத்திருக்கிருர்கள்? இந்தியாவில் மாத்திரம் இப்படி என்பதில்லை. எந்தத் தேசமானுலும் சரி, அதிலிருந்து அயல்நாட்டுக்குப் போக வேண்டுமானால் இந்தமாதிரி கட்டுப்பாடுகள் உண்டு. அபாயமில்லாத மக்கள் அயல் நாட்டுக்குப் போய் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எத்தனையோ வகைகளில் அபாயத்தை  உண்டாக்கும் பேர்வழிகள் இருக்கிறார்கள். வரியில்லாமல் சாமான்களைக் கடத்துவது, அரசாங்க விரோதமான காரியங்களைச் செய்து விட்டு அயல்நாட்டுக்கு ஓடிவிடுவது, அயல் நாட்டினர் இங்கே வந்து எதையாவது குற்றத்தைச் செய்துவிட்டு நழுவிவிடுவது என்பவை போலப் பல வகைகளில் இரண்டு நாடுகளுக்கும் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் உண்டாக்கும் காரியங்கள் உண்டு. அவற்றில் ஈடுபடுபவர்களைத் தெரிந்துகொள்ளவும் தடை செய்யவுமே இத்தகைய ஏற்பாடுகளை விதித்திருக்கிருர்கள்.
போலீஸ் கமிஷனர் காரியாலயத்தில் போய்க் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறபோது இந்தச் சமாதானம் பயன்படுகிறதா ? எரிச்சல்தான் உண்டாகிறது. விண்ணப்பத்தைப் போட்டுவிட்டு, நம்மைத் தேடிக்கொண்டு வந்து விசாரித்துவிட்டுப் போகட்டும் என்று இருந்தால், 'சிவப்பு நாடா'வின் சுழலுக்குள் அந்த விண்ணப்பம் சிக்கிக்கொள்ளும். அப்புறம் நாம் போகவேண்டிய வேலையை மாசக் கணக்காக ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நேரிலே சென்று ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் சிறிது அலுப்பு இருந்தாலும், அதில் அனுகூலம் உண்டென்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். கமிஷனருக்கு விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, நானே ஒரு நாள், "விசாரியுங்கள்" என்று சொல்லிக்கொண்டு போய் நின்றேன். நல்ல வேளை, அங்கே இந்த விசாரணையை நடத்தும் அன்பர் நல்லவராக இருந்தார். ஆசனம் அளித்து உட்காரச் செய்து பேசினர்.


 அவர் உட்காரச் சொன்னவுடனே நான் இலங்கைப் பிரயாணத்தில் பாதி தூரம் சென்றதுபோலவே சந்தோஷப்பட்டேன். அவர் என்னைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார். இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அதற்குள் அவருக்கு வேறு வேலை வந்து விட்டது. அதைக் கவனித்தார். மறுபடியும் இரண்டு கேள்விகள் கேட்டார். அப்புறம் எங்கோ வெளியிலே போய்விட்டு வந்தார். இந்தமாதிரி விசாரணை நடந்தால் எங்கள் வினா விடைப் படலம், மாதப் பத்திரிகையில் வரும் தொடர்கதைபோல, தொடரும், தொடரும் என்று பல தடவை போடவேண்டியிருக்குமே என்ற பயம் எனக்கு உண்டாயிற்று. “உங்களுக்கு என்ன என்ன செய்திகள் வேண்டுமோ, அவற்றையெல்லாம் நானே எழுதித் தந்துவிடுகிறேன்; அதை நீங்கள் பாருங்கள்; மேலும் ஏதாவது விவரம் வேண்டுமானுல் பிறகு நான் சொல்கிறேன்" என்றேன். அந்த நண்பர் ஒப்புக்கொண்டார்.
நான் எழுத ஆரம்பித்தேன். மூன்று நீண்ட பக்கங்கள் எழுதினேன், அதற்குள் அந்த அன்பர் வேறு காரியம் பார்க்கப் போயிருந்தார். நான் என் சரித்திரச் சுருக்கத்தை எழுதினேன். 'இலங்கையில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றும் இல்லை' என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு எழுதினேன். அப்படி எழுதுவது அவசியம் என்று யாரோ அன்பர் சொல்லியிருந்தார். அந்த ஞாபகம் இப்போது சமயத்தில் உதவியது.
அந்த மூன்று பக்கங்களையும் எழுதிவிட்டு ஒரு முறை திருப்பிப் படித்தேன். ‘அடடா! நம்முடைய சுய சரித்திரத்துக்கு இதுவே கருவாக அமையும் போல் இருக்கிறதே!' என்று எண்ணினேன். நான் என்றைக்காவது சுய சரித்திரம் எழுதுவதாக இருந்தால் இந்த மூன்று பக்கங்களும் அப்போது மிகவும் உபயோகப்படும். ஆனால் அவை கிடைக்க வேண்டுமே போலீஸ் கமிஷனர் காரியாலயத்துச் சுரங்கத்திலோ, குப்பைக் கூடையிலோ அல்லவா அது போய்ச் சேர்ந்திருக்கும்? கிடக்கட்டும், இப்போதைக்கு அந்தக் கவலை இல்லை.
என் சுய புராணத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அங்கே நடைபெறும் அழகான சம்பாஷணைகளையும் வேலைகளையும் கவனிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பாஸ்போர்ட்டுக்காக மாசக்கணக்கில் காத்திருக்கும் கனவான்கள் சிலர் உண்டு என்று தெரிந்துகொண்டேன், அரசியல் காரணங்களுக்காகப் பாஸ்போர்ட்டுக் கொடுக்காத வீரர்கள் சிலர் உண்டு என்பதையும் அறிந்தேன். அடி தடிச் சண்டை, அரசியல் பிரசங்கம், கூட்டத்தில் குழப்பம், ஒலிபெருக்கி வைக்க அநுமதி பெருமல் வைத்துப் பேசின விவகாரம், 293 செய்யாத குற்றம், 925 செய்யாத வேலை - இப்படி அந்த இடத்துக்கே உரிய பல ரகமான செய்திகள் காதில் விழுந்தன. எவ்வளவோ விஷயங்கள் எனக்குப் புரியவே இல்லை. போலீஸ் மணம் மணக்கும் அந்தச் சூழலில் உட்கார்ந்திருந்தேன்.
வேலையாகப் போயிருந்த அன்பர் வந்தார். அவரிடம் என் சுயபுராணத்தை நீட்டினேன். "நீங்கள் எம். ஏ. பட்டம் பெற்றவர்களா?” என்று கேட்டார்.


 "ஆம்" என்றேன்.
“எந்தக் காலேஜில் படித்தீர்கள்?"
“காலேஜில் படிக்காத எம். ஏ." 
அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்றோ, வியப்பு ஏற்பட்டதோ, எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. தனியாகப் படித்துப் பட்டம் பெற்ற கதையைக் கொஞ்சம் விளக்கினேன். அந்த மூன்று பக்கங்களையும் படிக்க அவருக்குப் பொறுமை இல்லை; சில கேள்விகள் கேட்டார். அவருக்கு அது பழக்கம். நான், "எல்லாம் அதில் எழுதியிருக்கிறேன்" என்றேன். இது எனக்குப் பழக்கம். ஏதோ பேருக்குச் சில புதிய கேள்விகள் கேட்டார். “சொத்து ஏதாவது உண்டா? நிலம் உண்டா? வீடு உண்டா?" என்றெல்லாம் கேட்டார். 'ஆகா! எத்தனை அக்கறை இவர்களுக்கு நம்மைப்பற்றி!' என்று எண்ணினன்.
கடைசியில், "நீங்கள் போகலாம்” என்றார். 
"பாஸ்போர்ட்டு வேண்டுமே!" என்றேன். 
"உங்கள் விலாசத்துக்கு வரும்" என்று சொன்னர்; என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொண்டு புறப்பட்டேன். பகல் 11-30 மணிக்குப் போனவன் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மீண்டேன். இதைப்பற்றிச் சில நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள், “நீங்கள் அதிருஷ்டசாலி. இதற்குள்விட்டார்களே!"என்றார்கள். 
பாஸ்போர்ட்டு வாங்கினால் மட்டும் போதாது. விஸா என்ற ஒன்று வேறு வாங்க வேண்டும். பாஸ்போர்ட்டு இங்கிருந்து செல்ல அநுமதி தருவது. இலங்கைக்குள் போக அநுமதி தருவது விஸா. பாஸ்போர்ட்டை அனுப்புச் சீட்டு என்றும், வீஸாவை நுழைவுச் சீட்டு என்றும் சொல்லலாம். ஓர் ஊரிலிருந்து புறப்படும்போது பிரிவுபசாரம் பெற்றுக்கொள்கிறோம்; போகிற ஊரில் வரவேற்புக் கிடைக்கிறது. அந்தமாதிரி இந்த இரண்டு சீட்டுக்களையும் கொள்ளலாம். ஆனால் அந்த இரண்டும் நமக்குத் தொல்லையில்லாமல் நம் மனத்துக்குச் சந்தோஷத்தைத் தருபவை. இந்த இரண்டும்-?
வீஸாவுக்கு விண்ணப்பம் உள்நாட்டு இலாகாவின் காரியதரிசிக்கு அனுப்ப வேண்டும்.[2] பாஸ்போர்ட்டுக் கிடைத்துவிட்டால், பிறகு வீஸா பெறுவது சுலபம் என்று, எல்லாம் தெரிந்த அன்பர் ஒருவர் சொன்னர். ஆனால் பாஸ்போர்ட்டு வரவில்லை. ஆகஸ்டு மாதம் முப்பத்தோராந் தேதி சுயபுராண விசாரணை நாள். ஸெப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கண்டியில் தமிழ் விழா நடைபெறுவதாக இருந்தது. பிறகு அதை 16-ஆம் தேதிக்கு ஒத்திப் போட்டார்கள். பாஸ்போர்ட்டு வந்துவிடும், வந்துவிடும் என்று எதிர் பார்த்தேன். கடைசியில் கமிஷனர் காரியாலயத்துக்கு அன்பர் ஒருவரை அனுப்பி வாங்கிவரச் செய்தேன். 5-ஆம் தேதியே கையெழுத்தான அது அங்கே சொஸ்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. 11-ஆம் தேதி அதைப் பெற்றுக்கொண்டு வீஸாவுக்கு விண்ணப்பம் எழுதி அன்பர் ஒருவர் மூலம் அனுப்பினேன். தொழில் விவரம் குறிக்கும்போது 'பத்திரிகைக்காரன்’ என்று குறித்திருந்தேன். அது சங்கடமாக முடிந்தது. பத்திரிகைக்காரன் அரசியல் குழப்பத்துக்குக் காரணமானவன் என்ற நினைவோ, என்னவோ? "அந்தப்  பேர்வழியையே நேரே வரச் சொல்லுங்கள்" என்று அதிகாரி சொல்லிவிட்டார்.
செப்டம்பர் 12-ஆம் தேதி நான் கோட்டைக்குப் போனேன்; உள்நாட்டு இலாகா அதிகாரியிடந்தான். அவரைப் பேட்டி கண்டேன். எதற்காகப் போகிறீர்கள்?" என்று கேட்டார். "ஒரு மகாநாட்டுக்கு" என்றேன். நான் வருவதை அறிந்து, கொழும்பு ரேடியோவிலிருந்து, இரண்டு பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கடிதம் ஒன்று வந்திருந்தது. 'அரசியல் விவகாரத்தில் தலையிடாதவன். அரசாங்க ரேடியோவினரே என் வரவினைப் பயன்படுத்த எண்ணியிருக்கிறார்கள்' என்று காட்ட அந்தக் கடிதத்தையும் கொண்டு போயிருந்தேன். அதைக் காட்டினேன். நான் காட்டினது நான் சந்தேகப் பிராணியல்ல என்பதை அறிவுறுத்த. ஆனால் அதைப் பார்த்த அதிகாரி, “இதற்கெல்லாம் பணம் உண்டல்லவா?" என்று கேட்டார்.
"கொடுக்கலாம்” என்று சொன்னேன்.
"பணம் வாங்குவதாக இருந்தால் சங்கடம் உண்டாகும். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதற்காகவே இது சொல்கிறேன்" என்று சொல்லி ஒரு மாச காலம் நான் இலங்கையில் தங்குவதற்கு அநுமதிச் சீட்டு அளித்தார். சலாம் போட்டுப் பெற்றுக்கொண்டு வந்தேன்.
இலங்கைக்குப் போகிறவர்களுக்கு ஊசி முனை அநுபவம் வேண்டும். ஊசி முனையில் நின்று தவம். செய்யவேண்டுமென்று நினைக்கவேண்டாம். அம்மை ஊசியையும், காலரா ஊசியையும் ஏற்றிக்கொள்ள வேண்டும். அவை நம்முடைய உடம்பில் ஊடுருவிச் சென்றதற்குரிய அத்தாட்சிப் பத்திரமும் வாங்கிக் கொள்ளவேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும், இலங்கையில் இறங்கும்போது, "வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போய் வாருங்கள்” என்று அனுப்பிவிடுவார்கள். நான் இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டேன். காலரா ஊசி என்னை ஒன்றும் செய்யவில்லை. அம்மை ஊசிதான் கொஞ்சம் தொந்தரவு செய்துவிட்டது. நான் புறப்படுவதற்கு முதல் நாள் கடுமையான ஜூரம். புறப்படும்போதும் ஜூரம் இருந்தது. இலங்கையை மிதித்த மறுநாள் ஜூரம் பறந்து போய் விட்டது.

பாஸ்போர்ட்டு, வீஸா, அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி-இத்தியாதி சீட்டுகளுடன் ஸெப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஏர் ஸிலோன் விமானத்தில் ஏறினேன்.
 

 

  

↑ 19?1.

↑ இப்போது இலங்கைக்கு வீஸாக் கொடுக்க அவ்வரசாங்கத்தார் ஒரு காரியாலயமே வைத்திருக்கிறார்கள்

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel