←அறவோர்

அறவோர் மு. வ  ஆசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன்கலைஞர்

என் பார்வையில்→

 

 

 

 

 


437185அறவோர் மு. வ — கலைஞர்முனைவர் சி. பாலசுப்பிரமணியன்

 


II

 

கலைஞர்

 
கலையும் கலைஞரும்
கலை என்பது ஒர் அனுபவத்தை, ஒர் உணர்வை, ஒரு கருத்தைப் பிறர் சிந்தையைத் தொடும்வண்ணம் படைத்துக் காட்டும் திறனே ஆகும். கருத்தை வெளிப்படுத்துவதில் கலைவண்ணமும், கலையிலே கருத்தின் வெளிப்பாடும் சிறக்க வெளியிடும் ஆற்றலாளனே சிறந்த கலைஞனாகிறான். கலையும் கருத்தும் படைப்பின் சிறகுகள் போன்றவை. கருத்தின் கலை நடையாகும். கலையின் கருத்து உணர்வாகும். எனவே கலைஞன் என்பவன் கருத்தாளனாகவும், கருத்தாளன் என்பவன் கலைஞனாகவும் இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. கலையும் கருத்தும் இணைந்தும் இழைந்தும் இருக்கும் போதே ஒரு படைப்பு சமூகத்தின் வரவேற்பிக்கும் பயன்பாட்டிற்கும் உரியதாகிறது. சமுதாயக் கலைஞரான டாக்டர் மு. வ. அவர்களின் நாவல்களில் காணும் கலைத் திறனைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வாழ்வும் இலக்கியப் பணியும்
டாக்டர் மு. வ. தமிழ்ப்பேராசிரியராகத் தொடங்கி, இலக்கியத் திறனாய்வாளராகத் திகழ்ந்து, படைப்பாளராக மலர்ந்து கலைத்தன்மை வாய்ந்த அறச்சிந்தைய ராய்த் திகழ்ந்தவர். எனவேதான் அவர்தம் படைப்புகள் கருத்துகளைத் தாங்கிய கலைக்கூடங்களாய்த் திகழ்ந்தன. பல்துறைக் களஞ்சியமாக விளங்கிய மு. வ. வின் பதின்மூன்று நாவல்களும், சிறுகதைத் தொகுதிகள் இரண்டும், நாடகங்கள் ஆறும், ஆங்கில நூல்கள் இரண்டும், இலக்கிய நூல்கள் இருபத்துநான்கும், சிறுவர் இலக்கியங்கள் நான்கும், கட்டுரைக் களஞ்சியங்கள் பதினொன்றும், பயண இலக்கியம் ஒன்றும், வாழ்க்கை வரலாற்று நூல் நான்கும், மொழியியல் நூல்கள் ஆறும், சிறுவர் இலக்கண நூல்கள் மூன்றும், மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டும், இலக்கிய வரலாற்று நூல் ஒன்றும் அவர்தம் கலைத்திறனோடு வெளியிடும் வெளிப்பாட்டுத் திறனுக்குச் சான்றாகத்தக்கன.
மு. வ வின் நாவல் நெஞ்சம்
டாக்டர் மு. வ. நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களில் தம் கலைத்திறனை வெளிப்படுத்தியிருந்தபோதிலும் நாவலாசிரியர் என்ற சிறப்பு முத்திரையாலே குறிக்கப் பெற்றவர். அதற்கு எண்ணிக்கை காரணமன்று; அவற்றுள் எடுத்துரைக்கப் பெற்றுள்ள எண்ணங்களே காரணமாகும். மற்ற இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் நாவல் வடிவத்தை விரும்பியதற்குக் காரணங்கள் அவருடைய சமுதாய உணர்வும் நாவல் ஒரு பரந்துபட்ட விரிந்த வடிவம் என்பதும் ஆகும். மதுரைப் பல்கலைக்கழகத்தில் 9-9-74 அன்று நடைபெற்ற அகிலன் கருத்தரங்கத் தொடக்க விழாவில் டாக்டர் மு. வ. ஆற்றிய உரை, அவர்தம் எழுத்துணர்வையும், நாவல் நெஞ்சத்தையும் புலப்படுத்துவதாக அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர் பதவியிலிருந்து நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டேன். துணைவேந்தர் பதவியிலிருந்து இன்னும் சில திங்களிலோ, ஒர் ஆண்டிலோ விடைபெற்று விடுவேன். நான் கடைசி வரையில் ஒய்வு பெற விரும்பாத பதவி ஒன்று உண்டு என்றால் அது எழுத்தாளர் பதவிதான். எழுத்து என் உயிருடன் கலந்துவிட்ட ஒன்றாகும். என் கடைசி மூச்சு உள்ளவரையில் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தபோது, அவர் அப்பதவியைப் பெற விரும்பவில்லை. அதற்கு ஒய்வு, உடல் நலக்குறைவு, நாவல் எழுதும் விழைவு இம்மூன்றுமே காரணம் என்றார்.
நாவல் பணி
உலகம் இன்று ஒரு குடும்பமாகியுள்ளது. உலகத்தின் பல்வேறு வளர்ச்சி பல்வேறு பாகங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில் தாக்குரவு பெற்றுள்ளது. காலத்தின் வேகத்தோடு ஒட்டிப்போக வேண்டிய இன்றியமையாமை இன்று மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று மனித சமுதாயத்தின் சிக்கல்களையும் விடிவுகளையும் விவாதிக்கின்ற, விளக்குகின்ற, கலையாக்குகின்ற மேடையாக நாவல் இலக்கியம் அமைந்துள்ளது. மனித சமுதாயத்தோடு ஒட்டி உருவாகி வளர்ந்த நாவல் இலக்கியம் இன்றையச் சமுதாயத்தின் மக்கள் இலக்கிய வடிவமாகியுள்ளது.
மேனாட்டாரின் வரவால், உரைநடை வளர்ச்சியால் தமிழ் இலக்கிய வரலாற்றில் சீரிய இடத்தைப் பெறுகின்ற அளவுக்கு இன்று நாவல் இலக்கியம் வளர்ந்துள்ளது. வேதநாயகம் பிள்ளை தொடங்கிய நாவற்கலை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வகையான தன்மைகளைப் பெற்றிருந்தது. சுதந்திரக் கால கட்டத்திலேதான் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி நிலையைப் பெற்றது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தமிழர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுதும் புலமை பலர்க்கு ஏற்படவில்லை. ஒரு சிலர் அப்புலமை பெற்றிருந்தும் நூல் பல எழுதவில்லை. வேறுசிலர் மக்களுக்குக் கவர்ச்சி மிகுதியாவதற்காகத் துப்பறியும் கதைகளை எழுத முன்வந்தனர். ஆகவே இலக்கியத்தரம் உள்ள கதைகளை நாடியவர்கள், வங்காளம் முதலான பிற இந்திய மொழி நாவல்களையும், ஆங்கிலம், பிரெஞ்சு முதலான ஐரோப்பிய மொழிகளின் நாவல்களையும் நாட வேண்டியதாயிற்று. அதனால் மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழ் நாட்டில் மிகுதியாக வரவேற்கப்பட்டன என்று டாக்டர் மு. வ. குறிப்பிடும் கருத்து நாவல் இலக்கிய வரலாற்றின் மைல் கற்களை அறிய உதவுவதாகும். சுதந்திர காலகட்டத்தில் ஒரு வளர்ச்சி மையத்தைப் பெற்ற ‘நாவற்கலை' கல்கியின் வரவால் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி நிலையை எய்தியது. இயக்கப் பார்வையுடன் இணைந்த அறிஞர் அண்ணாவின் நாவல்களும், இலக்கிய வளாகத்திலிருந்து தோன்றிய டாக்டர் மு. வ. வின் நாவல்களும் இளைஞர்களின் பார்வையை ஈர்த்து நின்றன. இம்மூவருள் டாக்டர் மு.வ. விற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
உலகத்தில் நாவல் இலக்கியம் என்பது வார, மாத ஏடுகளின் துணையைக் கொண்டே வளர்ந்து வந்துள்ளது. மக்களின் எண்ணங்களைப் புத்திலக்கியத்தின் திசையில் திருப்பிய கல்கி அவர்கள், தம் கலைப்படைப்புகளை எல்லாம் விமோசனம், நவசக்தி, ஆனந்தவிகடன், கல்கி ஆகிய ஏடுகள் வழிதான் வெளியிட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை, திராவிடநாடு, காஞ்சி முதலிய ஏடுகள் வழியே இளைஞர்களின் சிந்தையைக் கவர்ந்தார். இன்றும் ஏடுகளின் துணையின்றி எந்த எழுத்தாளரும் மக்களின் எண்ணங்களில் இடம்பெறவில்லை. ஆனால் டாக்டர் மு.வ. எந்த ஏட்டின் துணையுமின்றி, பதிப்பாளர்களின் உதவியுமின்றித் தம் எழுத்தாலே இளைஞர் சமுதாயத்தின் மகத்தான வரவேற்பைப் பெற்றார். இச்சிறப்பு அவர்தம் கலைத்தன்மைக்கு ஒரு தனி முத்திரை என்றே கூறலாம். தனி முயற்சியால் வெற்றி கண்ட பிறகே டாக்டர் மு. வ. வின் 'பாவை’ எனும் நாவல் 'லோகோபகாரி' என்ற இதழிலும், 'அந்த நாள்’ எனும் நாவல் தமிழ் முரசு என்ற இதழிலும் வெளியாயின. ஏனைய பன்னிரண்டு நாவல்களும் முழுநூல் வடிவம் பெற்றே இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிறைவைத் தந்தன.
இன்றைய படைப்பிலக்கியங்களைக் கலைப்படைப்புகள் என்றும் ஆய்வுப் படைப்புகள் என்றும், இருவகையாகப் பிரித்துக் காணலாம். கலைப்படைப்புகளில் உணர்ச்சிகள் தலைமையேற்கும். ஆய்வுப் படைப்புகளில் நுண்மாண் துழைபுலத்தன்மைகள் தலைமையேற்கும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றி பெறுவது கடினம். ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவது மிகக் குறைவு. ஆனால் டாக்டர் மு. வ. கலைப்படைப்பாளராகவும். ஆய்வுப் படைப்பாளராகவும் திகழ்ந்தார். ஆய்வுப் படைப்பாளராகிக் கண்ட வெற்றியே கலைப்படைப்பின் கட்டுக்கோப்புக்குத் துணை நின்றது எனலாம். இலக்கிய வரலாற்றில் டாக்டர் மு. வ. வின் தோற்றம் தனித் தன்மையோடு விளங்குவதற்கு இச்சிறப்பும் காரணமாகும்.
கலைமணம் கொண்ட சமுதாயச் சிந்தனையின் வார்ப்பாக விளங்கிய மு. வ. வின் நாவல்கள் தமிழ் நாவல் வாழ்விற்கு உணர்வூட்டியுள்ளன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை ஆழ்ந்து நோக்குவதுதான் புத்திலக்கியத்தின் போக்கு என்பதை உணர்ந்து தம் நாவல்களைப் படைத்தார். மு. வ. விற்கு முன்பே சமுதாயத்தின் புறப் போராட்டங்களைப் பற்றி எண்ணற்ற எழுத்தாளர்கள் நாவல்களைப் படைத்திருந்த போதிலும், மு. வ. வின் நாவல்கள் புறப்போராட்டங்களோடு, அகவாழ்வு சிக்கல்களையும் ஆழ்ந்து நோக்கியுள்ளன. சமுதாயத்தின் சிக்கல்களைக் கருப்பொருளாக்கி அதை மட்டும் சித்திரித்துப் படிப்பாளரின் சிந்தனைக்கு முடிவை விடும் எழுத்தாளர் போல் அன்றி, தம் படைப்புகள் வாயிலாக, சமுதாயத்தின் சிக்கலையும் குடும்பத்தின் சிக்கலையும் எடுத்துக்காட்டி, அதற்கான விடிவுகளைக் கலைப்பாங்கு குலையா வண்ணம் குறிப்பிட்டு, தம் நாவல்களைச் சமுதாயத்தின் மருந்தகமாக்கியுள்ளார். உலகக் கண்ணோட்டத்தோடு மக்கள் சமுதாயம் வாழவேண்டிய-வளர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய வேடம் நிறைந்த சமுதாயச் சூழலில் மனிதன் புதிய புதிய முறையில் வாழ்க்கையை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வாழ்க்கையைச் சுமையற்றதாய், எளிமையானதாய் ஆக்கிக் கொள்ள முடியும். இக்கோணத்தில் 'செந்தாமரை' (1946), 'கள்ளோ காவியமோ?' (1947), ‘பாவை’ (1948), 'அந்தநாள்' (1948), 'மலர்விழி' (1950), 'பெற்றமனம்' (1951), 'அல்லி' (1952), 'கரித்துண்டு' 1953), 'கயமை' (1956), 'நெஞ்சில் ஒரு முள்' (1956), 'அகல் விளக்கு' (1958), 'வாடா மலர்' (1960), 'மண்குடிசை' (1961) ஆகிய நாவல்களைப் படைத்தார். கதைக் கட்டுக்கோப்புக்குள் நின்று கலைப்பாங்கு சிதையா வண்ணம் வெளியீட்டு முறையாலும், விளக்கும் கருத்தாலும் உயர்ந்தே நின்றுள்ளார்.
சமுதாய நோக்கம்
இன்றைய சமுதாயம் முரண்பாடுகளின் முழுவடிவமாக உள்ளது. முரண்பாடுகளுக்கு மூலகாரணம் தனிமனிதரா, சமுதாயமா, அரசா என்ற கேள்விகள் எழக்கூடும். ஆனால் மூன்றுமே பின்னிப் பிணைந்தவை. எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் மற்றவர்களின் இல்லாமையை, இயலாமையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அரசியல் துறை, ஆட்சித்துறை, தொழில்துறை, நாட்டின் அரசியல் கோட்பாடுகள் போன்றவை சமுதாயத்தின் நலத்திற்கு எந்த அளவிற்குக் காரணமாக அமைகின்றனவோ அதே அளவிற்குச் சீர்கேட்டிற்கும் துணைநிற்கின்றன. எனவே இத்தகைய சீர்கேட்டிற்குச் சமுதாய அமைப்புநிலை காரணமாகிறது. சமுதாயத்தில் காணப்படும் குறைபாடுகள் அனைத்திற்கும் அனைவருமே காரணமாக அமைகின்றனர். இத்தகைய சமுதாயச் சூழலில் உருவாகின்ற எழுத்தாளர்களுள் முரண்பாடுகளுக்கு நியாயங்கள் வழங்குவோரும் உண்டு; எதிர்ப்போரும் உண்டு. முன்னவர் சூழல் நிலைக்கு அடிமைப்பட்டவர். பின்னவர் மனிதத்துவக் கண்ணோட்டம் உள்ளவர். டாக்டர் மு. வ. வின் சமுதாய நோக்கம் மானுடம் வாய்ந்தது. எனவேதாம், அவர்தம் நாவல்கள் அனைத்தும், சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கிய பார்வையின் வார்ப்புகளாகவே உள்ளன. சமுதாயம் நன்கு வளர்வதற்கு உண்மையான அன்பு வேண்டும். துாய உடல் வேண்டும். அறிவின் தெளிவு வேண்டும். இந்த மூன்றும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் பாடுபட்டால், எதிர்காலத்தில் போட்டியும் குழப்பமும் ஆரவாரமும் இல்லாமல் மக்கள் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும். இதுவே எதிர்காலச் சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள் (வாடாமலர், ப. 231) என்று தம் வாடாமலரிலே குறிப்பிட்டுள்ள கருத்து டாக்டர் மு. வ. வின் இலட்சியமிக்க சமுதாயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் இன்றைய சமுதாயச் சூழல், சீர்கேடுகள் நிறைந்து சுயநலம், சூழ்ச்சி, சுரண்டல் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவரையொருவர் ஆளுகின்ற மனப்போக்கு நிறைந்ததாகத்தான் அமைந்துள்ளதே தவிர, ஒருவரையொருவர் ஒன்றிச் செல்கின்ற மனிதத்துவக் கண்ணோட்டம் நிறைந்ததாக இல்லை. சமுதாயத்தில் காணப்படும் மரபுவழிச் சிந்தனைகளும், பண்பாட்டு வழக்கங்களும் மனிதவாழ்வை அடிமை கொள்ளுகின்றன. ஆண், பெண்ணை ஏய்த்துப் பிழைப்பதும், உடைமையாளர்கள் உழைப்பாளர்களைச் சுரண்டுவதும் அரசியல்வாதிகள் மக்களின் மறதியைப் பயன்படுத்துவதும், ஆட்சியாளர்கள் அறியாத மக்களை ஏமாற்றுவதும் இத்தகைய மனப்போக்கால் உருவாகுவனதாம் என்று கருதினார் டாக்டர் மு. வ. எனவேதான் அவர் தம் நாவல்களின் கருப்பொருளிலும், கருத்துப் பொருளிலும் சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்துள்ளார்.
கருப்பொருளும் கருத்துப்பொருளும்
⁠பிறருடைய பண்பாட்டையே பலவீனமாகக் கருதுவது இன்றைய சமுதாயம். இத்தகைய எண்ணப்போக்குடைய சமுதாயத்தில் மனச்சான்றுபடி வாழும் மனிதர்கள் சந்திக்கக்கூடிய போராட்டங்களையும், இயற்கையின் தத்துவத்தாலே பலம் குன்றிப் போயுள்ள பெண்ணினமும், நேர்படத்தக்க வாழ்க்கைச் சிக்கலையும் கருப்பொருளாக்கி இவற்றின் இழையோட்டத்திலே அனைத்து நாவல்களையும் படைத்துள்ளார் மு. வ.
⁠சமுதாய நிலையில் கொடிய தன்மைகள், இல்லாமையால் ஏழையர் வாழ்வில் காணும் அவலம், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகள், சமய, சமுதாய நெறிகளால் - மூட நம்பிக்கையில் வாழும் அறியாமை, திருமணமுறை, வரதட்சணைக்கொடுமை, மரபுவழிப்பட்ட சிந்தனைகளால் வரும் கேடு, பொதுவுடைமைச் சிந்தனை ஆகியவற்றைத் தம் பாத்திரங்கள் வாயிலாகக் கருத்துப் பொருளாக்கியுள்ளார்.
தனிமனிதனும் சமுதாயமும்
⁠சமுதாயத்தில் காணப்படுகின்ற சீர்கேடுகளுக்கும், சிக்கல்களுக்கும் அடிப்படைக் காரணம் சமுதாயப்போக்கே தவிர, தனிமனிதர்களின் செயல்கள் அல்ல என்று கருதினார். கோட்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் இடையே காணப்படும் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்பவர்களாகத் தனிமனிதர்கள் விளங்கினாலும், சமுதாயத்தின் ஒருங்கிணைந்த குறைபாடுகளுக்குச் சமுதாய அமைப்பே மூலநோய் என்று கருதினார் டாக்டர் மு. வ. அடிப்படையில் சமுதாய அமைப்பை மாற்றினாலொழிய, ஒருமித்த சிந்தனையுள்ள சமுதாயத்தைப் படைக்க இயலாது என்று நம்பினார். மரபுவழிச் சிந்தனைகளாலும், பண்பாட்டு வழக்காலும் பாதிக்கப் பெற்றுள்ள தமிழ்ச் சமுதாயம் தம்முடைய வாழ்க்கைச் சிக்கலிலிருந்து விடுதலை காண வேண்டுமென்றால், எண்ணப் புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார்.
பொல்லாதவர் கொடியவர் என்று சிலரைச் சுட்டிக் காட்டி எல்லாத் தீமைக்கும் அவர்களே காரணம் என்று பழியை எல்லாம் அவர்கள் மேல் சுமத்துவது பொதுவான வழக்கம். அது பெரும்பான்மையான நாடகங்களும், காவியங்களும் காட்டிய மரபு. அவர்கள் ஏன் பொல்லாதவர்கள் ஆனார்கள்? ஏன் கொடியவர்கள் ஆனார்கள் என்று உணர்வதே அறிவுநெறி; கருதியதை வலியுறுத்துவதற்கு. அறிவு வேண்டியதில்லை. காரணம் கண்டு தெளிவதற்கே அறிவு வேண்டும்’ என்னும் 'மலர்விழி’ நாவலின் முன்னுரையிலிருந்து டாக்டர் மு. வ. வின் சமுதாய நோக்கினை நன்கறிய முடிகிறது. சமுதாயத்தில் பீடித் திருக்கும் நோயைச் சுட்டிக்காட்டி, மருத்துவம் காண்பவராக மட்டுமின்றி, நோயின் மூலத்தையே ஆழ்ந்து நோக்கி அறிவிக்கும் நுண்ணாய்வு மருத்துவராக விளங்குகின்றார் மு. வ. 'அல்லி’ என்ற நாவலில் தாம் படைத்த 'அறவாழி’ என்னும் பாத்திரம் வாயிலாகவே தம் சமுதாய நோக்கத்தைப் புலப்படுத்தியுள்ளார்.


"இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்துப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிரக் குறையவில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாகஇருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள், சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடந்தருகின்ற சாய்க்கடைகளையும், தேக்கங்களையும் ஒழித்துச் சீர்படுவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை..."3
  (அல்லி, பக். 145-46) 
இச்சிந்தனை டாக்டர் மு. வ. வின் மனப்பார்வையையும், சமுதாய நலவுணர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதோடு, சமுதாய மேம்பாட்டு வேட்கையினையும் வெளிப்படுத்துகிறது.
டாக்டர் மு. வ. வின் படைப்புகளை ஆழ்ந்து நோக்கும் போது, சமுதாய நிலையைச் சித்திரித்துக் காட்டுவதில் சமுதாயக் கலைஞராகவும், நெறிமிக்க சமுதாயத்தை உருவாக்கும் கருத்துக்கலன்களை வழங்கும்போது, சமுதாய மருத்துவராகவும் விளங்குகின்றார்.
'தற்கால உலகில் நம்மிடையே எழும் பல்வேறு சிக்கல்களும் இனிமேல் நாவல் மூலம்தான் விவாதிக்கப் போகிறோம். எதிர்காலத்தில் சமூகத்தொடர்பான சிக்கல்களை விவாதிக்கின்ற மேடையாக நாவலே திகழப் போகிறது' என்னும் எச். ஜி. வெல்சு கூற்றிற்கிணங்க, டாக்டர் மு. வ. வின் படைப்புகள் அனைத்தும் சமுதாயச் சித்திரிப்பின் கலைக்கூடமாகவும், சமுதாயச் சிக்கல்களின் ஆய்வுக்கூடமாகவும் திகழ்கின்றன.
கலைக்கோட்பாடு
'கலை கலைக்காகவே’, ‘கலை வாழ்வுக்காகவே’ என்னும் கோணங்களில் கலையின் நோக்கத்தை அணுகுவோர் உண்டு. டாக்டர் மு. வ. கலை வேறு, வாழ்க்கை வேறு என்று கருதியவர் அல்லர். அவர் வாழ்க்கையையே கலையாகக் கருதியவர். மற்ற எல்லாக் கலைகளை விட வாழ்க்கைக் கலையை அறிவதே சமுதாய மேம்பாட்டிற்கு அடிகோல வல்லது என்று தம் படைப்புக்களைக் சித்திரித்தவர்.
⁠'கலை என்பது உள்ளம் உணர்ந்தவாறு வெளியிடும் திறன்' என்பர் (மண் குடிசை, பக். 111). அது வாழ்க்கையின் உயர்விற்கு உறுதுணை புரிய வல்லதாய் நெறி காட்டும் போக்கினதாய்5, (கொங்குதேர் வாழ்க்கை, பக். 45) அமைய வேண்டும்; இன்பப் பொழுது போக்கிற்குரியதாய் மட்டுமின்றி, வாழ்க்கையின் பயன்பாட்டினை நல்க வல்லதாய்6 அமைந்து சமுதாயத்தைத் திருத்தி உயர்த்த வல்லதாய்7 அமைய வேண்டும் என்ற கருத்துடையவர் டாக்டர் மு. வ. என்பதை அவர்தம் நூல்களின் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.
எழுத்தாளரின் நோக்கம்
டாக்டர் மு. வ., கலை வடிவத்தால் மட்டும் சிறப்பதில்லை; அதன் பயன்பாட்டாலும் நோக்காலும் சிறக்கிறது. வாழ்க்கையில் உயர்ந்த உணர்ச்சி அனுபவங்கள் ஏற்படும்போது அவற்றைக் கலைச்செல்வங்களாக்குதல் வேண்டும். கலைவடிவம் தந்து அழகாகப் படைத்தல் வேண்டும் என்று எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில்8 எழுத்தாளர் கொள்ளத்தக்க குறிக்கோளைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் மு. வ. தம் நாவல்கள் வாயிலாகச் சமுதாயத்தின் சிக்கல்களை - அகப்புறப் போராட்டங்களைப் பல்வேறு கோணங்களில் அணுகி சமுதாய விடிவிற்கான புதிய நோக்கங்களை வெளியிட்டுள்ளார்.
கருவும் கலையும்
கரு என்பது கருத்தன்று; அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடுகின்ற கருத்தினுள் பொதிந்துள்ள மையப்பகுதியே ஆகும். கரு என்பது நாவல் என்னும் கட்டடத்தின் அடித்தளம் போன்றது. 'கதைக்கு எதுவும் 
⁠கருவாக (Plot) அமைய முடியும். ஆயின் அக்கருவிற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதையாசிரியரின் திறனே ஆகும். 'கரு'வைச் சிதைக்காவண்ணம் பின்னப்படுகின்ற திறனே கலைத்தன்மை வாய்ந்த படைப்பினை உருவாக்கவல்லது.
⁠டாக்டர் மு. வ., தாம் காண விழைகின்ற சமுதாயத்திற்கான புரட்சிக் கோட்பாடுகளையும், வாழும் நிகழ்காலச் சமுதாயத்திற்குத் தேவையான சீர்திருத்தச் சிந்தனைகளையும், குடும்ப உறவில் அணுகிச் செல்ல வேண்டிய நெறிகளையும் எடுத்துரைத்து மனித வாழ்விற்கான புதிய பாதைகளைக் காட்டியுள்ளார். இன்றைய நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற சிக்கல்களைக் கூர்ந்துநோக்கிச் சமுதாய நலவுணர்வுடன் அவற்றையே கருக்களாக்கி நாவல் புனைந்துள்ளார்.
⁠காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்துக் காட்டுவது 'செந்தாமரை'. தாய்மையின் ஆற்றலைப் புலப்படுத்துவது 'பெற்ற மனம்'. 'கள்ளோ காவியமோ?' பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற இன்னல்களை வடிப்பது. 'கரித்துண்டு' கலைமனத்தின் உணர்வைப் புலப்படுத்துவது. உணர்ச்சிக்கும் அறிவிற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை - இளைஞர்களின் போக்கைப் புலப்படுத்துவது 'அகல் விளக்கு'. நாடு கடத்தப்பட்ட மக்களின் துன்பத்தை - வரலாற்று நிகழ்ச்சியை வடித்துக் காட்டுவது 'அந்த நாள்’. 'கயமை' அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை நடுவண் சிந்தனையாக்கிப் புனையப்பெற்றது. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள், வாடாமலர் குடும்ப உறவில் ஏற்படுகின்ற உறவுச் சிக்கலையும், உணர்வுச் சிக்கலையும் விவரிப்பன.
கருத்தும் கலையும்
⁠நாவல் என்பது இன்றைய அறிவியல் இணைந்த வேகமான காலகட்டத்தில் அமைந்துள்ள வாழ்க்கையைச் 
சித்திரித்துக் காட்டும் இலக்கிய வடிவமாகும். இத்தகைய படைப்பிலக்கியம் எந்த அளவுக்கு வாழ்வோடு தொடர்புடையதாக அமைகிறதோ அந்த அளவுக்கு அப்படைப்புக்கு வாழ்வு அமைகிறது. பேராசிரியர் கல்கி அவர்கள் 'கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது’ என்பார். எனவே, நாவல் என்பது பொய்மையற்றதாகவும், புனைவதுடையதாகவும் அமையவேண்டும் என்பது புலனாகிறது. கலைநயம் கெழுமிய, கற்பனை இணைவுடன் வாழ்க்கையின் வார்ப்பாக அமையவேண்டும் நாவல்; அப்போதுதான் படைப்பின் பயன் சமுதாயத்திற்குரியதாகும்.
⁠"கலையை விரும்புவோர் இருவகை. பொழுது, போக்குக்காகச் சிலர் விரும்புவார்கள்; சிலர் கலை தங்களை உயர்த்துவதற்கும் வாழ்க்கையில் புதுவழியைக் காண்பதற்கும் உதவும் கருவியாகப் பயன்படுத்த எண்ணுவார்கள். கலையை, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்சியைச் சார்ந்தவன் நான். ஆகையினாலேயே தான் என் கதையில் கருத்தையும் சேர்த்து வருகின்றேன்"10 என்ற கருத்தினர் டாக்டர் மு. வ. தனிமனித வாழ்வு என்பது சமுதாயத்தின் போக்கிற்கேற்ப வடிவம் பெறுவது. சமுதாயமும் மனிதனுக்குச் சிக்கல்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அதனால் மனிதன் சிக்கல்களிலிருந்து ஒதுங்கியும் தப்பித்தும் வாழ முற்படுகின்றான். அதுதான் வாழ்க்கை11 என்றும் கருதுகிறான் (மலர்விழி). மனிதன் சிக்கலின்றி வாழ வேண்டும்: அல்லது சிக்கலைத் தீர்க்கின்ற மனப்பக்குவத்தையாவது பெற வேண்டும். சமுதாயத்தின் பிற்போக்குத்தனமான ஏற்பாடுகளை, எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய வேண்டும் என்னும் நோக்கில் சிந்தித்தார் டாக்டர் மு. வ. எனவே தான், தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், தனி மனிதனுக்கும் அகவாழ்வுக்கும் ஏற்படுகின்ற சிக்கல்களைச் சமுதாய வித்தகராய் நின்று அணுகினார். அம்முயற்சியின் விளைவு தாம் அவருடைய கலையும் கருத்தும்.
டாக்டர் மு. வ. தம் நாவல்கள் அனைத்திலும் கருத்துகளை எதிரொலிக்கும் பாத்திரங்களாகவே படைத்துள்ளார் என்றும், சில இடங்களில் கட்டுரையாளராகவே நாவல்களில் விளங்குகிறார் என்றும், மு. வ. வின் கலைப்படைப்புகளைக் குறை காண்பது உண்டு, டாக்டர் மு. வ. வின் பாத்திரங்களான அறவாழி, செல்வநாயகம், முருகையா, கமலக்கண்ணன் ஆகியோர் பண்பு நலனுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களுக்கும், வாழ்வின் அகப்போராட்டங்களுக்கும் தீர்வு காண்கிறார்களேயொழிய, நேரத்திற்கு வந்து மேடையேறி கருத்துரை வழங்கிச் செல்லும் பேராசிரியர்களாகப் படைக்கப் பெறவில்லை என்பது கருதத்தக்கது.
டாக்டர் மு. வ. அவர்களே நேரில் வந்து பேசுவதாகக் கருதி மு. வ. வின் நாவல்களை வெறும் கருத்துரை நாவல்கள் என்று தரம் மெலிந்த தன்மையாக மதிப்பிடுவோர் உளர். ஆழ்ந்து நோக்கும்போது எந்தக் கருத்தை எடுத்துரைக்கும்போதும் பாத்திரத்தின் பண்புநலனுக்கும், போக்கிற்கும் நாவலின் பாங்கிற்கும், நிலைக்கும் ஏற்ற வண்ணமே பேசவைக்கப்பட்டுள்ளனரே தவிர, பண்புக்கும் கருத்துக்கும் முரணான பாத்திரங்கள் மீது கருத்துகளைத் திணிக்கவில்லை என்பது நினைவுகூரத் தக்கதாகும். உரையாய் உத்தியைக் கொண்டே பாத்திரங்கள் கருத்துகள் வழங்கப் பெற்றுள்ளன என்பதும் டாக்டர் மு. வ. கருத்தறிவுப்புத் திறனில் நோக்கத்தக்கதாகும்.
“படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்திற்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைக் கேட்டால், இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்”12 (அகல் விளக்கு).
முரண்பாடுகளின் முழுவடிவமாகிப் போய்விட்ட அவலத்தையும், பணமே வாழ்க்கையின் குறிக்கோளாக்கி-முறையற்ற தன்மையில், மனிதத்தன்மையற்ற வகையில் செல்லும் சமுதாயத்தின் போக்கையும் கண்டிக்கின்றார் மு. வ. மேலும் கலைப்பாங்கைச் சிதைக்காவண்ணம் பாத்திரத்தின் பண்புநலனையொட்டிக் கருத்தை வழங்கியுள்ளமையும் அறியத்தக்கதாகும்.
'திருமணமாகி இல்வாழ்க்கையில் ஒரளவு பெற்ற அனுபவம் போதும். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி எஞ்சிய வாழ்க்கையை மற்றவர்களுக்கு வழிகாட்டும் வன்கயில் வாழ்ந்தால் போதும்' என்று 'அல்லி'யில் உரைத்த மு. வ., அக்கருத்தின் வடிவமாக அகல்விளக்கில் பாக்கியம் அம்மையாரைப் படைத்துக் காட்டியுள்ளார். அந்த அம்மையார் அருட்பா, கைவல்லியம், இராமதீர்த்தரின் அறிவுரைகள், மணிமேகலை வாசகம், சத்திய சோதனை, தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றைப் படித்ததால் அன்பும், பண்பும் தனிமையில் இனிமையும் பெற்றதாகப் படைத்துக் காட்டுகிறார்.
வடிவத்தால் மட்டுமின்றி, சமுதாயத்தை அணுகி, விளக்கம் கூறுகின்ற முறையாலும் புதுமையைக் காணும் போதே உரைநடைக் காப்பியமான 'நாவல்' புதினமாகும். பழந்தமிழ் இலக்கியத்திலும், பண்பாட்டிலும் தோய்ந்து வளர்ந்த டாக்டர் மு. வ. புதிய இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தி, வெற்றி கண்டார். நாவலாசிரியர் என்பவர் உள்ளதை உள்ளவாறு, உணர்ந்தவாறு சித்திரிப்பவர் மட்டும் அல்லர்: உணர்த்த விரும்பியவாறு சித்திரிக்க வல்லவரே; வேண்டியவரே ஆவார். கற்புக்கு மு. வ. தரும் விளக்கம் புதுமையானது மட்டுமன்று; புரட்சியானதுமாகும். 'கரித்துண்டு' என்ற நாவலில் படைப்பாளராக நின்று பாத்திரங்களின் போக்கையொட்டி, கருத்துரை வழங்கியிருந்தால், டாக்டர் மு. வ. சிந்தனையாளர் என்ற வகையில் போற்றப் பெற்றிருப்பார்; ஆனால் தாம் படைத்த 'பேராசிரியர் கமலக்கண்ணர்' வாயிலாக வெளிப்படுத்தி அவர் ஒரு கலைஞராக வெற்றி பெற்றுள்ளார்.
“கற்பு என்றால் வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஒருத்தியாக உண்மையாக வாழ்வது என்று சொல்வார்கள். அது பழங்காலத்திற்கு மிகப் பொருந்தும். பழங்காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி மட்டும் இருந்தது. இந்தக் காலத்தில் யந்திரத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆராய்தலும் அனுபவித்தலும் மிகுதியாக உள்ள காலம் இது. ஆகவே ஒருவனை விட்டு இன்னொருவனுடனும் வாழும்படி நேரலாம். ஒருவனை விடாமல் இன்னொருவனுடன் வாழ்வதுதான் தவறு. எப்போது எவனுடன் வாழ்கிறாளோ அவனுக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்: அதுதான் கற்பு". (கரித்துண்டு)
பாத்திரப் படைப்பு
படிப்பாளரின் சிந்தையை என்றும் தொட்டு நிற்கும் கலைக்கூறு பாத்திரப் படைப்பாகும். கருவாலும், கதைப் பின்னலாலும் வெற்றிபெற முடியாத நாவலைப் பாத்திரப் படைப்பால் வெற்றிபெறச் செய்ய இயலும். காலத்தைக் கடந்து படைப்பாளனையும் படிப்பாளனையும் இணைத்து நிற்கும் பாலம் போன்றது பாத்திரப்படைப்பு. சார்லஸ் டிக்கன்ஸ், தாக்கரே, மாப்பசான், அலெச்சி டால்ஸ்டாய் போன்றோர் பாத்திரப் படைப்பு என்பதைத் தங்கள் உணர்வின் படைப்பாகவே கருதியுள்ளனர். தமிழ் நாவலாசிரியர் அகிலன் பாத்திரப்படைப்பு குறித்துக் குறிப்பிடும் கருத்து - படைப்பாளரின் மனவோட்டத்திலிருந்து புறப்படும் உயிர்த் துடிப்பே பாத்திரப் படைப்பு என்பது நன்கு விள்க்கமுறுகிறது. என் இரத்தத்திலிருந்தும் உயிர்மூச்சிலிருந்து இதயத் துடிப்பிலிருந்தும் பிறந்தவர்கள் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள், மண்ணின் தெருப்புழுதியில் அலைந்து திரியும் என் உணர்ச்சிகள் என்னிலும் உயர்ந்த விண்ணை நோக்கிப் பிறந்த வேளைகளில் என்னிடமிருந்து பிறந்தவர்கள் அவர்கள்". (கதைக்கலை, ப. 111)
உணர்ச்சியின் துடிப்பிலிருந்து பிறந்து வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரங்களே ஒரு படைப்பிற்கு அமரத்தன்மையைத் தருகின்றன.
கருப்பொருளையோ, பாத்திரப் படைப்பையோ தலைமை நோக்கம் ஆக்கி நாவல் புனைவது இயல்பு. கருப்பொருளுக்கேற்பப் பாத்திரங்களைப் படைத்து நிகழ்ச்சிப் பின்னலை உருவாக்கிக் கலைத்திறன் காட்டுவோர் சிலர்; கருப்பொருளின் மையத்தில் பாத்திரங்களைத் தோற்றப் பொலிவோடு சித்திரிப்போர் சிலர்; இத்தகைய நெறியினருள் நாவல்களில் பாத்திரங்களையெல்லாம் தம் கருத்துகளில் எதிரொலிகளாகப் படைப்போரும் உளர். கலைஞன் என்பவன், வாழ்க்கையின் போராட்டத்தை எடுத்துரைப்பவன் மட்டுமல்லன்; போராட்டத்திற்குத் தீர்வு காணுபவனும் அவனே என்ற கோட்பாட்டினரான டாக்டர் மு. வ., தம் பாத்திரங்களைச் சமுதாயச் சிக்கல்களின் உயிர்த் துடிப்புகளாக, உணர்ச்சிகளின் வார்ப்புகளாக ஆக்கியுள்ளார். மு. வ. தம் நாவல்களில் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்று கூறுவதை விட, சமுதாய மாந்தர்களையே படிப்பாளரின் சிந்தனை மேட்டில் நிழலாடச் செய்துள்ளார் எனலாம்.
"அறச்சிந்தனையின் அல்லது சமுதாயச் சிந்தனையின் வார்ப்பாக நடப்பியல் நாவல்களில் பாத்திரங்கள் படைக்கப் பெற்றிருக்குமானால் அது பொருள் பொதிந்ததாகும்" என்பார் இராபர்ட் ஸ்கோவஸ். டாக்டர் மு. வ. தம் நாவல்களில் அறவாழி, கமலக்கண்ணர், முருகையா, மெய்கண்டார் போன்ற பாத்திரங்களைச் சிந்தனை முகவர்களாகப் படைத்துள்ளார் என்பது உண்மை. ஆனால் டாக்டர் மு. வ. வின் பாத்திரங்கள் எல்லாம் கருத்துகளின் முகவர்கள்தாம் என்று கூறிவிட முடியாது. மு. வ. வின் நாவல்களில் நடமாட விட்டிருக்கும் பாத்திரங்கள் எல்லாம், எலும்பும், தசையும் கொண்டவை மட்டுமல்ல; உணர்ச்சியும் இணைந்த உயிரோவியங்கள் என்பதை ஆழ்ந்து நோக்குவோர் அரிதின் உணர்வர். இன்றைய சமுதாயம் பொருளியல் நிலையிலோ, பாலியல் நிலையிலோ ஏற்படுகின்ற குறையை அளந்து வைத்து ஒருவரையொருவர் வஞ்சித்து வாழும் போக்கில் அமைந்துள்ளது என்பதை நன்குணர்ந்த மு. வ. வஞ்சப் பாத்திரங்களையும் படைத்துச் சமுதாயச் சூழலைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் மு. வ. கருத்தியல்வாதியாக மட்டுமிருந்து பாத்திரங்களைப் படைக்காமல் நடப்பியல்வாதியாகவும் இருந்து பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
பண்புநல வெளிப்பாடு
படைப்பாளர்கள் பாத்திரங்களின் பண்புகளை மூன்று வகையில் வெளிப்படுத்துவர். (1) படைப்பாளர்களே பாத்திரங்களின் போக்கை நேரடியாக எடுத்துரைத்தல், (2) படைப்பில் உள்ள பாத்திரங்களின் பண்பை மற்ற பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துதல், (3) பாத்திரங்களே தங்களின் போக்கை எண்ணி உரைத்தல் ஆகிய மும்முறையில் பாத்திரப் படைப்பு வெளிப்படல் இயல்பு. இவற்றை இருவகையில் அடக்கிக் காண்பதுமுண்டு. ஆசிரியர் நேரடியாகத் தாமே பாத்திரத்தின் போக்கை எடுத்துரைத்தல் நேரடி முறை என்றும், பாத்திரங்களே மற்றப் பாத்திரங்கள் குறித்துக் குறிப்பிடுவதை நாடகப்பாங்கின என்றும் கூறுவர்.


 
பாத்திரப்படைப்பு


நேரடிப்பாங்கின  மோகன் (கரித்துண்டு)நாடகப்பாங்கின மங்கை (கள்ளோ? காவியமோ?) 


செல்வநாயகம் (மலர்விழி), வடிவு (நெஞ்சில் ஓர் முள்) சந்திரன் (அகல் விளக்கு), மெய்யப்பன் (மண்குடிசை) நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களின் போக்கை - அவர்களுக்கு இடும் பெயர்கள் வாயிலாகவே சுட்டுவர் படைப்பாளர். சமுதாயத்தின் பார்வையில் தனிமுத்திரை பெற வேண்டுமென்ற நோக்கில் படைப்பாளர்கள் இத்தகைய பெயர் உத்திகளைப் பயன்படுத்துவதுண்டு. இதனைக் குறுக்கு உத்தி (Fringe technique) என்று வழங்குவர் திறனாய்வாளர்.
"கதைமாந்தர்கள் என் உள்ளத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவரவர்களுக்குப் பெயர்வைக்கும் பொறுப்பு ஏற்படும்போது அவரவர்களின் பண்புகள் உள்ளத்தில் நின்று தூண்டுதல் புரிகின்றன. அதனால் அப்படிப் பெயர்கள் உண்டு’, என்னும் கூற்றிற்கு ஏற்ப டாக்டர் மு. வ. தம் நாவல்களில் படைக்கப் பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பெயர்களை வழங்கியுள்ளார். பாத்திரங்களின் பண்பு நலன்களையும் வாழ்க்கை முறையையும்யொட்டி வழங்கியிருக்கும் பெயர்கள் படைப்பின் கலைத்தன்மைக்கு உரமூட்டியுள்ளன.
1. நெறிநிலைப் பாத்திரங்கள்
அறவாழி, மெய்கண்டார், கமலக்கண்ணர், அருளப்பன் , சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மங்கை மான்விழி, மென்மொழி, தேமொழி.


 2. நெறியிலாப் பாத்திரங்கள்
ஆணவர், சுப்புரத்தினம், கேசவராயன், வசீகரம், சகசாம்பாள்.
3. எளிய வாழ்வு உடைய பாத்திரங்கள்
திருவேங்கடம், வேலய்யன், குழந்தைவேல், மணி, சந்திரா, வள்ளி, ரேவதி, கனகா.
4. முரணிலைப் பாத்திரங்கள்
பாத்திரப் படைப்பின் ஆற்றலை வெளிப்படுத்துவது முரணிலைப் பாத்திரங்களாகும். சமுதாயச் சித்திரிப்பாக மட்டுமின்றி, கலைத்திறன் வெளிப்பாடாக விளங்குவது முரண்நிலை படைப்பாகும்.
மோகன் - நிர்மலா (கலையும்/ஆடம்பரமும்) (கரித்துண்டு)
காஞ்சனை - செல்வநாயகம் (எளிடையும்/ஆடம்பரமும்) (மலர்விழி)
தானப்பன் - குழந்தைவேல் (உணர்ச்சி/அமைதி). (வாடாமலர்)
5. கோட்பாட்டுப் பிரதிநிதித்துவப் பாத்திரங்கள்
டாக்டர் மு.வ.வின் பாத்திரங்கள் உணர்வின் சித்திரிப்பு என்பதைவிட கருத்தின் சித்திரிப்பு என்பதே மிகப் பொருந்தும். ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் தன்மையிலும், ஒவ்வொரு எழுத்தின் அசைவிலும் சமுதாய நோக்கமே நெம்புகோலாகயிருந்து டாக்டர் மு.வ.வை உந்தியுள்ளது. குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் சமுதாய வாழ்வில் ஏற்படும் சிக்கலையும் எடுத்துரைக்கும் டாக்டர் மு. வ. அரசியல் கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார்.


 'பேராசிரியர் கமலக்கண்ணன்’ என்னும் பாத்திரத்தை முதலாளித்துவச் சிந்தனையின் பிரதிநிதியாயும், குமரேசன் என்னும் பாத்திரத்தை-சமத்துவச் சிந்தனையின் பிரதிநிதியாகவும் படைத்துள்ளார்.
நாவலாசிரியர் மு.வ.வின் படைப்புகளில் சிந்தனையாளர் மு.வ.வையும் சில பாத்திரங்களில் காண முடிகிறது.
நாவலாசிரியர்களின் படைப்பாற்றல் படிப்பாளரின் நெஞ்சில் நிழலாடச் செய்கின்ற பாத்திரப் படைப்பின் திறனைப் பொறுத்தும் அமைவதுண்டு. ஜெயகாந்தனின் கங்காவும்; அகிலனின் தணிகாசலமும், பார்த்தசாரதியின் பரணியும், தகழியின் கருத்தம்மாவும், படிப்பாளரின் நினைவிலே நிலைபேற்றைப் பெற்றதைப் போல் நாவலாசிரியர் டாக்டர் மு.வ.வின் அல்லி (அல்லி), சந்திரன் (அகல் விளக்கு), ஆணவர் (கயமை), செல்வநாயகம் (மலர்விழி) ஆகியோர் சிறப்பிடம் பெறத்தக்கவராவர். கருத்துக் கலைஞரான டாக்டர் மு.வ. வின் அறவாழி (அல்லி) பாத்திரப்படைப்பில் குறிப்பிடத்தகுந்த பாத்திரமாகும்.
படைப்பின் சங்கிலித்தன்மை
நாவலாசிரியர்கள் சிலர் தம் சிறுகதையில் வரும் கருவையே நாவல் ஆக்குவதுண்டு. (ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தின் வளர்ச்சியே சில நேரங்களில் சில மனிதர்கள் ஆக வளர்ச்சியுற்றது). ஒரு நாவலின் கருவையோ பாத்திரங்களை எழுதும் மற்றொரு நாவலில் வளர்ச்சி நிலையாகவோ-தொடர்ச்சியாகவோ காட்டுவதுண்டு. நிகழ்ச்சிப் பின்னலில் இணைந்துவரும் நாவல்களும் உண்டு. (கள்ளோ? காவியமோ?, கரித்துண்டு). கள்ளோ? காவியமோ? என்ற நாவலில் வரும் அருளப்பர் அகல்விளக்கில் சொற்பொழிவு ஆற்றும் பேராசிரியராய்ப் படைக்கப் பெற்றுள்ளார். அல்லியில் படைக்கப்பெற்ற அறவாழி சிந்தனை வளம் கெழுமிய முழுமை நிறைந்த பாத்திரமாகப் படைக்கப் பெற்றுள்ளார்.
இலக்கியத் திறனாய்வாளர்கள் பாத்திரப் படைப்பை முழுநிலை மாந்தர் (Round Character) என்றும், ஒருநிலை மாந்தர் (Flat Character) என்றும் பகுத்துக் காண்பதுமுண்டு. 18 இப்பகுப்பாய்வுக்கு ஏற்பப் பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளமையை ஆய்வோர் உணர்வர்.
வடிவம்
எந்த ஒரு தனிமனிதனின் வாழ்வும் எதிர்நோக்குகின்ற வரைபடங்களுக்குள் அடங்குவதில்லையோ அதைப் போலவே நாவலின் அமைப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட வரன் முறையில்லை. படைப்பாளன் எடுத்துக் கொள்ளுகின்ற கருப்பொருளையும், அதனடிப்படையில் உருவாக்கும் கதைப்பின்னலையும் கொண்டே படைப்பின் அமைப்பு செம்மை பெறுகிறது. எனவே, நாவல்களில் சில பொதுத் தன்மைகள் அமைந்திருந்த போதிலும், ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு.
“நாவல் எந்தச் சமுதாயத்தைப் பற்றி எடுத்துரைக்கிறதோ அந்தச் சமுதாயமே பற்பல மாறுதல்களைப் பெற்றுவரும்போது, நாவல் என்னும் இலக்கிய வகை இப்படித்தான் அமையவேண்டும் என்ற இலக்கணம் கூறி வரையறுப்பது பொருந்தா முயற்சியாகும்." 17 என்று கருதுகிறார் ரிச்சர்ட் சர்சு. எனவே நாவலின் வடிவம் பொதுவான நியதிகளுக்கு உட்பட வேண்டியதன்று என்பது புலனாகிறது. கதைப்பின்னலையும், கருப்பொருளையும் சார்ந்து தொடக்கமும், முடிவும் அமையும்போது அவை கலைக்கூறுகளாகப் போற்றப் பெறுகின்றன.
தொடக்கம்
டாக்டர் மு.வ. நாவல்களின் தொடக்கங்கள் சிந்தனையைச் சிலிர்க்கச் செய்வன மட்டுமல்ல; கதையின், கருவைக் குறிப்பால் உணர்த்துவனவுமாகும். பாத்திரங்களின் உணர்வுப் புலப்பாடாக-வருணனைப் போக்கினதாக கருப்பொருளின் குறியீடாக அமைந்துள்ள திறன் குறிக்கத்தக்கதாகும்.
1. கருவின் குறிப்புப் பொருள்
"உலகம் பொல்லாதது; அவர் நல்லவராக இருந்தாலும் உலகம் பொல்லாதது"18 (கள்ளோ காவியமோ?)
"படிப்பு உடம்பை மட்டும் மென்மையாக்குகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அது மனத்தையும் மென்மையாக்குகிறது என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன்" (நெஞ்சில் ஒரு முள்)
2. பாத்திரங்களின் உணர்வுப் புலப்பாடு
"பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள்”. (அகல் விளக்கு).
முடிவு
டாக்டர் மு.வ. நாவல்களின் முடிவு நிலைகள் பெரும்பாலும் கதையின் போக்கையொட்டியனவாகவே அமைந்திருந்தபோதிலும் சில கதைகளின் முடிவுகள் பாத்திரத்தின் போக்கையொட்டி-சமுதாயத்திற்கு உணர்த்தக் கருதும் சிந்தனையின் உருவகத் தன்மையதாய் அமைந்துள்ளன. பாத்திரங்கள் மன உணர்வுகளை நுணுக்கமாக வெளியிடும் திறத்தில் ஆழ்ந்த பார்வையைச் செலுத்தவில்லை என்று குறை கண்டாலும், டாக்டர் மு.வ. வைப் போல் அளப்பரிய சிந்தனைகளை நாவல் வரலாற்றில் கலைப்பாங்கோடு வழங்கியவர் மிகச் சிலரே.
அகல் விளக்கில் இடம்பெறும் சந்திரன் உணர்ச்சியின் உருவகம். எந்த முடிவுகளையும் சிந்தனையில் உராய்ந்து பார்க்கின்ற அமைதியற்றவன். அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டவன். அவன் வாழ்க்கையின் முடிவை உரைக்கும் வகையில் சமுதாயத்திற்கு உரைக்க விரும்பிய கருத்தைக் கதையின் முடிவில் உணர்த்திச் செல்கிறார் மு.வ.
"இடுகாட்டிலிருந்து திரும்பிய போதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன் "டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும்; உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு உன் விருப்பம் போல் ஆடமுடியாது, தெரிந்து கொள்" என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டக்காரரின் ஆரவாரம் கேட்டுக் கொண்டிருந்தது!"91 (அகல் விளக்கு).
ஒரு மனிதனிடம் உணர்ச்சி தலைமையேற்றால் அறிவு தூங்கும்; அறிவு தலைமையேற்றால் உணர்ச்சி ஆற்றுப்படும். இக் கருத்தினை உணர்த்த விழைந்த மு. வ. கதைப் பின்னலையொட்டி, உருவகப்போக்கில் காட்சியமைத்துச் சமுதாயத்திற்குச் சொல்ல விழைந்த கருத்தைக் கலைப்பாங்கோடு கதையின் முடிவிலே அமைத்துள்ளார்.
உத்திகள் (நோக்குநிலை)
படைப்பிலக்கியம் என்பது சமுதாயத்தின் பயன்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் உரியதாக வேண்டுமென்று கருதியவர் டாக்டர் மு. வ. என்பதை முன்னரே குறித்தோம். எனவே கருத்து இழைக்கப்படுவதெனில், கலைப்பாங்கை சிதைக்காவண்ணம் சில உத்திமுறைகளைக் கையாள வேண்டும். உத்திமுறை என்பது படைக்கப் பெறுகின்ற படைப்பின் தன்மையைப் பொறுத்து அமைவதாகும். கதைக்கும் புதினத்திற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டும் கலை உத்தி எடுத்துரை முறை ஆகும். இதனை நோக்குநிலை என்பர். இது படைப்புத்திறனின் தலைவாயில் ஆகும். இந்நோக்குநிலையை, அகநோக்குநிலை, புறபோக்குநிலை என்று திறனாய்வாளர்கள் பிரித்துக் காண்பர். டாக்டர் மு. வ. தம் நாவல்களில் ஆறுவகையான உத்திமுறைகளைக் கையாண்டுள்ளார்.


1. தலைமை மாந்தர் தற்கூற்றுப்போக்கில் அமைந்தவை; அல்லி, நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை.
2. தலைமை மாந்தர் மாறி மாறிக் கதையை எடுத்துரைப்பது: கள்ளோ? காவியமோ?
3. கதை மாந்தருடன் நேரடி தொடர்பு கொண்டோர் கதையை எடுத்துரைக்கும் பாங்கின: அகல் விளக்கு, வாடாமலர்.
4. துணைமாந்தர் கதை கூறுவதுபோல் அமைந்தன: மலர்விழி, கரித்துண்டு.
5. கதைமாந்தர் பலரும் மாறிமாறிக் கதையை உரைப்பது : செந்தாமரை.
6. ஆசிரியர் கூற்றில் - படர்க்கைக் கூற்றில் அமைந்தவை : பாவை, பெற்ற மனம், கயமை.


இந்நோக்கு நிலைகள் டாக்டர் மு. வ. வின் நாவல்கள் வெறும் கருத்துரைப் படைப்புகள் என்ற கருத்தையே மாற்றவல்ல கலைக்கூறாய் அமைந்துள்ளன.
நாட்குறிப்பும் கடிதமும்
டாக்டர் மு. வ. இரு நோக்குநிலையில் தம் நாவல்களைப் படைத்திருந்த போதிலும், கலைத்திறனை  வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் பாத்திரங்களின் மன அசைவுகளையும், உணர்வு வெளிப்பாட்டுச் சிக்கலையும் வெளிப்படுத்த நாட்குறிப்பு உத்திமுறையையும் கடித உத்திமுறையையும் கையாண்டுள்ளார். சமகாலப் படைப்பாளர்கள் என்ற நோக்கில் அணுகும்போது அறிஞர் அண்ணா குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்ற நாவலை நாட்குறிப்பு உத்திமுறையிலும், மறைமலையடிகள் 'கோகிலாம்பாள் கடிதங்கள்' என்ற நாவலை கடித உத்திமுறையிலும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கனவாகும். மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதத்தில் கொண்ட உத்திமுறை சில இடங்களில் கலைத் தன்மையைச் சிதைத்துள்ளது என்பாருமுளர். ஆனால் மு. வ. 'அல்லி’, ‘கரித்துண்டு' ஆகிய நாவல்களில் கையாண்டுள்ள நாட்குறிப்பு, கடித உத்திமுறைகள் அவர், தம் படைப்பாற்றலை உயர்த்துவனவாய் உள்ளன. 'அல்லி', எனும் நாவல் பாலியல் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டதாகும். அல்லி மனவோட்டத்தையும், வாழ்க்கைப் போராட்டத்தையும், பாலுணர்வுச் சிக்கலையும், புற நோக்குநிலையிலிருந்து - ஆசிரியர் எடுத்துரைப்பதாக நாவல் அமைந்திருக்குமானால், அது விமர்சனத்தன்மையதாகப் போயிருக்கும். ஆனால் டாக்டர் மு. வ. அகநோக்கு நிலையில் அல்லியே உரைப்பதாக அமைத்துள்ளார். இந் நோக்குநிலை நாவல் கலைத்தன்மைக்கு உணர்வூட்டியுள்ளது. அல்லியின் அண்ணன் பாலுணர்வால் பாதிக்கப் பெற்றவன். அல்லியிடம் தன் பாலுணர்வுச் சிக்கலை வெளிப்படுத்தப் பண்பாட்டு வழிவந்த உறவுமுறை தடுக்கிறது.
அல்லியின் பார்வையிலிருந்து இந்நாவல் எடுத்துரைக்கப் படுகின்ற காரணத்தால் - சோமுவின் அக உணர்வை - பாலுணர்வுச் சிக்கலைத் தீர்க்க நாட்குறிப்பு உத்தி முறையைக் கையாண்டுள்ளார். நாட்குறிப்பின் வழியே
'அல்லி' சோமுவின் அகச்சிக்கலை ஆழ்ந்து நோக்குவதற்கு வாயிலை ஏற்படுத்தியுள்ளார். 'சோமு’ உயிரோடு இல்லாத காரணத்தால், அல்லி நாட்குறிப்பு வழியே அவுன் உணர்ச்சியை அறிவதாகக் கதைப்பின்னலை அமைத்தமை மேலும் 'அல்லி'யில் கலைத்திறனை உயர்த்தியுள்ளது. அவ்வாறே 'அல்லி'யில் இடம்பெறும் 'இன்பவல்லி’ யின் மனப்போராட்டத்தைக் கடித உத்தி மூலம் புலப்படுத்தியுள்ளமை மு. வ. வின் கலைத்திறனுக்கு ஒரு முத்தாய்ப்பு என்றே கூறலாம். அகநோக்கில் அமைந்த 'அல்லி'யில் உள் அகநோக்குநிலை உத்திமுறைகளைப் பயன்படுத்திப் பண்பாட்டு அடிப்படையிலும், உளவியல் பாங்கிலும் கதைப்பின்னலை உருவாக்கியிருக்கும் திறன் வியக்கத்தக்கதாகும்.
மு. வ. வின் கலைமேம்பாட்டுப் படைப்பாகக் கருதப்படும் 'கரித்துண்டு' நாவலில் சிறையில் மோகன் தன் கதையைச் சொல்வதாகவும், கடிதத்தின் மூலம் நிர்மலா எழுதுவதாகவும் அமைத்திருக்கும் போக்கு நோக்கு நிலையைக் கையாளும் நுண்மாண் தன்மையைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.
தலைப்பு உத்தி (குறிப்புத்திறன்)
கதை மாந்தர்களின் பண்புநலன்களையொட்டி அவர்களுக்குப் பெயரிட்டுக் குறிப்பால் உணர்த்துவதைப் போல் சமுதாயப் போக்கையொட்டித் தம் நாவல்களுக்குப் பெயர் வழங்கியுள்ளார். நாவல்களுக்குத் தலைப்பிடுதல், பாத்திரங்களுக்குப் பெயரிடுதல் ஆகியவற்றுள் குறிப்புத் திறனைப் புலப்படுத்தியுள்ளமைபோல் டாக்டர் மு. வ. கதைப்பின்னலையொட்டி, சில காட்சிகளைப் படைத்துக் காட்டி அவற்றினுள்ளும் குறிப்புப் பொருளை ஆழ்ந்து நோக்குவோர் உணரும்வண்ணம் படைத்துள்ளார்.
குறிப்புப் பொருளின் ஆழ்திறத்தை நன்கு வெளிப்படுத்தும் டாக்டர் மு. வ. வின் நாவல்கள் கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடாமலர் ஆகியன. சமுதாய நிலையை உருவகப்போக்கில் குறிப்பால் உணர்த்தி உள்ளவை கள்ளோ? காவியமோ!, மண்குடிசை ஆகும். இத்தகைய குறிப்புத்திறன் நாவல்களின் கலைத்திறனுக்கு அணிசேர்த்துள்ளன.
நெஞ்சில் ஒரு முள்
நெஞ்சம் உள்ளவர்கள் வாழ்வில் ஒருநாள் செய்து விடுகின்ற தவற்றுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவதுண்டு. அத்தவறு அவர்களின் நெஞ்சில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருப்பதுண்டு என்பதை - மனச் சான்றினரின் உளப்போக்கைச் சித்திரித்துக் காட்டுவதே ‘நெஞ்சில் ஒரு முள்'. அந்நாவலுக்கு வழங்கியிருக்கும் பெயரே குறிப்புப் பொருளை நன்கு புலப்படுத்துகிறது. 'வடிவு' என்னும் பெண் மணமான பின் பழைய காதலனிடம் தவறி விடுகிறாள். ஒருமுறை செய்கின்ற தவறு பல தவறுகளுக்கு நியாயங்களை உருவாக்கி விடுவதுண்டு. ஆனால் 'வடிவு' செய்த தவறு அவள் நெஞ்சத்தை உயர்த்தி விடுகிறது. எச்செயலிலும் ஒன்றிச் செய்கின்ற மனப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறாள் வடிவு. அவளின் நெறியாலே அவள்தன் கணவன் அகோரமும் மனம் மாறுகிறார். இல்லம் சிறக்கிறது. வாழ்க்கையின் போக்கை மாற்றி, நெறியாளாய்ச் சிறந்தபோதும், முன்பு செய்த தவறு முள்ளாய் உறுத்துகிறது. காலப்போக்கில் அறவாழி எனும் அறவோரால் 'வடிவு 'அமைதி பெறுகிறாள்.
அக்கதையில் இடம்பெறும் விஜயா, இந்திரா இருவரும் தவறி விடுகிறார்கள். விஜயா அம்மையார் தாம் இளமையில் செய்த தவறை எண்ணி வருந்துகிறார். தம் கணவர் மீது வைத்த அன்பில் களங்கமின்றி வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர்தம் புதல்வி இந்திரா தவறு என்பதை ஒரு குற்றமாக எண்ணாமல் நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறாள். ஆடம்பரத்தில் நிறைவு கண்ட 
இந்திரா வாழ்வின் முடிவில் கணவனை இழந்து தன்னிலை இழந்து இறக்கிறாள். 
மனச்சான்றின்றி வாழும் மனிதர்கள் வாழ்க்கையில் போராடித்தான் முடிவெய்துகின்றனர் என்ற கருத்தினை டாக்டர் மு. வ. 'நெஞ்சில் ஒரு முள்'ளில் குறிப்புத்திறனால் வெளியிட்டுள்ளார். 
மண்குடிசை
'இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளை தோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்ட வெளியில் திரிய வேண்டும். அல்லது ஒழுங்கான கல்வீடு கட்டி வாழ வேண்டும். அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது.' (மண்குடிசை, ப. 503)
மண்குடிசையையும், கல்வீட்டையும் சுட்டிக் காட்டுவதோடு, சமுதாயத்தின் சீர்கேட்டையும் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. டாக்டர் மு. வ. கலைஞராகக் காட்சியளிப்பதோடு சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையாளராகச் சிறக்கக் காண முடிகிறது. 
உரையாடல் உத்தி

நாவலாசிரியர்கள் நோக்குநிலையுடன், படிமக்காட்சிகள், சிறப்புச் சொல்லாட்சிகள், தொகையுரை, நினைவுக் காட்சிகள், வருணனை ஆகியவற்றை எடுத்துக்காட்டி, கதையின் போக்கைக் குறிப்பால் உணர்த்திச் செல்வதுண்டு.
 டாக்டர் மு. வ. கதைப்போக்கை- கதையில் நிகழப் போகும் மாற்றத்தைக் குறிப்புப் பொருள் வாயிலாகவும் இயற்கைக் காட்சிகளைச் சுட்டுவதன் வாயிலாகவும், பாத்திரங்களின் உரையாடல்கள் வாயிலாகவும் உணர்த்திச் செல்வதுண்டு. அகல்விளக்கில், முன் முரண் பாத்திரமாகப் படைக்கப் பெற்ற சந்திரன் நெறியிலே மாற்றம் ஏற்படப் போவதையும், சீர்கெட்டுவிடப் போவதையும் சாமண்ணாவின் கருத்துரை வாயிலாக உணர்த்திச் செல்கிறார்.
'பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும். சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம், இப்படிப் படிப்படியாகக் கெட்டுப் போய்க் கடைசியில் ஒட்டாண்டியாவதற்கு வழிதேடிக் கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா'23  (அகல் விளக்கு) என்னும் உரையாடல் வாயிலாக ஒழுக்கத்தின் வடிவமாக இருந்த சந்திரன்' பின்னால் காதலால் சீரழிந்து திசைமாறித் தொழுநோயாளனாக மாறிடும் அவலத்திற்கு ஆளாகிறான். 
(அகல் விளக்கு).
நிகழ்ச்சி உத்தி
நாவலாசிரியர்கள் கதைத் தொடர்பான உணர்வையோ, கதை முடிவையோ, பாத்திரங்களின் போக்கையோ, கதையில் நிகழப்போகின்ற மாற்றத்தையோ உணர்த்தக் கதைப் பின்னலையொட்டிச் சில நிகழ்ச்சிகளைக் காட்டிச் செல்வர். இத்தகைய நிகழ்ச்சி உத்திகள் கதைப் பின்னலுக்கும் பாத்திரப் படைப்புக்கும் விலகி நின்று எடுத்துரைக்கப்படுமானால், கலைப்பாங்கின் கட்டுக் கோப்பையே குலைப்பதாகிவிடும். டாக்டர் மு. வ. பாத்திரத்தின் போக்கையும் பண்பையும் மற்றப் பாத்திரம் உரைப்பதாக அமைத்துக் காட்டாமல், நிகழ்ச்சிகள் வாயிலாக குறிப்புப் பொருள் தோன்றக் காட்டியுள்ளார்.
அகல் விளக்கில் வரும் சந்திரன் உணர்ச்சியின் வார்ப்பாகவே விளங்குபவன். அவன் எந்தப் பிரச்சனையையும் அமைதியான அணுகுமுறையாலே தீர்த்துக்கொள்ள முடியாத போக்கினனாக அமைந்த நிலையை உணர்த்த விரும்பிய மு. வ. காட்சி ஒன்றின் மூலம் குறித்துச் செல்கிறார்.
வீட்டுத் திண்ணைமேல் ஏறி நின்றுகொண்டு காற்றாடியைச் சிறிதுவிட்டுப் பார்த்தேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது... அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணிலுள்ள வீட்டின் முன்புறத்தில் உள்ளது. திகைத்துக் கொண்டிருந்தபோது, முன்கண்ட அந்தப் பையன் வெளியே வந்து, "காற்றாடியா? கிளயில் அகப்பட்டுக் கொண்டதா?" என்று சொல்லி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிரக் காற்றாடி வரவில்லை. எனக்குக் கோபம் வந்தது. "யாரடா நீ? உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத் தெரியாதா?" என்று உரக்கச் சொல்லி "மடையன், கழுதை" என்று என்க்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து "என்ன அப்பா இது?” என்றார்கள். ஒன்றும் இல்லை அத்தை காற்றாடி சிக்கிக் கொண்டது; இழுத்தேன். நூல் அறுந்து விட்டது" என்றான்.

இத்தகைய நிகழ்ச்சி உத்திகளால் மட்டுமின்றி, வருணனைகள் மூலமும் கலைநுணுக்கங்களைக் கொண்டு தம் படைப்புகளுக்குக் கலைத்திறனை உருவாக்கியுள்ளார்.
 
வருணனை
நாவலாசிரியரின் கலைத்தன்மையையும் காவியத்தன்மையையும் வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியும் கூரிய நோக்கும் வாய்ந்த ஒரு கூறாகும் வருணனை. இயற்கை வழிப்பட்ட நெஞ்சினரான டாக்டர் மு. வ. தம் நாவல் களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயற்கை வருணனைகளை உத்திகளாகப் பயன்படுத்தியுள்ளார்.
இயற்கை வருணனை
டாக்டர் மு.வ. வின் வருணனை இயற்கைக் காட்சியைக் காட்டும் எழில் வருணனையாக மட்டுமன்றி, நாவலில் இடம் பெற்றுள்ள பாத்திரத்தின் எண்ண வருணனையாகவும் அமைந்துள்ளது.
"அந்தப் பனைமரத்தில் அணில்கள் இரண்டு ஆடி விளையாடிக் கொண்டிருந்தன."
"மைனா இரண்டு அந்தப் பனைமரத்தில் வந்து உட்கார்ந்து ஏழிசையும் பாடின. "
"அந்தக் குருவிகள் இரண்டு இரண்டாய் - இணை இணையாய் நிலத்தில் உள்ள புழு பூச்சிகளைக் கொத்திக் கொண்டிருந்தன."
"மறுபடியும் வண்ணாத்திக் குருவிகள் வந்து குதித்துக் குதித்து நிலத்தைக் கொத்திக் கொத்தி ஆடின." (பாவை)
பாத்திர வருணனை
"வழுக்கைத் தலையும் குழிவிழுந்த கண்களும் அவர் தொழிலிலிருந்து ஒய்வு பெற இன்னும் இரண்டே ஆண்டுகள் இருந்தமையால், 'எப்படியாவது போகட்டும்! என்ன செய்வது?’ என்ற தத்துவப் படியை அடைந்தார்."
இது 'கயமை’ எனும் நாவலில் இடம்பெற்ற 'வெங் கோபர்’ என்ற பாத்திரம் குறித்த வருணனை.  இவ்வருணனை ஒரு மனிதனின் - வாழ்க்கையின் - பணியின் முடிவுரையாகவே உள்ளது.
நிலை வருணனை
"இந்த வாசற்படியில் வீணுக்குச் செலவாகியுள்ள குங்குமம் முதல் அங்கே உலர்ந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை வரையில் எல்லாம் அவளுக்குச் சுற்றுப்புறத்தார் தரும் மதிப்புக்காக இருப்பவை" (செந்தாமரை).
பாத்திரத்தின் மனப்போக்கை வருணிப்பதாகயிருந்த போதிலும், சமுதாயப் போக்கிலே - நடைமுறை வழக்கங்களிலே காண வேண்டிய மாற்றம் குறித்து மறுமலர்ச்சி இழையோட்டச் சிந்தனையையும் வெளியிடுவதாக அமைந்துள்ளது.
சிந்தனைகளின் திடத்தன்மையைப் பெற்றவைகளாக டாக்டர் மு.வ.வின் நாவல்கள் விளங்கியபோதிலும் அச்சிந்தனைகள் அனைத்தும் வெறும் கருத்துப் பிரச்சாரம் என்றோ நீதி நாவல் என்றோ வகுத்துக் காண்கின்ற அளவுக்குக் கலைத்தரம் மெலிந்த தன்மையோடு வெளியிடப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது. படைப்பு எல்லையில் நின்றே பல்வேறு உத்திமுறைகளைக் கையாண்டு படைப்பையும், படைப்பின் கருத்தையும் வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார் டாக்டர் மு. வ.
நடை

டாக்டர் மு. வ. வின் கலைப்படைப்புகளுக்கும், கருத்துப் படைப்புகளுக்கும் மக்கள் மன்றத்திலிருந்து அறிஞர்கள் மன்றம் வரை மகத்தான வரவேற்பினைப் பெறச் செய்தது, அவர்தம் நடை ஆகும். கலைத்திறனும், கருத்துப் பொழிவும், நடைத் தன்மையுமே அவர்தம் படைப்புகளுக்கு அணிசேர்த்த கூறுகளாகும்.
 தெளிந்த சிந்தனையே தெளிந்த கருத்தோட்டத்திற்கு மூலமாகிறது. தெளிந்த கருத்தோட்டத்தின் கலைத் தன்மையே தெளிந்த நடையாய்ச் சிறக்கிறது. டாக்டர் மு. வ. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிந்த கண்ணோட்டமுடையவர் என்பதை அவர்தம் படைப்பிலக் கியங்கள் அறிவுறுத்தக்  காணலாம். கருத்துகளின் நீர்மையை அவர்தம் நடை புலப்படுத்தக் காணலாம்.
நாவல் என்பது இன்றைய வாழ்க்கையின் நடப்பியல் சித்திரமாகும். இத்தகைய கலையில் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கவல்லவரே தலைசிறந்த நாவலாசிரியராக விளங்க முடியும். சமுதாய நோக்கு என்பது சமுதாயத்தின் நிலையைக் கூர்ந்து நோக்குவது மட்டுமன்று; சமுதாயத்திலுள்ள மக்களின் உயிர்ப்பான நடையைக் கூர்ந்து நோக்குவதாகும். அப்போதுதான் நாவல் படைப்பு என்பது உயிர் இணைந்த உடலுக்கு உணர்வைத் தருவது போன்றதாகும். மாவல்களில் இருவகை நடையைக் காணலாம். ஒன்று ஆசிரியர் நடை, மற்றொன்று பாத்திரங்களின் நடை. ஆசிரியர் நடை என்பது இயல்பாக அமைந்த தனித் தன்மையைப் புலப்படுத்துவதாகும். பாத்திரங்களின் நடை என்பது நாவலாசிரியர் கலைத்திறனையும் சமுதாய ஆழமான ஈடுபாட்டையும் புலப்படுத்துவதாகும். தமிழ் நாவலாசிரியர்களுள் தனிப்பாங்கோடு திகழ்பவர் டாக்டர் மு. வ. எளிய தொடர்கள், தெளிந்த சிந்தனையின் கருத் தொட்டம், குறிப்பால்-உவமை, உருவகம் முதலியவற்றால் உணர்த்துதல் ஆகியவை டாக்டர் மு. வ. வின் தனிச்சிறப்புகள் ஆகும்.
எளிய நடை

அரிய பொருளையும் எளிதில் விளக்க வல்லவர் டாக்டர் மு. வ. என்பதை எளிய சொல்லாட்சிகளும், சிறிய சிறிய தொடர்களும் நன்கு விளக்குகின்றன.
 நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும். ஒன்று நம் உள்ளம். மற்றொன்று உடம்பு; மூன்றாவது சுற்றுப்புறம்... நாம் விரும்பினால் உள்ளத்தை முழுவதும் நன்றாக வைத்திருக்க முடியும்; ஆனால் எல்லாரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப்புறத்தை நன்றாக அமைக்க முடியும்’  (வாடாமலர் 175.176)
பாத்திர கடை (உருவக நடை)
நாவலில் இடம்பெறுகின்ற பாத்திரங்களின் உரையாடல் வழியே வெளிப்படுகின்ற நடை என்பது அப்பாத்திரங்கள் வளர்ந்த, வாழ்கின்ற சூழலையும், பண்பு நலத்தையும் பொறுத்து அமைவதாகும். டாக்டர் மு. வ. சமுதாயத்தின் பல்வகை மாந்தரையும் காட்ட முயன்றுள்ளார்.
"நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு. வேண்டிய களாக்கனி எங்கே?" என்று சுமை உந்துவண்டி ஒட்டுநர் (லாரிக்காரர்) பேசுவதாக அமைந்த நடையில் உருவகம் நின்று பயில்வதோடு, சமுதாயத்தின் வழக் காற்றோடு - பாத்திரப் படைப்புக்கு ஏற்புடையதாய். அமைந்த பாங்கினைக் காண முடிகிறது.
உவமை
'உவமை' என்பது இலக்கியக் கூறாகக் கருதத்தக்கதாக அமைந்திருந்த போதிலும், டாக்டர் மு. வ. வின் நடையில் விரிந்து காணத்தக்கதாகும்.
டாக்டர் மு.வ. வின் நாவல்களில் பயின்று வருகின்ற உவமைகள் அலங்காரத் தன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கியக்கூறாக விளங்கவில்லை; புன்மை நிறைந்த சமுதாயத்தின் புழுதிநிலையைச் சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதாகவும், பாத்திரங்களின் உணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும், படைப்பாளரின் நோக்கத்தை வாழ்க்கை நெறி விளக்குவதாகவும் டாக்டர் மு.வ. வின் உவமைகள் விளங்குகின்றன. பண்பாட்டின்- வெளிப்பாட்டையும், உளவியல் தன்மையையும் பழமொழியின் தாக்கத்தையும், இயற்கை மன ஒருமைப்பாட்டையும், மொழி இன இலக்கிய உணர்வின் ஆழத்தையும், காந்தியத் தின் தாக்கத்தையும் படைப்பாளரின் மன உணர்வையும், வாழ்க்கையின் பின்னணியையும், வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து நோக்கிய பார்வையையும், கலையின் தேவையையும் அவருடைய உவமைகளிலே காண
முடிகிறது.
இயற்கையின் நியதி உவமை
டாக்டர் மு. வ. புரட்சிகரமான கருத்துகளால், சமுதாய மறுமலர்ச்சியில் நம்பிக்கை கொண்டவராக விளங்கியபோதிலும், இயற்கையின் நியதிகளுக்கு உடன் பட்டவர் என அவருடைய உவமைகள் உணர்த்துகின்றன.
“எல்லா மரமும் வாசற்காலாக, கதவாக, கூரைக் கழியாக ஆகமுடியாது. சில மரங்கள்தான் அப்படி அமைந்து வீட்டை உருவாக்கிக் காக்க முடியும். மற்றமரங்கள் வெயிலில் உலர்ந்து தீயில் வெந்து கரியாகத்தான் வேண்டும். பிறக்கும் பெண்கள் எல்லாம் குடும்பத் தெய்வங்களாக வாழ்ந்து விளங்க முடியாது. சிலர்தான் நெறியுள்ள மனைவியாக முடியும். சிலர்தான் அன்புருவ மான தாயாக முடியும். மற்றவர்கள் கண்டவர்களின் கையில் சிக்கிக் காமத்தியில் வெந்து கருக வேண்டியது.தான்'. (கயமை, ப. 192)
சமுதாய எதிரொலி உவமை
அங்கதத் தன்மையில் இயற்கையின் நிலையைக் குறிப்பிடும் போது, சமநிலையில்லாச் சமுதாயச் சீர்கேட்டைப் புலப்படுத்துகிறார் டாக்டர் மு. வ. சமுதாயமே. கலையின் நோக்கமெனக் கொண்டிருந்த டாக்டர் மு. வ. படைப்புகளின் கருவால், கருத்தால் மட்டுமின்றி, நடையாலும் சமுதாயத்தின் அவலத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
"பிறர்க்கு ஒரு பயனும் இல்லாமல் அழகாக, உடம்பை வளர்த்துத் தூங்கும் வட்டி வாங்கிகளைப் போல் மேற்கு நாட்டுக் குரோட்டன் என்று சொல்லப்படும் சில செடிகள் பலநிற இலைகளோடு வளர்ந்து தோட்டக்காரனுடைய உழைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தன" . (பெற்ற மனம், ப. 6)
எளிய உவமை
பாத்திரங்களின் உணர்வைப் புலப்படுத்த, ஆழமான மன அசைவுகளை வெளிப்படுத்த, நிலைகளை உயர்ப்பித்துக் காட்ட எளிய உவமைகளைப் பயன்படுத்தியுள்ள பாங்கு போற்றத்தகுந்த கலைக் கூறாகும்.
"நேராகக் குழாயில் வரும் தண்ணீரைக் கையால் அடைக்க முயலும் நாற்புறமும் தண்ணீர் சிதறிக் குழந்தையின் சொக்காயை நனைப்பதுபோல், அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்த கவலை நேரே வராமல் சுற்றிச் சுற்றி வெளிப்படுவதைத் தெரிந்து கொண்டேன்" . (மலர்விழி, ப. 47)
பாமரர் நடை
'அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டனத்துக்கு' என்று கிழவி கூறியதும், 'போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருத்தால், கொழுத்துப் போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்துவிடும். அதுவும் பெரிய வீட்டுப்பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை' என்று கிழவன் மறுமொழி கூறினான். உடனே கிழவி 'இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள். உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயோ ?” என்றாள். 
இது அகல்விளக்கின் கதைத்தலைவன் 'சந்திரன்’ குறித்தும், சமுதாயச் சூழல் குறித்தும் கிழவன், கிழவி. இருவர் உரையாடுவதாக அமைந்த உரையாடல். இந்த உரையாடலில் பாமரமக்களின் மனப்போக்கிற்கு ஏற்ற வண்ணம் சொற்களைக் கையாண்டு சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலித்துள்ளார் டாக்டர் மு. வ.
பாமரர் நடையில் உள்ள உயிரோட்டத்தைக் காட்டியுள்ளதைப்போல், படித்தவர் நடையில் அமைந்த பிற மொழி விரவல் தன்மையைப் பாத்திரங்களின் நடையில் காட்டியுள்ளார். (அகல்விளக்கு-வேலய்யன்). குறிக்கோள் பாத்திரங்களாகப் படைத்துள்ள அறவாழி, அருளப்பர் போன்ற நடையில் மேற்கோள் நடையையும் காண முடிகிறது. எளிமை, தெளிவு, திட்டம், நுட்பம் சார்ந்த நடையாலே டாக்டர் மு.வ.வின் கலைப்படைப்பு செம்மை பெற்றுள்ளது. உவமை, உருவகம் போன்ற இலக்கியக் கூறுகள் சார்ந்த நடையை ஆசிரியர் நடையிலும் பாத்திரங்களின் நடையிலும் அமைத்து, தனித்தன்மையும், படைப்புக்கு உயிர்ப்புத்தன்மையும் உருவாக்கியுள்ளார். சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவதிலும், குறியீடுகளைப் (Punctuation) பயன்படுத்துவதிலும், சில நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளமை ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். இலக்கணப் பார்வையிலிருந்து குறிக்கும்போது, ஒரு, ஓர்அல்ல அன்று, இவைகளைப் பயன்படுத்தும்போது, இலக்கண நெறிகளுக்குச் சிறப்பிடம் அளிக்காமல், மக்களின் வழக்குத் தன்மைக்கு ஏற்றவாறு படைப்பிலக்கியங்களை உருவாக்கியுள்ளார். சமுதாயம், கருத்து என்ற கோணத்தில் நடையை அமைத்துப் படைப்பிலக்கியத்தில் வெற்றி கண்டுள்ளார். தமிழ் உரைநடை வரலாற்றிலே மறைமலையடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா ஆகியோருக்குத்தனித்தனியான முத்திரையிருப்பதைப்போல் டாக்டர் மு.வ. விற்கும் சிறப்பிடம் உண்டு. படிக்கத்தூண்டும் எளிமை, தெளிவு, திட்பம் இம்மூன்றுமே டாக்டர் மு. வ. வின் நடைச்சிறப்பாகும். படைப்பாளர் என்பவர் காலத்தின் எதிரொலியாக விளங்குபவர். டாக்டர் மு. வ. இருபது நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களின் தாக்குரவைப் பெற்றவர். ஆனால் மரபுவழிப்பட்ட சிந்தனைகளுக்கே தாம் ஒரு முகவர் என்று கருதாமல், நவீன இலக்கிய வடிவத்தில் சமுதாயத்தைச் சிந்தித்தது குறிப்பிடத் தகுந்ததாகும். 'நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ. சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல் அமைதியாக ஒரு மூலையில் இருந்து மக்களின் வாழ்க்கையைக் கண்டு உணர்ந்து அந்த அடிப்படையைக் கொண்டு கதைகள் எழுதுவோர் உண்டு. உண்மையை நோக்கினால் அரசியல் கொந்தளிப்பு, சீர்திருத்த வேகம் முதலியவை சமுதாயம் என்னும் கடலின் மேற்பரப்பில் காணும் அலைகளும் ஆரவாரங்களும் ஆகும். குமுறும் கடலின் அடிப்பகுதி பெரும்பாலும் அமைதியாக இருப்பது போலவே சமுதாயத்திலும் குடும்ப இன்ப துன்பம் முதலியவை என்றும் போல் உள்ளன. அவற்றைக் கண்டு உணர்ந்து சொல்லோ வியமாக்கித் தரும் கலை உள்ளம் சிலர்க்கு இயல்பாக அமைகிறது' (தமிழ் இலக்கிய வரலாறு, ப. 291) என்னும் அவர்தம் கூற்றுக்கிணங்க டாக்டர் மு.வ. சமுதாயத்தின் மேற்பரப்பிலிருந்து அடிப்பகுதியின் சிக்கல்கள் வரை - தம் படைப்புகளில் கருப்பொருளாகவும் கருத்துப்பொருளாகவும் ஆக்கிக் கலைப்பாங்கோடு வழங்கியுள்ளார். அவர்தம் புதுமைச் சிந்தனைகள் புதியதொரு சமுதாயப் பார்வை கொண்டதாய் அமைந்துள்ளன. காலத்திற்கேற்றாற்போல் மனிதனின் வாழ்க்கை முறைகள் மாற்றம் காண வேண்டும்; அந்நிலைக்குத் தடையாக மரபு, பண்பாடு என்பவை விளங்கினால் அவற்றை உடைத்தெறிவதில் தவறில்லை என்று கருதினார். அந்நோக்கில் தம் கருத்து களுக்குக் கலைவடிவம் வழங்கியுள்ளார். வள்ளுவரையும், திருமுலரையும், தாயுமானவரையும், விவேகானந்தரையும், இராமதீர்த்தரையும், பாத்திரங்கள் வழியே நினைவுகூர்ந்து தமிழ் நாவல் வரலாற்றில் டாக்டர் மு. வ. ஒர் அற நாவலாளராகத் (Novelist of Ethics) தோன்றிய  போதிலும், சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியினரின் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் அணுகிப் பார்ப்பதில் ஒரு சமுதாயக் கலைஞராகவே விளங்கியுள்ளார்.
டாக்டர் மு. வ. படைப்பிலக்கியப் பரப்பில் அகல உழுதவர் அல்லர்; ஆழ உழுதவர். பரப்பைச் சுருக்கிக் கொண்டபோதிலும் பார்வையை ஆழமாக்கிக் கொண்டவர். அவர்தம் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனை அறக் கண்ணோட்டத்தோடு ஆன்மிகப் பார்வை இணைந்திருந்ததோடு, உலகப் பார்வையோடு ஒட்டிச்செல்கின்ற புதுமையும் கொண்டதாகும். அவர்தம் கலைகள் நிகழ் காலத்தின் விளைச்சல்கள்; கருத்துகள் எதிர்காலத்தின் விதைநெற்கள் எனல் பொருந்தும்.
சமுதாய நோக்கும், கலைத் தரமும் கெழுமிய மு. வ. வின் நாவல்களில் வழங்கப்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் பாத்திரப் படைப்புகளுக்கேற்பவும், உரையாடல் உத்திமுறை வழியும் நாவல் கட்டுக்கோப்பின் எல்லையிலிருந்தே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நோக்கு நிலையில் கதையைச் செம்மையுற அமைத்த டாக்டர் மு.வ. பண்பாட்டு அடிப்படையில் மரபுகளையொட்டி நாட்குறிப்பு, கடிதம் உத்தியைக் கொண்டு பாத்திரங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் திறன் வியக்கத் தகுந்ததாகும். நாவலில் அமைந்துள்ள ஆசிரியர் நடையில் தெளிவையும் எளிமையையும் அமைத்து, பாத்திரங்களில் நடையில் உணர்வுகளின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தித் தம் நாவல்களுக்குக் கலை நலம் சேர்த்துள்ளார் டாக்டர் மு.வ. 
சிறுகதைப் பணி
நாவல் இலக்கிய உலகில் தமக்கென்று அழியாத தீர் இடத்தை வகிக்கும் மு. வ. சிறுகதைத்துறையிலும் தம் கலையுணர்வினைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். நாவல் படைக்கும் முன்பாகவே அவர் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். 1939 ஆம் ஆண்டில் 'சிறுவர்களுக்கான கதைகள்' என்னும் வரிசையில் ஆங்கிலக் கதைகளின் தழுவலாகச் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகள் மற்றும் பிற கதைகள் 3 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. சிறுவர்களுக்கென்று அல்லாமல் பொதுவாக எல்லோருக்கும் உரிய சிறுகதை களையும் மு. வ. படைத்துள்ளார். நாவல், சிறுகதைத். தொகுதி இரண்டும் ஏறத்தாழ சமகாலத்திலேயே வெளி வந்துள்ளன.
மு. வ. வின் சிறுகதைத் தொகுதிகள்
மு. வ. வின் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக அமைந்துள்ளன. 'விடுதலையா?' 'குறட்டை ஒலி' என்பன அவ்விரு தொகுதிகளாகும். அத்தொகுதிகள் முறையே 1944, 1953 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. 'விடுதலையா?' என்னும் முதல் சிறுகதைத் தொகுதியில் 'விடுதலையா?’, 'தேங்காய்த் துண்டுகள்’, ‘வாய் திறக்க மாட்டேன்’, “எதையோ பேசினர்’, ‘கட்டாயம் வேண்டும் , 'எவர் குற்றம்' ஆகிய ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதைத் தொகுதி தமிழ் வளர்ச்சிக். கழகத்தின் பாராட்டினைப் பெற்றது.
மு. வ. வின் மற்றொரு சிறுகதைத் தொகுதி 'குறட்டை ஒலி'. இதன் கண் பதினொரு சிறுகதைகள் உள்ளன. அந்த மனம் வருமா? சுடரின் நகைப்பு, இறந்த சிற்றப்பா, அமாவாசையார், எல்லோரும் சமம், யாரோ தெரியாது, உலகம் பொய், குறட்டை ஒலி, வாழும் வழி, இயற்கை பொல்லாதது, அக்கரைப் பச்சை என்பன அக்கதைகளின் பெயர்களாகும். இத்தொகுதி  'Sound of Smore' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொகுதிகளிலும் உள்ள கதைகளுள் பல அவ்வப்போது எழுதப்பட்டவை; சில அவ்வப்போது இதழ்களிலும் மலர்களிலும் வெளியிடப்பட்டவை; சில புதியனவாகச் சேர்க்கப்பட்டவை என்பன நூல் முன்னுரைகளினால் தெரியவருகின்றன. ஆனால் எவை எவை எந்தெந்த இதழ்களிலும் மலர்களிலும் வெளியாயின? எவை புதியனவாகச் சேர்க்கப்பட்டன? என்பதை மு. வ. குறிப்பிடவில்லை. இவ்வாறு குறிக்கப்படாதமையால் வரலாற்றுணர்ச்சியோடு இவற்றை அணுக இயலவில்லை.
சிறுகதை குறித்த மு. வ. வின் சிந்தனை
சிறுகதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட இலக்கணச் சட்டகம் ஏதும் இல்லை. ஆயின் சிறுகதைகளில் அமைகின்ற சில கூறுகளின் அடிப்படையில் அவற்றின் தரமும் சிறப்பும் அளந்து மதிப்பிடப்படுகின்றன. உருவம், உள்ளடக்கம், உத்தி என்ற மூன்று முதன்மைக்கூறுகளின் ஒருங்கிணைவாலும், இழைவாலும் சிறுகதை சிறக்கின்றது என அறிஞர்கள் உரைப்பர். மு.வ. வின் பார்வையில் சிறுகதை என்பது படிப்போர்க்கு இன்பமளிப்பதாகவும், வாழ்க்கையை நன்னறியில் செலுத்துவதாகும் தோன்றுகின்றது. இதனை,

கலையின் பயன் இரண்டு. ஒன்று, கிடைக்கும் சிறுசிறு ::ஒய்வுக்காலத்தை இன்பமாகக் கழிக்கச் செய்வது.
மற்றொன்று நம்மை அறியாமல் வாழ்க்கையைத்
திருத்தி உயர்த்துவது. இந்த இரண்டும் ஒருசேர
அமையும் சிறப்பு சிறுகதைகளில் மிகுதியாகக் காணலாம். ::அதனால்தான் சிறுகதை இலக்கியம் உலகமெல்லாம்
செழித்து வளர்ந்து வருகின்றது.
 என 'விடுதலையா?' நூலிற்கு மு. வ. எழுதியுள்ள முன்னுரையின் வழி அறியலாம். மேலும் சிறுகதையை அவர் ஒரு சீரிய கலையாகவே கருதினார். அவரது கதைகளில் மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் ஆறாமை அமைந்துள்ளமை அறியத்தக்கது. பொதுவாக, எந்த ஒரு கலை வடிவமும் மக்களை மையமிட்டதாக - மக்களுக்காகவே எழுந்ததாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர் மு. வ. கலை கலைக்காக, கலை மக்களுக்காக, கலை காசுக்காக என்று சுட்டப்பெறுகின்ற மூவகைக் கொள்கைகளில் இடைப்பட்ட கொள்கையை மையபமிட்டதாகவே அவரது படைப்புகள் அனைத்தும் அமைந்தன. அவர் படைத்த சிறுகதைகளும் இதனைத் தாங்கியே உள்ளன.
மு. வ. வின் சிறுகதைகள் - இயல்புகள்

சிறுகதைத் தலைப்புகள்:
மு. வ. வின் சிறுகதைத் தொகுதிகளில் உள்ள கதைகளின் தலைப்புகளை நோக்கினாலே அவரது படைப்புத் திறனும் நுண்மாண்துழைபுலமும் நன்கு வெளிப்படும்.

1. வினாவாகத் தலைப்புகள் - விடுதலையா? அந்த
மனம் வருமா?
2. உருவகத் தலைப்பு - சுடரின் நகைப்பு.
3. பழமொழித் தலைப்பு - அக்கரை பச்சை.
4. பெயரெச்சத் தலைப்பு - இறந்த சிற்றப்பா.
5. தத்துவத் தலைப்பு - உலகம் பொய்.
6. வினை முற்றாக அமையும் தலைப்பு - வாய் திறக்கமாட்டேன்.
6. சமுதாய உணாவு அமைந்த தலைப்பு - எல்லோரும் சமம்.
 சிறுகதைகளின் தலைப்பு படிப்போர்க்கு ஆவலையும், சிந்தனையையும் தூண்டும் வண்ணம் அமையவேண்டும்.
 என்ற திறனாய்வுக் கருத்துக்கேற்ப மு. வ. படைத்துள்ள கதைகளின் தலைப்புகள் அமைந்துள்ளமை காணலாம். தலைப்பிடுவதிலே மு.வ. விடம் ஒரு கலைநயம் - கலைக் கண்ணோட்டம் ஒளிர்வதை நாம் உணரமுடிகின்றது.
செயல் ஒருமை (Unity of action)
கதைக்கரு, கதை நிகழ்ச்சி, கதை மாந்தர், கதையின் நோக்குநிலை ஆகியவற்றில் ஏற்படுகின்ற ஒருமுகப்பட்ட ஒழுங்குமுறையைச் செயல் ஒருமை என்பர். கதையின் முதல் சொற்றொடரிலிருந்து இறுதிச் சொற்றொடர் வரை செயல் ஒருமை சிறந்து விளங்க வேண்டும் என்று காலின்ஸ் என்னும் திறனாய்வாளர் மொழிவார். மு.வ.வின் சிறு கதைகளுள் ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவற்றுள் செயல் ஒருமை சிறக்க அமைந்துள்ளது. கதையின் தனித்த குறிக்கோளை வெளிப்படுத்தும் நோக்கில் கதையின் ஒவ்வொரு சிறுகூறும், நிகழ்ச்சியும், பாத்திரமும் பொருத்மாக மு. வ. கதைகளில் அமைந்துள்ளன. 'விடுதலையா?' வில் இச்செயல் ஒருமை சிறப்பாக இடம் பெறவில்லை. ஒரு பொதுவுடைமை வாதியின் விளக்கவுரைகள், மாணவப் பருவம் தொடங்கி ஒரு பாத்திரத்தை வளர்த்துச் செல்லும் முறை போன்றவை இங்குச் செயல் ஒருமைக்குத் தடையாக அமைந்துள்ளன. சுடரின் நகைப்பு, குறட்டை ஒலி, அந்த மனம் வருமா, இயற்கை பொல்லாதது ஆகிய கதைகளில் இச்செயல் ஒருமை சிறப்பாக அமைந்துள்ளது, கதையைப் படிப்படியாக உச்சத்தை நோக்கி வளர்த்துச் செல்லும் பாங்கு இக்கதைகளில் நன்கு வெளிப்படுகின்றது. இவ்வாறு, செயல் ஒருமை என்னும் கலைத்திறமும் மு. வ. வின் சிறு கதைகளில் ஒளிரக் காண்கிறோம்.

பாத்திரப் படைப்பு(Characterisation)
எந்த ஒரு கலைப்படைப்பும் அதன்கண் அமைகின்ற பாத்திரப்படைப்பிற்கேற்பவே நிலைபேற்றுத் தன்மையை அடைய முடியும். சிறுகதைகள் ஏதேனும் ஒரு பண்பு, வாழ்வின் ஒரு பகுதியில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி ஆகியவற்றை விளக்கியபோதிலும் அவற்றில் அமைகின்ற பாத்திரங்கள் மட்டும் படிப்போரின் நினைவை விட்டு அகலாதிருப் பின் அக்கதைகளில் பாத்திரப்படைப்பு சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது எனலாம். மு. வ. வின் சிறுகதைகளுள் வாழும் வழி, அந்த மனம் வருமா என்பவற்றில் வரும் தலைமை மாந்தர்கள் மு. வ. வின் வேறு வடிவத்தினராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு படைப்பாளர் தாமே ஒரு பாத்திரமாக அமைந்து சிறுகதையைச் சீரிய கலையுருவாக்க முடியும். இவரது பிற சிறுகதைகளில் அமையும் மாந்தர்கள் நடைமுறை மக்களின் படப்பிடிப்பாக அமைகின்றனர். காட்டாக 70 வயதுடைய அமாவாசையார் பாத்திரத்தைச் சுட்டலாம். நடப்பியல் நெறியில் நகைச்சுவையோடு பாத்திரத்தின் இயல்புகள், செயல்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் காட்டி மனத்தில் நிலைக்கும் பாத்திரமாக அவரைப் படைத்துள்ளார் மு. வ.
சில மாந்தர்கள் ஒப்பு - உறழ்வு (Parallelism and Contrast) நெறியில் படைக்கப்பட்டுள்ளனர். குறட்டை ஒலி சிறுகதையில் இத்தகு மாந்தர்கள் இடம் பெறுகின்றனர். மு. வ. வின் சிறுகதைகளில் பெண் மாந்தர்கள் மிகுதியாக இடம்பெறவில்லை. இரண்டு பெண்களின் உளவியல் கூறுகளைப் படிம உத்தியின் உதவியோடு விளங்கும் நிலையினை 'எவர் குற்றம்' கதையில் காண முடிகினறது. 'இயற்கை பொல்லாதது' என்னும் கதையில் கணவன், மனைவி ஆகிய இருபாத்திரங்களின் உளவியல் கூறுகளை அழகுற வெளிப்படுத்துகின்றார் மு. வ. பாத்திரப் படைப்பு என்னும் கலைக்கூறினையும் மு. வ. திறம்படச் செய்துள்ளார்.
நோக்குநிலை (Point of view)
கதையைக் கூறிச் செல்லும் முறையை நோக்குநிலை: என்பர், கதையைப் பாத்திரம் கூறல், கதையை ஆசிரியர் கூறல் என்னும் இருவகைப்பட்ட, பொதுவான நோக்கு நிலையையே மு. வ. வும் கையாண்டுள்ளார். இவற்றுள் பாத்திரம் கதை கூறிச் செல்லும் நிலை அவரது கதைகளில் மிகுதியாகவும், ஆசிரியர் கதை கூறும் நிலை சிறுபான்மையாகவும் அமைகின்றது.
கதைக்கரு
மு.வ. சிறுகதைகளில் கதைக் கரு, காந்தியநெறியையும், அன்புநெறிறையும் வலியுறுத்துவதாக அமைகின்றது. மூட நம்பிக்கையைச் சாடல், தளிமனிதனைத் திருத்தும் நோக்கு, செல்வர்களின் கொடு மனத்தைச் சாடல், ஏற்தத்தாழ் வற்ற சமுதாயம் உருப்பெற வேண்டும் என்னும் வேட்கை ஆகியனவும் அவரது கதைகளின் கருவாகியுள்ளன்.
வருணனை, இலக்கியமேற்கோள்
பொதுவாக, சிறுகதைகளில் வருணனை, இலக்கிய மேற்கோள் முதலியன மிகுதியாக இடம் பெறுதல் இல்லை. நிகழ்ச்சியின் விரைவையும் அது தருகின்ற உணர்வுச் சுழிப்பையும் வருணனை, இலக்கியப்பகுதி போன்ற கூறுகள் சிதைத்துவிடக்கூடும். எனவே, இவை சிறுகதைகளில் பெரிதும் போற்றப்படுவதில்லை. மு. வ. வின் சிறுகதைகளில் இவ்வருணனை மற்றும் இலக்கியப்பகுதி அளவாகவே அமைந்துள்ளன. 'குறட்டை ஒலி' சிறுகதைத் தொகுதியில் மலை, ஊர், வயல் ஆகிய இயற்கை வருணனைகளும், கதை மாந்தர் உருவ வருணனையும் இடம் பெற்றுள்ளன. இலக்கிய மேற்கோளாக 'கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' என்னும் ஒரு பகுதி மட்டுமே அதிலும் ஒரடி மட்டுமே குறட்டை ஒலி கதைத் தொகுதியில் இடம் பெறுகின்றது.
உரையாடல்
சிறுகதையின் வெற்றிக்கு அதில் அமையும் உரையாடலும் ஒரளவு உதவுகின்றது. உரையாடல் கருத்துப் புலப்பாட்டை எளிமைப்படுத்தவல்லது. மு. வ. வின் சிறுகதைகளில் இவ்வுரையாடற்பகுதி அளவாகவும், அழகாகவும் அமைந்துள்ளது. சான்றாக,

"ஒரு நண்பரை வழியில் பார்த்துவிட்டு வந்தேன்"
"நண்பர் என்ன பால்? ஆனா? பெண்ணா?"
"பலர்பால்"
"இலக்கணம் கேட்கவில்லை. பொருள் கேட்டேன் "
 -குறட்டை ஒலி, பக். 129 
என்னும் பகுதியைக் குறிப்பிடலாம். இதில் நகைச்சுவைத் தன்மை அமைந்த பொருளை நேரடியாக விளக்குகின்ற, வினா - விடை முறையோடு கூடிய உரையாடல் அமைப்பு இடம் பெற்றிருக்கின்றது. இதுபோன்று பல நிலைகளில் அமையும் உரையாடற்பகுதிகளை மு.வ. வின் சிறுகதைகளில் காணலாம்.
முடிவு
மு. வ. வின் நாவல்களைப் போலவே அவரது சிறுகதைகளும் ஒழுங்கமைவு என்னும் கலைக்கூறைப் பெற்றுத் திகழ்கின்றன. உருவம், உள்ளடக்கம், உத்தி என்னும் முதன்மைக் கூறுகளைச் செறிவுறக் கையாண்டு, தம் சிறு. கதைகளைச் சீரிய கலைப்படைப்பாக்கியுள்ள தன் மூலம் அவர் சிறுகதைக் கலைஞராகவும் திகழ்கிறார்.

டாக்டர் மு. வ. வின் நாடகங்கள்
முத்தமிழ்க் கூறுகளில் ஒன்றாகிய நாடகம் கண், செவி ஆகிய இரண்டு புலன்களாலும் நுகரத்தக்க கலையாகும்; இக் கலைப்பிரிவிலும் டாக்டர் மு. வ. தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார் என்று கூறுவது பொருத்தமாகும்; இவர் பதினொன்று நாடகங்களை இயற்றியுள்ளார். அவை கீழ்வரும் வகைப்பாட்டான் விளக்க முறும்.
 

 


எண்
நாடகத்தின் பெயர்
நூலின்ப பெயர்
வகை
காட்சி


1
பச்சையப்பர்
பச்சையப்பர்
சமூகம்; வரலாறு
21


2
இளங்கோ
மூன்று
இலக்கியம்; வரலாறு
7


3
திலகவதியார்
நாடகங்கள்
வரலாறு
7


4
வீண் கனவு


3


5
காதல் எங்கே?
காதல் எங்கே?
சமூகம்
5


6
கடமை எங்கே?
(ஒரங்க

3


7
நன்மை எங்கே?
நாடகங்கள்

9


8
மனச்சான்று


7


9
கிம்பளம்
மனச்சான்று

8


10
ஏமாற்றம்
(ஒரங்க
சமூகம்
7


11
பொதுநலம்
நாடகங்கள்)

6

⁠இந்த 11 நாடகங்களைத் தவிர, 'அல்லி’ என்னும் புதினம் டி. கே. கணபதி என்பவரால் 'டாக்டர் அல்லி' என்னும் பெயரில் நாடகமாக்கப்பட்டுள்ளது; மேலும் மூன்று நாடகங்கள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள 'இளங்கோ' தனி நூலாகவும் வெளியிடப்பட்டது.
⁠டாக்டர் மு. வ. எழுதிய முதல் நாடகம் 'பச்சையப்பர்’ என்பதாகும்; இஃது ஒரு வரலாற்று நாடமாகும். 1951 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் எழுதப்பெற்ற இந்நாடகத்தில் 21 காட்சிகள் அமைந்துள்ளன. 104 பக்கங்களைக் கொண்ட இந்நாடக நூலின் முன்னுரையில்,


தமிழ்நாடு வண்மையில் எல்லையையும் கண்ட நாடு. ஈதலையே வாழ்தலின் ஊதியமாகக் கொண்ட வள்ளல்கள் பலர் தோன்றிய நாடு இது. 18 ஆம் நூற்றாண்டில் அறம் பல புரிந்த வண்மையாளராய்த் திகழ்ந்த தமிழர் பச்சையப்பர். அவருடைய அறநெஞ் சமே இன்று ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கல்விச் செல்வத்தை ::வழங்கும் அறிவு நிலையங்களாக விளங்குகிறது. இத்தகைய ::அறவோரின் வரலாற்றைப் பலரும் அறிதல் நலம். உயர்வு ::நவிற்சியும் திரிபும் இல்லாமல் உள்ளவாறே விளக்கும் நாடகமாக இச்சிறுநூல் அமைந்துள்ளது. 
என்று குறிக்கின்றார் டாக்டர் மு. வ.
1952 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் எழுதி வெளியிடப் பெற்ற நாடகம் 'இளங்கோ’ என்பதாகும். இந்நாடகம் இளங்கோ அடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பெற்றது. இதில் இளங்கோவடிகள் ஒரு நாடக மாந்தராவார்; துறவியாக இருப்பினும் இல்லறத்தின் மேன்மையினைப் புகழ்கின்றார்; சமய ஒருமையினைப் போற்றுகின்றார். சேர இளவலாக இருப்பினும் மூவேந்தரையும் மதித்துப் போற்றுகின்றார். தமிழகத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றார். இளங்கோவின் ஆளுமை, உயர்ந்த குறிக்கோள்கள், நாடகத்தில் வடிக்கப்பட்டுள்ளன
'இளங்கோ' என்னும் இந்நாடகத்தில் சிலப்பதிகாரம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் வினாக்களாகப் பல்வேறு நாடகமாந்தர்களால் எழுப்பப்படுகின்றன. அவற்றிற்கெல்லாம் இளங்கோவடிகள் விடைதருகிறார். இந்நாடகத்தைச் சிலம்பின் திறனாய்வு என்று கூறலாம். மு. வ. வின் கற்பனைத்திறன் சிறப்புற வெளிப்படும் நாடகங்களுள் குறிப்பிடத்தகுந்த நாடகம் 'இளங்கோ' ஆகும். அவரது நாடகங்களுள் இதனையே தலைசிறந்தது என்று கருதலாம். கீழ்வரும் நாடகத்தின் பகுதிகள் அதன் சிறப்பைப் புலப்படுத்தும்.

சேரன் : ...கால்கோட் காதையில் 'இமிழ்கடல் வேலியைத் ::::தமிழ்நாடு ஆக்கிய, இது நீ கருதினை ஆயின் ஏற்பவர், முதுநீர் ::::உலகில் முழுவதும் இல்லை' என்று எழுதி இருக்கின்றாய்.
 இளங்கோ: வில்லவன் கோதை உங்களுக்குச் சொல்வதாக.
சேரன்: ஆமாம். இருந்தாலும் உன் கருத்துத்தானே? உன் காவியத்தில் வரும் வில்லவன் கோதை நீ தானே?
இளங்கோ: (புன்முறுவலுடன்) ஒரு வகையில் உண்மை தான் அண்ணா? 
சேரன்: அந்த மூன்று அடிகளுக்கு என்ன பொருள்? 
இளங்கோ: பொருள் வெளிப்படைதானே அண்ணா. மயக்கத்திற்கு இடம் இல்லையே. 
சேரன்: உலகத்தையே தமிழ்நாடாக ஆக்கக் கருதினால் அது முடியும் என்று எழுதியிருக்கிறாய் தமிழ்நாடு ஆக்குவது என்றால் எப்படி? 
இளங்கோ: நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் அண்ணா? 
சேரன்: உலகத்தை வென்று என் ஆட்சிக்கு உட்படுத்தல் என்று கருதினேன். ஆனால். 
இளங்கோ: அண்ணி என்ன சொன்னார்கள்?
சேரன்: உலகத்தை வென்று, தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் அங்கெல்லாம் பரப்பி, மற்ற நாட்டு மக்களையும் தமிழர்களாக்கி, தமிழ் நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தல் என்று வேண்மாள் கூறினாள்.
இளங்கோ: அண்ணியின் கருத்தே அழகான பொருள் அண்ணா?

o                       o                     o
இளங்கோ: திருவள்ளுவர் போன்ற பெருமக்களையும் உன்னையும் என்னையும் வளர்த்துப் பண்படுத்தும் தாய்மொழியாகிய தமிழையும் இந்தத் தமிழ் நாட்டையும் நினைத்துத்தான் வருந்துகின்றேன். 

இளந்துறவி: விளங்கவில்லை அடிகளே!
இளங்கோ : ஒரு நாட்டில் வழிகாட்டும் அறிஞர் களிடமும் தலைவர்களிடமும் பொறாமை வாழ்ந் தால், அந்த நாடு வாழாது. ஐந்தவித்தானடிகள் போன்ற அறிஞர்களிடமும் தமிழகத்தை ஆளும் தலைவர்களிடமும் பொறாமை காணும் போதெல் லாம் எனக்கு அந்த வருத்தம்தான் தோன்று கின்றது. நம்மை எல்லாம் வளர்த்துப் பண்படுத்தி வரும் தமிழ் மொழியும் தமிழகமும் எப்படி ஓங்கி வாழப் போகின்றன என்று கவலைப்படு கின்றேன். பொறாமை ஒரு நச்சுப் பாம்பு- அதன் நஞ்சு ஏறினால் நாடும் மொழியும் நலிந்து போகுமே!
※※※

⁠மூன்றாவதாக வெளிவந்த நாடகத்தொகுதி மனச் சான்று” என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். இது 1952 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் வெளிவந்தது. இத்தொகுதியில் “மனச்சான்று” என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் காந்திய நெறியை வற்புறுத்துகின்றது: "கிம்பளம்" என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம்
தீயவர்களையும் அனுசரித்துப் போனால்தான் உலகில் வாழமுடியும் என்று கூறுகின்றது; 'ஏமாற்றம்' என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் சமுதாயத்தில் பணத்தின் மதிப்பினையும், தனி மனிதனின் மதிப்பின்மையையும் தெளிவாக்குகின்றது. 'பொதுநலம்’ என்னும் தலைப்பினில் அமைந்த நாடகம் காந்தியைப் போன்று சமயம் வாயிலாகப் பொதுத் தொண்டு புரியவேண்டும் என்பதனை அறிவுறுத்துகின்றது. இந்நாடக நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ.


கல்லூரிக் கழகங்களில் நடிப்பதற்கென்று யான் அவ்வப்போது எழுதிய நான்கு ஓரங்க நாடகங்களின் தொகுதியே இந்நூல். நாடகமாக நடித்த இளைஞர்

 
களின் ஆர்வமும் ஊக்கமுமே இந்நூல் வெளிவரக் காரணம்’...


என்று குறிப்பிடுகின்றார்; அவர் பணிபுரிந்த பச்சையப்பன் கல்லூரியில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்கள் நல்ல புகழை ஈட்டின.
⁠'அல்லி' என்னும் புதினம் 1955 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 'டாக்டர் அல்லி’ என்னும் தலைப்பினில் மேடைக்கு ஏற்ப திரு டி. கே. கணபதி என்பவரால் நாடகம் வடிவம் பெற்றது. இதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு. நவம்பர்த் திங்கள் 'காதல் எங்கே' என்னும் தலைப்பினில் ஒரங்கநாடக நூல் தொகுதி வெளிவந்தது. ஐந்தாவதாக வெளிவந்த இந்நாடக நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ.


ஒரே துறையில் அமைந்த மூன்று ஒரங்க நாடகங்கள்: ஆயினும் வெவ்வேறு கோணங்களிலிருந்து இன்றைய திருமணச் சிக்கல்களையும் அவற்றின் காரணங் களையும் புலப்படுத்துவன.


என்று குறிப்பிடுகின்றார். இத்தொகுதியில் 1. காதல் எங்கே? 2. கடமை எங்கே? 3. நன்மை எங்கே? என்னும் தலைப்புகளில் மூன்று நாடகங்கள் காணப்பெறுகின்றன. இளைஞர்களின் உள்ளங்களை நன்கு ஆராய்கின்றது; உண்மையாகக் காதல் கொண்டவர்கள் கூட மிகுதியாகப் பொருள் வருமானால் மனத்தை மாற்றிக் கொள்கின்றனர். என்று கூறுகின்றது; உறுதியான உள்ளம் இன்மையால் சிறு ஆசைகளுக்கு இரையாகின்றனர் என்று தெளிவாக்குகின்றது; மேலும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் அவலம் புலப்படுத்தப்படுகின்றது.
⁠'மூன்று நாடகங்கள்' என்னும் தலைப்பினில் 1960 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் வெளிவந்த நாடகத் தொகுதியே கடைசியாக வெளிவந்ததாகும். இதனுள் 1952 ஆம் ஆண்டு தனித்து இளங்கோ’ என்னும் நாடகமும், பின்னர் எழுதப் பெற்ற திலகவதியார் 'வீண் கனவு’ என்னும் இரண்டு நாடகங்களும் காணப்பெறுகின்றன. நாடகத் தொகுதியின் முன்னுரையில்.


இளங்கோ நாடகம் கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியரைப் பற்றிய கற்பனை; "திலகவதியார்" சேக்கிழாரின் காவியத்தை ஒட்டி அமைந்தது; அது கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சோழவேந்தன் இராசேந்திரன் வாழ்வைப் பற்றிய கற்பனை 'வீண் கனவு’ என்பது.


என்று குறிப்பிடுகின்றார் டாக்டர் மு.வ.
⁠'இளங்கோ' என்னும் நாடகத்தைக் குறித்து முன்னர்க் குறிக்கப்பெற்றது. 'திலகவதியார்’ என்னும் நாடகம். நாவுக்கரசர் மற்றும் அவரது உடன் பிறந்தாளாகிய திலகவதி ஆகியோரின் வாழ்க்கையை நாடக வடிவில் கூறுகின்றது; தொண்டுள்ளத்தை நாடக மாந்தர்களின் வாயிலாகவும் நாடகப் போக்கின் வாயிலாகவும் வலியுறுத்துகின்றார். 'வீண் கனவு’ என்னும் நாடகத்தில் நாட்டில் போரே இனி கூடாது எனச் சோழ அரசன் கனவு காண்கின்றான்; கடந்த காலத்தின் நிகழ்ச்சிகளையும், வரலாற்றையும் நம்மால் மாற்றவியலாது என்றும், போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதெல்லாம் நமது விருப்பின் வழிப்பட்ட எண்ணமே என்றும், அவ்வகை எண்ணங்கள் வீண் கனவு என்றும் சோழன் மரணப்படுக்கையின்போது உணர்கின்றான் என்றும் கூறுகின்றது.
⁠செவிடரும் இன்புறக் கூடிய வகையில், குருடரும் மகிழக் கூடிய வகையில் நாடகத்தில் நடிப்பும் உரை. யாடலும் ஒருங்கே அமையவேண்டும் என்னும் மு.வ. வின் கருத்திற்கேற்ப அவரது நாடகங்கள் அமைந்துள்ளமை உணரப்பெறும். மேலும் அவரது நாடகங்கள் பொழுது போக்கிற்காக எழுதப்பட்டவை அன்று; நல்வழியையும் நன்னெறியையும் அறிவுறுத்துபவை (Dr Mய. Va, did not try to entertain the readers by his plays. They are highly instructive and carry some messages) என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது. 

அடிக்குறிப்புகள்

டாக்டர் மு. வ. இலக்கிய மரபு (சென்னை, தாயக வெளியீடு, 1968), ப. 161.


டாக்டர் மு. வ., மலர்விழி (சென்னை, தாயக வெளியீடு), ப. 1.


டாக்டர் மு. வ. அல்லி (சென்னை, தாயக வெளியீடு), ப. 145 - 146,


டாக்டர் மு. வ., மண்குடிசை (சென்னை, தாயக வெளியீடு, 1964), ப. 111.


டாக்டர் மு. வ., கொங்குதேர் வாழ்க்கை’, (சென்னை, தாயக வெளியீடு, 1963), ப. 48 -


டாக்டர் மு. வ., விடுதலையா? . முன்னுரை (சென்னை, தாயக வெளியீடு, 1968), ப. 3.


டாக்டர் மு. வ. கவிஞர் தாகூர் (சென்னை, தாயக வெளியீடு, 1967), L. 62.


தி. பாக்கியமுத்து (பதிப்பாசிரியர்), விடுதலைக்குப் பின் தமிழ் நாவல்கள், (சென்னை, கிறித்தவ இலக்கியச் சங்கம், 1974), ப. 41.
 

9. "Theme properly speaking the theme work is not
its subject but rather its central idea which may be stated directly or indirectly”.

J. A. Cudden, A Dictionary of Literary terms (Andre Deutch, Indian Book Company, 1977), p. 679.
10. தமிழ் ஒளி, மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை இதழ்:ஆறு(1966 - 67),ப.44. 
11. மலர்விழி.
12. அகல் விளக்கு.
13.      
14. கரித்துண்டு .
15. 'Characters in realistic novels may be meaningful as illustrctians of philosephical ideas or attitude”. 
--Robert Scheles, Elements of fiction (New Yark, Oxford University Press, 1977), p. 20.
16. E. M. Forster, Aspects of the Novel, (England, Penguin Books, 1970), pp. 75 - 78.
17. Richard Church, 'The Crowth of the English 
Novel', pp. 171- 172. 
18. கள்ளோ காவியமோ?, (சென்னை , தாயகவெளியீடு, 1965), ப. 6. 
19. நெஞ்சில் ஒரு முள். 
20. அகல் விளக்கு, ப. 7.

 
21. அகல் விளக்கு.
22. E. M. Forster, Aspects of the Novel, pp. 85 – 87.
23. அகல் விளக்கு
24. மு. வ., 'பாவை', (சென்னை, தாயக வெளியீடு.) 
25. மு. வ., 'கயமை”, (சென்னை, தாயக வெளியீடு.)
26.    ⁠ "  ⁠   'செந்தாமரை'.
27. மு. வ., வாடாமலர், பக். 173 - 176.
28.  ⁠ "  ⁠      அகல் விளக்கு.
29.  ⁠ "  ⁠    கயமை, ப. 192.
30. ⁠ "  ⁠      பெற்ற மனம், ப. 6.
31. ⁠ "  ⁠      மலர்விழி, ப. 47.
32. ⁠ "  ⁠     அகல் விளக்கு.
33. மு. வ., தமிழ் இலக்கிய வரலாறு, (புதுதில்லி, சாகித்திய அக்காதெமி, 1972), ப. 291.

 

※⁠※⁠※

 

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel