←← 1. திருவண்ணாமலை
ரமண மகரிஷி ஆசிரியர் என். வி. கலைமணி2. பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?
3. இளமையில் ரமணர்! 1 →→
439963ரமண மகரிஷி — 2. பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?என். வி. கலைமணி
2. பிறந்த சிசுதான் அழும்!பாட்டி ஏன் அழுதாள்?
பாண்டிய நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஒன்று திருச்சுழி திருத்தலம். இந்தக் கிராமம் வளம் சூழ்ந்த ஒரு சிற்றூர். கௌண்டிய முனிவர் என்பவர் அவ்வூர் ஆற்றங்கரையில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதனால் அந்த நதிக்கு கௌண்டின்ய ஆறு என்ற பெயர் வந்தது. அந்தக் கிராமத்தில் அந்த ஆறு பாய்ந்து வளமுண்டாக்குவதால் மிகப் பசுமையான, அழகான கிராமமாக அது அமைந்திருந்தது.
திருச்சுழி எனும் அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பூமிநாதர் என்று பெயர். மாணிக்கவாசகர் சுவாமிகள் அந்தப் பூமிநாத பெருமானைப் பாடி மகிழ்ந்துள்ள தலம் அது. இந்த ஊரில், சுந்தரம் அய்யரும், அவரது மனைவியார் அழகம்மாளும் இல்லற இன்பம் கண்டு வாழ்ந்து வந்தார்கள்.
சுந்தரம் அய்யர் மிகவும் ஏழை. ஏழை என்றால் சொல்ல வேண்டுமா என்ன? தரித்திரம் தானே அவர்களது குடும்பச் சொத்து? அதுவும், மாதம் இரண்டே இரண்டு ரூபாய்தான் அவரது குமாஸ்தா வேலைக்குரிய சம்பளம் என்றால், எப்படி இருக்கும் அய்யர் குடும்பம்?
சுந்தரயமய்யர், தனது ஊதியம் இரண்டுரூபாய் தானே என்று மனமுடைந்து விட்டவர் அல்லர். ‘முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதற்கு ஏற்றவாறு, தனது சிந்தனை சக்தியால் மக்கள் இடையே நாணயமானவர், நேர்மையானவர் என்ற நல்ல பெயரைப் பெற்றார். அதனால், அவ்வூர் சிறு கிராமமாக இருந்தாலும், அங்கே அய்யர் குடும்பத்திற்கு நல்ல பெயரும் புகழும் இருந்தது.
திருச்சுழி சுந்தரமய்யர், எப்படியோ சட்ட நூல்களை அரும்பாடுபட்டுத் தேடி, அவற்றை நன்றாகப் படித்து சட்டக் கல்விமான் ஆனார். அதனால் அவர் வழக்குரைஞர் என்ற பெயரைப் பெற்று திறமையான, நுட்பமான, நன்றாக வாதாடக் கூடிய, வல்லமையுடைய, எதிரியை மடக்கித் திணறடிக்கக் கூடிய வழக்கறிஞரானார். வெள்ளம் போல் பெருகி வரும் வருமானத்தைக் கண்டு அவரது ஏழ்மைப் பறந்தோடியது. மூதேவி ஓடினாள்; சீதேவி அழகம்மாளுக்குத் தோழியானாள்! வருமானம் வலுத்தது; உயர்ந்தது. கிராமப் பெரும் புள்ளிகளுள் ஒருவரானார் அவர்.
இவ்வளவு பெரிய பணம் தன்னை நாடி வந்துவிட்டதால், அவர் ஆணவக் காரராகவோ, அகந்தையராகவோ அல்லாமல், பழைய தரித்திர நாட்களை எண்ணியெண்ணி அந்தக் கொடுமைகளை நெஞ்சிலே நிறுத்தி அச்சத்துடனேயே வாழந்தார்.
அவரைத் தேடி, வரும் பஞ்சை பராரிகளுக்கும், ஏழை எளிய கிராமவாசிகளுக்கும் தவறாமல், தாராளமாக, உதவிகளைச் செய்து வந்தார் அதனால் திருச்சுழி கிராம வட்டாரம் மட்டுமன்று, பாண்டி நாட்டைச் சுற்று முற்றுமுள்ள நகர, கிராமங்களுக்கு எல்லாம் சுந்தரமய்யர் ஒரு வள்ளலாகவே வாழ்ந்து வந்தார்.
கொடையாளி என்ற பெயரைப் பெற்ற அவருக்குள்ள சிறப்பு என்ன தெரியுமோ! கொள்ளையடிப்பவர்களும், கிராமத் திருடர்களும், ஒழுங்கற்ற போக்கிரிகளும் கூட, சுந்தரமய்யர் வீட்டிற்குக் கொள்ளையடிக்க, வம்படி சண்டைகளுக்கு வருவதில்லையாம்! இதைவிடச் சிறப்பு என்னவென்றால், அந்தச் சமுதாய விரோதிகள் கூட, ‘சுந்தரமய்யரும், அவரது குடும்பமும்
நன்றாக வாழவேண்டும் கடவுளே’ என்று இறைவனை இறைஞ்சுவார்களாம்! இது எப்படி? இதுதானே மனித நேயம் மாண்பு?
சுந்தரமய்யரிடம் பணம் திரளத்திரள, அன்றாடம் விருந்தினர்களும், புதுப்புது நண்பர்களும் எந்த நேரமும் அவரது வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தொழில் பெருக்கம் மட்டுமே இதற்குரிய காரணமன்று! அந்த ஊர் பிரசித்திப் பெற்ற சிவத் தலமல்லவா? அதனால், தினந்தோறும் அக்கிராமத்தைக் கடந்து போகும் யாத்திரீகர்களுக்கு அன்னதானம் செய்வதற்காகவே ஒரு சத்திரத்தையும் அவர் கட்டி விட்டார். அந்த விடுதியில், நல்ல விருந்தும், உபசரிப்புகளும் முகங்கோணாமல் தினந்தோறும் நடைபெற்று வந்தது. நாளடைவில் இந்தப் பசி தீர்க்கும் விருந்து மிகவும் புகழ்பெற்று வளர்ந்தது.
சுந்தரமய்யருக்கும், அழகம்மாளுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்த மகன் பெயர் நாகசாமி, இரண்டாம் மகன் வெங்கட்ராமன், மூன்றாம் பிள்ளை பெயர் நாக சுந்தரமாகும்.
இதில் இரண்டாவது ஆண்குழந்தை 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முப்பதாம் நாள் பிறந்தது. அக்குழந்தை பிறந்த நேரத்தில், திருச்சுழி பூமிநாதர் திருக்கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியால், அன்ன சத்திரத்தில் விருந்தினர் முதல் கிராம மக்கள் எல்லாருக்கும் தடபுடலான விருந்துகள் தாராளமாக நடைபெற்றன.
அன்று இரவு திருச்சுழி பூமிநாதப் பெருமான் தேர் மூலமாக கிராமத்தை வலம் வந்து, கோயில் வாயிலை அடைந்த போது, வெங்கட்ராமன் என்ற அந்தக் குழந்தை பிறந்ததால், ஊராரும், உற்றாரும், பெற்றாரும் பெரிதும் மகிழ்ந்து, குழந்தையைப் போற்றி மகிழ்ந்தார்கள்.
குழந்தை பிறந்தபோது அன்னதாதா சுந்தரமய்யர் தனது இல்லத்திலே இல்லை. கோயில் ஊர்வலப் பணிகளிலே இருந்து அப்போதுதான் வீடு நோக்கி வந்தார். வந்த அந்த வள்ளலை பதிதாகப் பிறந்த வாரிசு அழுது வரவேற்றது. அதைக் கேட்ட தந்தை சுந்தரமய்யர், சிந்தை களி கொண்டு ஏழைமக்களுக்குத் தானம் வழங்கினார்!
வெங்கட்ராமன் மார்கழி மாதத்தில், திங்கட்கிழமை அன்று, சிருஷ்ண பட்சத்தில், துவிதியை திதியில் பிறந்ததைக் கண்டு அய்யர் குடும்பம் பூரித்து மகிழ்ச்சிக் கடலிலே அலைமோதி தத்தளித்தது.
அழுது கொண்டே பிறந்த அந்த ஆண் குழந்தையின் ஒலியைக் கேட்டு, குழந்தையின் பாட்டியான, அதாவது சுந்தரம் அய்யரின் தாயார் மகிழ்ச்சி பெற வேண்டியதற்குப் பதிலாக ஓ.... வென்று அழுதாள்! அவள் ஒருத்திதான் மூலையிலே உட்கார்ந்து முணகி முணகி அழுதாள். ஏன் தெரியுமா?
சுந்தரமய்யருக்கு ஒரு தங்கை! அவளுக்கு ஒரு மகன் அதாவது சுந்தரம் அய்யர் தாயிக்கு அவன் மகள் வயிற்றுப் போனல்லவா? அதனால், பாட்டிக்கு நீண்ட நெடு நாளாய் ஓர் ஆசை! தனது மகள் சுந்தரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தையைத் தனது மகள் பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். என்பதே அக்கிழவியின் ஆசை!
அதனால், அந்தப் பாட்டி, பூமிநாதப் பெருமானை மட்டுமல்ல எல்லா தெய்வங்களிடமும் முறையிட்டாள். என்ன செய்வது வழக்கறிஞர் சுந்தரம் அய்யருக்கு மீண்டும் ஆண் குழந்தையே பிறந்துவிட்டது.