←← 31. பாரதியார் பாடல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்32. வீட்டை விலைக்கு வாங்கியது

33. பழைய திருவிளையாடல் →→

 

 

 

 

 


440019தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 32. வீட்டை விலைக்கு வாங்கியதுகி. வா. ஜகந்நாதன்

 

 


வீட்டை விலைக்கு வாங்கியது


ஆசிரியருடன் கல்லூரியில் பழகி வந்த பேராசிரியர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். தாம் தமிழில் மாணவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதி இருப்பதாகவும் அதைப் பார்த்து ஆசிரியப் பெருமான் திருத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். தமக்கு நேரம் இல்லாமையினால் தம் குமாரரைப் பார்த்துத் திருத்திக் கொடுக்கும்படியாகச் சொன்னார் ஆசிரியர். அது சம்பந்தமாக ஆசிரியர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்தார். ஒரு முறை ஆசிரியப் பெருமானிடம் அந்த வீட்டிற்கு வாடகை என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் போய்ப் பார்த்து, "அந்த வீட்டை ஏன் அவ்வளவு
 குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள்? வேறு யாருக்காவது மாற்றிவிட்டால் அதிக வாடகை கிடைக்குமே!’ என்று சொல்லியிருக்கிறார்.
அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசிரியரிடம் மிகவும் மதிப்பு உண்டு. இதைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்து விட்டது. "ஐயா, நான் அவரிடம் 20 ரூபாய் வாங்குவதே தவறு. என் கையிலிருந்து மாதம் 20 ரூபாய் கொடுத்து அவரை அந்த வீட்டில் குடியிருக்கச் சொல்ல வேண்டும். அவர் அவ்வளவு பெரியவர். அவர் குடியிருப்பதனால்தான் இன்றைக்கு என் வீடு ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. எத்தனையோ பெரியவர்கள் அவரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டிற்கு வருகிறார்கள். அவரே இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்த்துக் கொண்டு போனாலன்றி, நான் அவரை என் வீட்டிலிருந்து போகச் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.
அந்தப் பேராசிரியர் இன்னும் சில நாள் கழித்து அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் சென்று, "ஐயா, அந்த வீட்டிற்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வீடு சிறியதாக இருப்பதால் அதை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, நீங்கள் வேறு ஓர் இடத்தில் பெரிய வீடாகக் கட்டலாமே" என்று சொன்னார், "நான் அந்த வீட்டை விற்பதுபற்றி இதுவரை யோசித்தது இல்லை. விற்கிற எண்ணம் வருகிறபோது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீங்கள் போய் வாருங்கள்" என்று அதன் சொந்தக்காரர் சொல்லிவிட்டார்.
எனினும் அந்தப் பேராசிரியர் சொன்னது அவரது மனத்தை உறுத்த ஆரம்பித்தது. 'அந்த வீடு நமக்குச் சொந்தம் என்பதனால் தானே, இப்படிப் பலரும் பல விதமான எண்ணங்களை நம்மிடம் வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஆசிரியருக்கே அந்த வீட்டை உரியதாக்கிவிட்டால் என்ன?’ என்று நினைக்கலானார்.
ஒரு நாள் ஆசிரியரிடமே வந்து, "ஐயா, உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் உண்டா? அப்படி இருந்தால் நான் இந்த வீட்டை உங்களுக்கே மூவாயிரம் ரூபாய்க்குத் தருகிறேன்” என்று சொன்னார்.
அப்போது ஆசிரியருக்குக் கும்பகோணத்தில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது. சென்னையில் வீடு வாங்குவதைப்பற்றி இவர் நினைக்கவில்லை. எனவே வீட்டுக்காரர் கேட்டவுடன் தமக்கு வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

அடுத்த ஆண்டு அந்தப் பேராசிரியர் வேறு ஒருவர் மூலமாக அந்த வீட்டிற்கு 4,500 ரூபாய் விலை பேசி முன்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்தச் செய்தியை ஆசிரியர் அறிந்தவுடன்
 மிக்க கவலை அடைந்தார். அந்த வீட்டில் இவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் வேறு இடத்திற்குக் கொண்டு போக வேண்டுமே, புதிய இடம் அதற்கு வசதியாக அமையுமோ, அமையாதோ என்கிற குழப்பம் ஏற்பட்டது.
ஒரு நாள் ஆசிரியர் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்த கணக்கப்பிள்ளை அத்தெரு வழியே போனார். ஆசிரியர் அவரை அழைத்து, "உங்கள் நண்பர் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன்பணம் வாங்கிவிட்டாராமே; என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கிக் கொள்ளமாட்டேனா?" என்று கேட்டார்.
"போன வருஷந்தான் உங்களிடம் சொன்னாராம். நீங்கள் வேண்டாம் என்றதால் வேறு இடத்தில் மனை வாங்கிப் பெரிய வீடாகக் கட்டிக்கொள்ள நினைக்கிறார்போலும் என்று எண்ணியதாகச் சொன்னர்" என்றார் கணக்கப்பிள்ளை.
"அப்போது நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. இப்போது இதையே வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவர் பேசியுள்ள தொகைக்குமேல் நூறு ரூபாய் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது உதவி செய்கிறேன். எப்படியாவது இந்த வீட்டை எனக்கு வாங்கித் தாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார் ஆசிரியர்.
அன்று மாலையே கணக்கப்பிள்ளை வந்தார். "உங்களுக்கு நல்ல சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டுக்காரர் தாம் வாங்கிய முன்பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டார். இந்த வீட்டை உங்களுக்கே சாசனம் செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார்" என்றார்.
ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. காரியம் இவ்வளவு எளிதில் முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கணக்கப் பிள்ளை சொன்னர்: "முதலிலிருந்தே வீட்டுக்காரருக்கு இந்த வீட்டை உங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். நீங்கள் வேண்டாம் என்றவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டது. திரும்ப நீங்கள் வாங்கிக்கொள்ள விரும்புவதாகச் சொன்னவுடன் அவர்கள் விக்கிரய பத்திரத்தில் போட்ட சில நிபந்தனைகளைச் சாக்காக வைத்து, அவற்றுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று, வாங்கிய முன்பணத்தைக் கொடுத்துவிட்டார்" என்றார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு உரிய விலை கொடுத்து ஆசிரியர் தாம் குடியிருந்த அந்த வீட்டையே வாங்கினர். கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்து வந்த வேலையைத் தமக்குப் பண்ணி வைத்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்கு, ‘தியாகராச விலாசம்’ என்ற பெயரைச் சூட்டினார். அது இன்றைக்கும் சிறப்பாக விளங்குகிறது.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel