←சங்க காலம்

தமிழ்நாடும் மொழியும்  ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிபல்லவப் பேரரசு

பிற்காலச் சோழர்→

 

 

 

 

 


437168தமிழ்நாடும் மொழியும் — பல்லவப் பேரரசுபேரா. அ. திருமலைமுத்துசாமி

 

5. பல்லவப் பேரரசு   
தோற்றம் 
முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு டாக்டர் V. A. சிமித் கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து அவர்கள் தொண்டை மண்டலத்தை அடைந்தனர் என்றும் எல்லோரும் கருதினர். பல்லவர் தங்கள் முன்னோரின் தொடர்பினைக் கைவிட்டமைக்குக் காரணம் அவர்கள் முற்றிலும் இந்தியப் பண்பாட்டில் முழுகினமையே என்றும் எண்ணினர். இக்காலத்தில்கூட 'கேம்பிரிட்ச் இந்திய வரலாற்றுச் சுருக்கம்' என்ற நூலாசிரியர் பல்லவர் அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என எண்ணுகிறார். இதற்குக் காட்டப்படும் காரணங்கள் பின் வருமாறு;- 'பார்த்தியன்' என்ற சொல் காலப்போக்கில் ‘பால்த்தியன்' எனத் திரிந்து பின் பல்லவன் என உருமாறிற்று. புராணங்களிலே சாகர்கள், யவனர்கள் ஆகிய அயலவரோடு பல்லவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கட்கிடையே உறவு முறையும் கற்பிக்கப்பட்டுள்ளது. கிர்னார் (Girnar) கல்வெட்டிலே, உருத்திரதாமன் என்பவன் பல்லவர் தளபதியாகிய சுவிசாகன் என்பவனைக் குறித்துள்ளான், பலசாரி என்ற ஆந்திரப் பேரரசி ஒரு கல்வெட்டிலே, பல்லவரும், சாகரும் தன் மகனாகிய கௌதமபுத்திர சதகர்ணியால் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறியிருக்கிறாள்.
மேலே குறிக்கப்பட்ட குறிப்புகள் மூலம், பல்லவர் சதகர்ணியிடம் தோற்ற பின்பு தொண்டை மண்டலத்திற் குடியேறித் தொடக்கத்தில் ஆந்திரப் பேரரசின் சார்பாளராக (பிரதிநிதி) இருந்திருக்க வேண்டும் என்றும், பின்பு ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலை அவர்கள் காஞ்சியில் முடிசூடி கி. பி. 250-இல் விடுதலைப் பண் பாடியிருக்க வேண்டும் என்றும் வாதிக்கப்படுகின்றது. டாக்டர் கிருட்டிணசாமி அய்யங்கார் போன்ற இந்தியப் பேராசிரியர்கள் பலர் பல்லவர் இந்த நாட்டினரே என எண்ணுகின்றனர். மொழிநூல் விதிப்படி பார்த்தியன் என்ற சொல் ஒருக்காலும் பல்லவன் என ஆகமுடியாது; எனவே பல்லவர்கள் இந்திய மக்களே எனக் கருதுகின்றனர் அவர்கள். பல்லவர் என்போர் அசுவத்தாமன் - நாக கன்னிகை ஆகியோரின் வழித் தோன்றல்கள் என்றும், அவர்கள் பாரத்வாச கோத்திரச் சத்திரியர்கள் என்றும், சில பல்லவர்கள் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சில கல்வெட்டுக்கள் அசுவத்தாமனை விடுத்து சிவனைக் குறிக்கின்றன. பிறந்த உடனே பல்லவம் (கொடி) மீது குழந்தையைப் படுக்கவைத்த காரணத்தினாலும், அக்குழந்தையின் வழித்தோன்றல்களாக விளங்கிய காரணத்தினாலும் பல்லவர்க்கு அப்பெயர் ஏற்பட்டதென்று ஒருசிலர் கூறுவர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது. ஆனால் அறிஞர்கள் இதனை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. திரு. சீனீவாச அய்யங்கார் பல்லவர் மத்திய இந்தியாவிலுள்ள நாகரோடு தொடர்புடையவர்கள் எனக் கூறியுள்ளார். பல்லவர் தென்னாட்டுக் குறும்பர்களோடு உறவுடையவர் என்பது டாக்டர் சிமித் கூற்று. 

பல்லவருடைய பிறப்பிடம் தக்காணம்; அவர்கள் ‘பஹ்லவர்' எனப்படுவர் என்பது சி. வி. வைத்யா என்பவரின் கருத்து. டாக்டர் கிருட்டிணசாமி கூறுவதாவது:- தமிழ்ச் சொல்லாகிய தொண்டை என்பதற்கு வடசொல் பல்லவம். எனவே வடமொழியில் பல்லவர் என அழைக்கப்படுபவர்கள் தமிழ்த்தொண்டையர்களே. தொண்டை மண்டலம் அவர்களது சொந்த நாடாக இருந்திருத்தல் வேண்டும். ஈழநாட்டு அறிஞராகிய சி. இராசநாயகம் கூற்று வருமாறு:- தொண்டை மண்டலத்தின் முதல் அரசன் தொண்டைமான் இளந்திரையன். இவன் மணிமேகலையிற் குறிப்பிடப்படுகிறான். தொண்டைமான் இளந்திரையனின் தந்தை சோழன் கிள்ளிவளவன்; தாய் பீலிவளை என்னும் நாககன்னிகை. இவளது சொந்த நாடு ஈழத்திற்கு அருகில் உள்ள மணிபல்லவம். பிறந்தவுடனே தொண்டைமான் இளந்திரையன் தொண்டைக் கொடியினால் சுற்றப்பட்டுக் கடலில் மிதக்கவிடப்பட்டான். கடல் அலைகளினால் அக்குழந்தை சோழ நாட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை வளர்ந்த பின் தொண்டை மண்டலத்திற்கு அரசனானது. எனவே பின்னர் அக்குழந்தையின் பரம்பரையினர் தாய் நாடாகிய மணி பல்லவத்தின் பெயரால் பல்லவர் என அழைக்கப்பட்டனர். 
 ஆனால் மேற்கூறிய கருத்து பல்லவர் தமிழரசரோடு கொண்ட பகைமைக்குக் காரணம் தெரிவிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல; பல்லவர் முதலில் தமிழைவிட வடமொழிக்கும், வடநாட்டுப் பண்பாட்டுக்குமே ஊக்கமும், ஆக்கமும் அளித்தனர். தமிழ்ப் புலவர்களால் சோழ பாண்டியரைப் போல் பல்லவர் அவ்வளவாகப் பாடப்படவில்லை. இதிலிருந்து பல்லவர் தமிழ் நாட்டவர் அல்லர் என்பது போதரும். "இத்தனை இடையூறுகளும், பல்லவர் என்போர் ஒரு குல மக்கள் அல்ல; அவர்கள் ஓர் கலப்பினம்; அஃதாவது நாக பார்ப்பனர் பரம்பரை எனக் கொள்ளின் தீர்ந்துபோகும்" என்று பேராசிரியர்?  வ. பொன்னுசாமி பிள்ளை எழுதி உள்ளார். 
ஆந்திரப் பேரரசின் தென் மாநிலச் சார்பாளர்களாக (Governor)வும், அலுவலராகவும் இருந்த பல்லவர் ஏறத் தாழ கி. பி. 250-ல் ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்றகாலை விடுதலை முழக்கம் செய்து தனியரசு அமைத்தனர். இத்தனியரசின் தலைநகர் காஞ்சி; துறைமுகம் கடல்மல்லை; அரசாங்க இலச்சினை நந்தி. அடுத்து பல்லவப் பேரரசர்களைப் பற்றிப் பார்ப்போம். 
முற்காலப் பல்லவர்கள் 

பல்லவர் பரம்பரையினைத் தெளிவாகச் சொல்லுதல் அவ்வளவு எளிதன்று. முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் பெரிதும் பிராகிருத மொழியிலேயே அமைந்துள்ளன. எனவே முற்காலப் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்று அறிஞர் அழைப்பர். மயிதவோலு சாசனம், இரகதகல்லி சாசனம், பிரிட்டிசு மியூசியம் சாசனம் என்ற மூன்றும் முற்காலப் பல்லவரைப்பற்றி விளக்கமாக அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும் இவைகளே தமிழக வரலாற்றைக் குறிக்கும் முதற் சாசனங்களாகும். 
 முற்காலப் பல்லவருள் முதல்வன் பப்பதேவன். பல்லவர்கள் தமிழிலக்கியங்களில் 'காடு வெட்டிகள்' என அழைக்கப்படுகின்றனர். அதனை மெய்ப்பிப்பதுபோல பப்பதேவன் தனது ஆட்சிக் காலத்தில் 100,000 கலப்பைகள் உழவர்கட்கு வழங்கி இருக்கிறான். அவர்கள் காடுவெட்டி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி இருக்கின்றனர். 
பப்பதேவனுக்குப் பிறகு அவன்றன் மகனான சிவச்கந்தவர்மன் பல்லவ மன்னனானான். பட்டமேறியதும் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான். இவ்வெற்றிக்காக இவன் விசயச்கந்தவர்மன் என அழைக்கப்பட்டான். மயிதவோலு, இரகதகல்லி என்னும் இரு பட்டயங்கள் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. அவை சிவச்கந்தவர்மனால் வெளியிடப்பட்டவை. அந்தப் பட்டயங்களின் மூலம் 'சிவச்கந்தவர்மன் முற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன்; அவன் அசுவமேத யாகம் செய்தான்; தர்மராசன் என்ற பட்டப் பெயருடையான்; அவன் மௌரியரைப் பின்பற்றி அரசாண்டான்; எனவே அவன்றன் ஆட்சி வட நாட்டு முறையில் அமைந்திருந்தது' என்ற கருத்துக்களை அறியலாம். 
சிவச்கந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான். 
மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவச்கந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை வடநாட்டு மன்னனான சமுத்திரகுப்தன் அவன் நாட்டின் மீது படையெடுத்தான்.
இடைக்காலப் பல்லவர் 
விட்டுணுகோபனுக்குப் பின்பு ஆண்ட பல பல்லவ அரசர்களையே இடைக்காலப் பல்லவர் என்று நாம் கூறவேண்டும். வடமொழிச் செப்பேடுகளும், கல்வெட்டுகளுமே இவர்களைப்பற்றி நாம் அறியத் துணை செய்கின்றன. இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்று கூறினாலும் பொருந்தும். இக்காலத்தில்தான் தமிழகத்தில் அந்நியர் படையெடுப்புக்களும், குழப்பங்களும் நிகழ்ந்தன. இடைக்காலப் பல்லவ மன்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். இதிலிருந்து குப்தர் படையெடுப்பினால், பல்லவராட்சி சற்று தளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என அறியலாம். 
விட்டுணுகோபனுக்குப் பின்வந்த பல்லவரைத் திரு. கோபாலன் பின்வருமாறு தமது நூலில் முறைப்படுத்திக் காட்டியுள்ளார். குமாரவிஷ்ணு, கந்தவர்மன், வீர கூர்ச்சவர்மன், கந்த சிஷ்யன் (இரண்டாவது கந்தவர்மன்), சிம்மவர்மன், இரண்டாவது குமாரவிஷ்ணு, மூன்றாவது கந்தவர்மன், இரண்டாவது சிம்மவர்மன், மூன்றாவது குமார விஷ்ணு, விஷ்ணு கோபவர்மன், மூன்றாவது சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு. இவருள் வீர கூர்ச்சவர்மன் நாக மன்னனான கந்த நாகன் என்பவனது மகளை மணஞ் செய்துகொண்டான். பின்னர் மாமன் துணையுடன் தொண்டை மண்டலத்திலே இழந்த பகுதிகளை மீட்டிக்கொண்டான். 
வீர கூர்ச்சவர்மனுக்குப் பிறகு இரண்டாம் குமார விஷ்ணு என்பவன் பட்டமேறினான். இவன் வீர கூர்ச்சனின் பேரன்; கந்த சிஷ்யனின் மகன். இவன் காலத்தொடக்கத்தில் காஞ்சி சோழர் கையில் இருந்தது. குமாரவிஷ்ணு சோழரை வென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான். வடமொழியை வளர்த்த இப் பல்லவருக்கும், பிராகிருத மொழியை வளர்த்த பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது பேராசிரியர் துப்ரேயில் கருத்து. வடமொழியை வளர்த்த பல்லவர் காலத்துக்கும், பிராகிருதத்தை வளர்த்த பல்லவர்க்கும் இடையே ஒருவித இடைவெளியும் இல்லை என்பது காலஞ்சென்ற பேராசிரியர் ஈராசடிகள் கருத்து. 
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராசசிம்மப் பல்லவனுடைய வயலூர்க் கல்வெட்டு பல்லவ மன்னர் பட்டியல் ஒன்றைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் தருகிறது. அதன் மூலம் முதலிரு பல்லவப் பரம்பரையினருக்கு இடையே எந்தவித வேற்றுமையும் இல்லை; இருவரது கோத்திரமும் ஒன்றே; குலமும் ஒன்றே; இந்தக் காலத்தில் தான் பல்லவர்கள் கடம்பரோடும், கங்கரோடும் அடிக்கடி போரிட்டனர் என்ற செய்திகளை அறியமுடிகின்றது. 
பொற்காலம் - பிற்காலப் பல்லவர் 

பிற்காலச் சோழர் வரலாற்றிலே பொற்காலம் இராசராசன் காலத்திலிருந்து தொடங்குவது போலவே, பல்லவர் காலத்தின் பொற்காலம் சிம்மவிட்டுணு காலத்திலிருந்து தொடங்குகிறது என்னலாம். சிம்ம விட்டுணு சிம்மவர்மனின் மகனாவான். 
சிம்மவிட்டுணுவின் காலம் கி. பி. 575-600. இவன் காலத்திலிருந்து பல்லவராட்சி விரிவும், பேரும், சீரும் அடையத் தொடங்கியது. இவன் தனது கல்வெட்டிலும், பட்டயத்திலும், சோழரையும், பாண்டியரையும், சிங்களவரையும், களப்பிரரையும் முறியடித்ததாகக் கூறியுள்ளான். இவன்றன் சமயம் வைணவம். இவன், இவன்றன் இரு மனைவியர் ஆகிய மூவரது உருவச்சிலைகளும்  மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இவனது காலத்தில் வடமொழி நாடக ஆசிரியர் பாரவி காஞ்சிக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. 
மகேந்திரவர்மன் 
மகேந்திரவர்மன் சிம்மவிட்டுணுவின் மகன்; கி. பி. 600 லிருந்து 630 வரை ஆண்டிருக்கிறான். இவன் காலத்திலிருந்து பல்லவ-சாளுக்கியப் போர் தொடங்கியது. மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி என்பவன் மகேந்திரவர்மனுக்குரிய வடபகுதியைக் கவர்ந்து கொண்டான். எனவே போர் தொடங்கியது. பின்னர் புலிகேசி படையுடன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனைப் பல்லவன் உடனே எதிர்க்கவில்லை; ஒளிந்து கொண்டான். புலிகேசி பல்லவ நாட்டுக்குள் தாராளமாக எதிர்ப்பின்றிச் சென்றான். பின் திரும்பி தன் நாட்டிற்குச் செல்லும்பொழுது அவனைப் புள்ளலூர் என்ற இடத்தில் வைத்துப் பல்லவன் முறியடித்தான்.

மகேந்திரவர்மன் மன்னன் மட்டுமல்ல; கலைஞனும்கூட. இசை, நாடகம், சிற்பம், ஆகிய கலைகளில் அவன் மிகுந்த தேர்ச்சியடைந்து விளங்கினான். அதுமட்டுமல்ல; அக்கலை வல்ல புலவர் பெருமக்களைப் பெரிதும் போற்றிப் புரந்தும் உள்ளான். வடமொழியில் புலமை மிக்கவன் மகேந்திரவர்மன். இவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வட மொழி நூலை எழுதி உள்ளான். இந்நூல் அக்காலத்தில் நிலவிய புத்தர், கபாலிகர், பாசுபதர் ஆகிய பிற சமயத்தினரைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இவன் காலத்தில் வாழ்ந்தவரே அப்பர் பெருமான். சமண சமயத்திலிருந்து பல்லவனைச் சைவனாக்கிய பெருமை அப்பரையேசாரும்.
 சைவனான மகேந்திரவர்மன் வடஆர்க்காட்டுப் பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமணக் கோவிலை அழித்து சிவன் கோவில் கட்டினான், முதன் முதலில் கற்கோவிலை ஏற்படுத்தியவன் இவனே. வல்லம், செங்கல்பட்டு, தளவனூர், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் சிவன் கோவிலையும் விட்டுணு கோவிலையும் கட்டினான். மண்டபப் பட்டுக்கல்வெட்டு இவன் செங்கல், மரம், உலோகம், சாந்து இன்றிக் கோவில் கட்டுவித்தான் எனக் கூறுகிறது. சித்திரக்காரப் புலி என்னும் பட்டப் பெயரால் மகேந்திரவர்மனின் ஓவியப் புலமை விளங்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியம் இவனால் அமைக்கப்பட்டதே. இவற்றிலிருந்து இவன் இசை, நாடகம் முதலிய கலைகளைப் புரந்தமை நன்கு புலனாகும். சுருங்க உரைப்பின் மகேந்திரவர்மன் சாளுக்கியரை முறியடித்தான் ; சைவத்தை வளர்த்தான் ; கலைகளை ஆதரித்தான் ; கற்கோவில்களைக் கட்டுவித்தான்; வேளாண்மையைப் பெரிதும் விரிவாக்கினான். 
நரசிம்மவர்மப் பல்லவன் (630-655)
இவன் மகேந்திரவர்மப் பல்லவனின் மகன். இவன் இளவரசனாக இருந்தபோது போர் பல செய்திருக்கிறான். மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை இவன் மூன்றிடங்களில் தொடர்ந்து முறியடித்து உள்ளான். அதுமட்டுமல்ல; வாதாபி வரை சாளுக்கியனை விரட்டிச் சென்று அந்நகரை அழித்து வெற்றித்தூண் நிறுவியவனும் இந் நரசிம்மனே. இந்நிகழ்ச்சி கி. பி. 642ல் நடந்தது. அதனால் வாதாபி கொண்டவன் என்ற விருதுப்பெயரும் கொண்டான். இவன் படைத்தளபதி பரஞ்சோதி; இவரே சேக்கிழாரால் சிறுத்தொண்ட நாயனார் எனப் பாராட்டப்பட்டவர். இவர்கால மற்றொரு நாயனார் ஞானசம்பந்தர் ஆவார். நரசிம்மன் நடத்திய போரில் இலங்கை மன்னனான  மானவர்மன் உதவினான். மானவர்மன் செய்த இவ்வுதவிக்காக நரசிம்மன் ஒரு கப்பற்படையை அனுப்பி ஈழத்தில் மறுபடியும் மானவர்மன் தனது ஆட்சியை நிலை நாட்டச் செய்தான். மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் இப்படையெழுச்சியைக் குறிப்பிடுகிறது. எனினும் நரசிம்மன் காலத்தில் நெல்லையை ஆண்ட பாண்டிய மன்னனால் இவன் எதிர்க்கப்பட்டனன் எனத் தெரிகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்று சொல்லப்படும் பாண்டியன் நெடுமாறன் ஆவான். 
'தந்தையை ஒப்பர் மக்கள்' என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே. 
சீனயாத்திரிகனான யுவான்சுவாங் இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும் அவன் கூறியதாவது:- இங்குள்ள நிலம் வளமும் செழிப்பும் மிக்கது. இங்குள்ள மக்கள் உடலுரமும், கல்விப்பற்றும், உறுதியும் உடையவர்கள். தலை நகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உடையது. இங்கு 100 புத்தப் பள்ளிகள் உள; 1000 புத்தத் துறவிகளும் உளர். வேறு சமயங்களும் உள. அவற்றுள்ளே திகம்பர சமயம் நன்கு வளர்ந்துள்ளது. 
நரசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றான். பல்லவ மன்னருள் குறைந்த ஆண்டுகள் ஆண்டவன் இவனே. இவன் ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. 
பரமேசுவரவர்மன் (660-680) 
பரமேசுவரவர்மன் காலத்தில் மேலைச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்; பல்லவரை உறையூர் வரை விரட்டியடித்தான். வெற்றிக் களிப்பில் திரும்பி வந்துகொண்டிருக்கையில் திடீரெனப் பல்லவன் பாண்டியர் உதவியோடு சாளுக்கியனைத் தாக்கினான். திடீர்த் தாக்குதலுக்கு ஆளாகிய சாளுக்கியப்படை தோற்றோடியது. இப்போர் பெருவளநல்லூரில் நடைபெற்றது. இதன்பின் பரமேசுவரன் நாட்டின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினான். தன் முன்னோரைப் போலவே இவனும் கட்டடக் கலைஞன். எனவே பல கோவில்களைக் கட்டுவித்தான். அவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று காஞ்சிக்கருகிலுள்ள கூரம் கோவில்; மற்றொன்று மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோவில். 
இராசசிம்மன் (680-700) 
இரண்டாம் நரசிம்மவர்மனே இராசசிம்மன் ஆவான். இவன் பரமேசுவரனின் மகன். இருபது ஆண்டுகளுக்கு மேல் இவன் அமைதிமிக்க ஆட்சி செலுத்தினான். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவிலையும், மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலையும் கட்டியவன் இவனே. இவன்றன் மனைவியான அரங்கபதிகை என்பவளும் இவன் போலவே கட்டடக் கலையில் பெருவிருப்புள்ளவள். இக்காலத்தில்தான் காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
அகம்பிரியா, சங்கரபக்தா, வாத்ய வித்யாதரா என்பன இராச சிம்மனின் விருதுப் பெயர்களாகும், இவன்  அவையில்தான் தண்டி என்னும் வடமொழிப் புலவர் வீற்றிருந்தார். இவனுக்குப் பிறகு இவன் மகனான இரண்டாம் பரமேசுவரன் மன்னனானான். இவன் கி. பி. 700லிருந்து 710 வரை ஆட்சி புரிந்தான். ஆனால் 710-ல் திடீரென எந்தவித வாரிசும் இல்லாமல் பரமேசுவரன் இறந்தான். எனவே அதன்பின் குழப்பம் ஏற்பட்டது. பட்டத்திற்குப் பல இளவரசர்கள் போட்டியிட்டனர். சித்திரமாயன் என்பவன் அவர்களுள் ஒருவன். மற்றொருவன் நந்திவர்மன். நந்திவர்மனின் முன்னோன் பீமவர்மன். பீமவர்மன் என்பவன் சிம்மவிட்டுணுவின் தம்பி. இவன் தெலுங்கு நாட்டை ஆண்டவன். நந்திவர்மன் தனது தந்தையாகிய இரணியவர்மன் உதவியுடன் பல்லவ நாட்டின் மன்னனானான். அக்காலை இவன் பல்லவமல்லன், போத்தரையன் என்னும் பட்டங்களைப் புனைந்துகொண்டான். இவன் அரசனானபொழுது மிகவும் இளைஞனாக இருந்தான். இவன்றன் ஆட்சிக்காலம் கி. பி. 710-775 ஆகும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணப்படும் சிற்பம், அவன் வெளியிட்ட காசக்குடி பட்டயம் இவற்றின் மூலம் நந்திவர்மன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் எனத் தெரிகிறது. 
மறுபடியும் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். கி.பி. 733 ல் அவன் காஞ்சி மீது படை எடுத்து நந்திவர்மனை ஓட்டி, சித்திரமாயனை மன்னனாக்கினான். வென்ற சாளுக்கியன் காஞ்சிக் கோவில்களுக்குப் பல பரிசுகள் அன்பளிப்பாக அளித்தான். இக்காலை நந்திவர்மன் திடீரெனக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்திபுரம் என்னும் ஊரிலிருந்து வந்து, உதயச்சந்திரன் என்னும் தன் படைத்தலைவன் உதவியுடன் சாளுக்கியனை வென்றான். சாளுக்கியனோடு சேர்ந்த பாண்டிய இராசசிம்மனையும் அடக்கினான். சித்திரமாயன் என்பவன் உதயச்சந்திரனால் கொல்லப்பட்டான். இவையெல்லாம் உதயேந்திரப் பட்டயத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.
இதன் பின்னர் இராட்டிரகூடர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இராட்டிடரகூட மன்னன் தந்திதுர்க்கன் தன் மகளான ரேவாதேவியை நந்திவர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான். உதயச்சந்திரன் பல்லவ மன்னனுக்காகக் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைக் கங்கர் நாடு ஆகியவற்றின் சில பகுதிகளைப் பல்லவ நாட்டோடு சேர்த்தான். நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடி,  கொற்றங்குடிப் பட்டயங்கள் இக்காலமக்களின் பண்பாட்டை அறியப் பெரிதும் உதவுகின்றன. அவனுடைய தண்டன் தோட்டப் பட்டயம் அவன் திருமால்மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துகிறது. திருமங்கையாழ்வார் இம்மன்னன் காலத்தவரே. காஞ்சியின் கண் உள்ள முக்தேசுவரர் கோவிலைக் கட்டியவன் இவனே. 
சிறந்த கல்வியறிவும், அரசியல் அறிவும், படைக்கலப் பயிற்சியும், கலை ஆர்வமும், உதயச்சந்திரன் போன்ற திறமைமிக்க வீரர்களின் துணையும் பெற்று இரண்டாம் நந்திவர்மன் விளங்கியதால், பல்லவப் பெருநாடு பரப்பில் குறையாது, பல் வளங்களும் பெற்று, கலைகளுக்கு உறைவிடமாய் விளங்கியது. தன் ஆட்சிக் காலத்தில் பெரும்பகுதி போர் செய்வதில் கழிந்தாலும் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் கலைகளைப் பெரிதும் போற்றி வளர்த்தான். 
தந்திவர்மன் (கி. பி. 775-826) 
நந்திவர்மப் பல்லவ மல்லனின் மகன் தந்திவர்மன் ஆவான். எனவே நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் அரசனானான். தந்திவர்மன் என்பது தந்திவர்மனின் தாய் வழிப் பாட்டனான தந்திதுர்க்கனின் நாமம். தந்திவர்மனின் தாய்வழிப் பாட்டன் இராட்டிரகூடனாக இருந்தபோதிலும், இராட்டிரகூடத்திலிருந்து துருவன், மூன்றாம் கோவிந்தன் என்ற இரு இராட்டிரகூடர்கள் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வந்தனர். சென்னையிலுள்ள திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோவிலில் தந்திவர்மனின் கல்வெட்டு ஒன்றுளது. தந்திவர்மன் தனது இறுதிக் காலத்தில் முதல் வரகுண பாண்டியனிடம் தன்னாட்டின் ஒருபகுதியை இழந்தான். 
மூன்றாவது நந்திவர்மன் (கி. பி. 826-849)
இவன் தந்திவர்மனின் மகன். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் ஒரு போர் தெள்ளாறு எனும் இடத்தில் நடந்தது. அப்போரில் பல்லவனே வெற்றி பெற்றான். எனவே நந்திவர்மன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பட்டான். நந்திக் கலம்பகம் எனும் பிரபந்தம் இந்நந்திவர்மன் மீது பாடப்பட்டதொரு நூலே. காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய இடங்களில் நந்திவர்மன் பெற்ற வெற்றிகளைப்பற்றி இந்நூல் பாராட்டிப் பேசுகின்றது. நந்திவர்மன் ஓர் இராட்டிரகூட மங்கையை மணஞ் செய்துகொண்டான். இவன் சைவத்தை ஆதரித்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இவன் அவைப் புலவராவார். வேலூர்ப் பாளையப்பட்டுப் பட்டயம் ஒன்று நந்திவர்மனைப் பெரிதும் புகழ்கிறது. இவன் மகன் நிருபதுங்கனாவான். இவன் பல்லவ நாட்டை ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆண்டுள்ளான். நிருபதுங்க வர்மனும் பாண்டியரோடு காவிரிக் கரையில் உள்ள அரிசில் என்னும் ஊரில் போரிட வேண்டி இருந்தது. இவன்றன் பாகூர்ப் பட்டயமானது இவனது அமைச்சன் ஒருவன் வட மொழிக்கல்லூரிக்குத் தானம் பல கொடுத்ததாகக் கூறுகிறது.


 அபராசிதவர்மன்
நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர் முடிந்த பிறகு பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டான். இது நடைபெற்ற ஆண்டு கி. பி. 895. அபராசிதவர்மனோடு பல்லவர் பரம்பரை முடிவடைகிறது. அதன் பிறகு பல்லவ மன்னர்கள் முடியிழந்து குறுநில மன்னர்களாகச் சோழர்களின் கீழ் வாழலானார்கள். அப்படி வாழ்ந்தவர்களில் ஒருவனே சயங்கொண்டார் புகழும் கருணாகரத் தொண்டைமான். மற்றொருவன் சேந்த மங்கலம் பெருஞ்சிங்கன் ஆவான். சோழப் பேரரசு அழிவதற்குக் காரணமாயிருந்தவர்களில் இவனும் ஒருவன் ஆவான். 

பல்லவர் ஆட்சி முறை   
பைந்தமிழ் நாட்டில் பல்கலைகளும் வளர்த்த பல்லவப் பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பல்லவப் பெருநாடு பல ராட்டிரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ராட்டிரமும் பல விடயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ராட்டிரம், விடயம் என்பன முறையே மண்டலம், கோட்டம் எனப்படும். ஆனால் தொண்டை ராட்டிரத்தில் (நாட்டில்) கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன. 
 தந்தைக்குப்பின் அரசுகட்டிலில் ஏறும் உரிமை மூத்த மகனுக்குத்தான் உண்டு. அரசன் பிள்ளை இன்றி இறந்தால், மக்களும் மதிஅமைச்சரும் ஒன்றுகூடி அரச மரபைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்து எடுத்து அரசராக்குவர். பல்லவ மன்னர்கள் அனைவரும் தங்கள் வீரச்செயல்களுக்கு ஏற்ப விருதுப் பெயர்களை வைத்துக்கொண்டனர். நந்தி இலச்சினை பல்லவரது அரச இலச்சினையாகும். அமைச்சரும் பலதுறை அரசாங்க அலுவலரும் அரசன் நன்கு ஆட்சிபுரிவதற்குப் பல்வகையானும் உதவினர். உட்படுகருமத் தலைவர், வாயில் கேட்போர், கீழ்வாயில் கேட்போர் போன்ற அரசாங்க அலுவலர் அரசனுக்குத் தூண்போன்றோராவர். 
காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இவை அனைத்தும் பல்லவரிடம் இருந்தன. கடற்படை வலிமை மிக்கதாய் விளங்கியது. எனவே பல்லவர் ஈழநாட்டை வெற்றிபெற முடிந்தது. கடல் வணிகத்தையும் வளம்பெறச் செய்தனர். 
ஊர்தோறும் நீதிமன்றங்கள் திறம்படச் செயலாற்றின. பல்லவர் தலை நகரில் விளங்கிய உயர்நீதிமன்றம் 'அதிகரணம்' என்று அழைக்கப்பட்டது. சிற்றூரில் விளங்கிய அறங்கூறவையம் 'கரணம்' என்று வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் 'தருமாசனம்' என்று கூறப்பட்டது. நீதிபதி ' அதிகாரி' எனப்பட்டார். பட்டயங்களை எழுதுபவர் 'காரணிகர்' என்று கூறப்பட்டார்.
சங்ககாலத்திலேயே கிராம மன்றங்கள் விளங்கின போதிலும், கிராம ஆட்சிமுறை பல்லவர் காலத்திலேதான் நன்கு வலுப்பெற்றது. இதற்குப் பல பல்லவர் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. கிராம ஆட்சியினை ஊரவையார் திறம்பட நடத்தினர். இவர்களே நிலவரி வசூலித்தனர்; வழக்குகளை விசாரித்து நீதி வழங்கினர்; ஊர் நிலம்,  தோட்டம், நீர்நிலை, கோவில் இவை சம்பந்தமான பணிகளைக் கண்காணித்து வந்தனர். ஊரவை பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. ஊரவையார் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டனர். நீர் நிலையைக் கவனித்தவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனவும், தோட்டத்தைக் கவனித்தவர் தோட்டவாரியப் பெருமக்கள் எனவும், கோவில் திருப்பணிகளைக் கண்காணித்தவர் அமிர்தகணத்தார் எனவும் அழைக்கப்பட்டனர். 
பல்லவ மன்னர்கள் சிறந்த சமயப் பற்றுள்ளவர்களாய் விளங்கியதால், அவர்கள் நிலம், சிற்றூர் இவற்றைக் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தனர். இவ்வாறு கொடுக்கப்பட்டது – ‘தேவதானம்' என வழங்கப்பட்டது. இந் நிலங்களுக்கு வரி இல்லை. சமண பௌத்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்பட்டன. பிராமணர்க்கென்று உண்டான புதிய சிற்றூர்கள், பிரமபுரி, பிரம்ம தேசம், குடி, மங்கலம் என்று பெயரிடப்பட்டன. இவ்வூரவைகள் சபைகள் என அழைக்கப்பட்டன.
தென்னை, பனை, பாக்கு பயிரிட்டோர், மரிக்கொழுந்து, குவளை பயிரிட்டோர், கால்நடைகளால் பிழைப்பவர், புரோகிதர், சலவை செய்பவர், ஆடை நெய்பவர், ஆடை விற்பவர், கொல்லர், தரகர், நெய், பதநீர் விற்பவர், ஓடக்காரர் ஆகிய பலவகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி கொடுத்தனர். மக்கள் வரியினைப் பணமாகவோ அன்றிப் பண்டமாகவோ செலுத்தினர். 
நாட்டிலுள்ள நிலங்கள் அனைத்தும் செம்மையாக அளக்கப்பட்டன. அதன் பின்னரே வரி விதிக்கப்பட்டது. உழவுத்தொழில் உயர்ந்து விளங்கவேண்டும் என்பதற்காக, நாடு செழிக்கவேண்டும் என்பதற்காகப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; ஏரிகள் அமைக்கப்பட்டன. குழி, வேலி என நிலங்கள் அளந்து சொல்லப்பட்டன. உழக்கு, உரி, நாழி, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குருணி, காடி, கலம் என்னும் முகத்தலளவைகளும், நாலுசாண் கோல், பன்னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல் முதலிய நீட்டலளவைகளும் பல்லவர் காலத்தில் வழக்கத்திலிருந்தன.
காஞ்சி, கடிகாசலம், பாகூர் இவ்விடங்களில் விளங்கிய கல்லூரிகள் பல்லவர் ஆட்சியில் சிறந்த கல்விக் களஞ்சியங்களாய் விளங்கின. ஆனால் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த பல்லவர் தலை நகராகிய காஞ்சிமாநகர் தொன்றுதொட்டே கல்விக்கு இருப்பிடமாகவும், கற்றோர்க்கு உறைவிடமாகவும் விளங்கியது. இதன் காரணமாகவே அப்பர் பெருமான் 'கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்' என்றும், அவந்திசுந்தரி கதாசாரம் என்னும் நூலாசிரியர் 'கற்றவர் கூட்டம் இருக்கும் இடம் காஞ்சி' என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அறநெறி ஓம்பிய அறவணவடிகள் இருந்து அருளுபதேசம் செய்த இடம் இக்காஞ்சியே. மேலும் மணிமேகலை சமயக் கணக்கர் பலரைச் சந்தித்த இடமும் இதுவே. இங்கு பல பௌத்தக் கோவில்கள், மடங்கள் இருந்தன. பல்லவர் ஆட்சி சிறப்புற்றிருந்த காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் காஞ்சியிலிருந்துகொண்டு தமிழ் வளர்த்தனர். வேலூர்ப்பாளையம், காசக்குடி கல்வெட்டுக்கள் கடிகை என்னும் வடமொழிக் கல்லூரி ஒன்று காஞ்சியில் இருந்தது என்றும், இராசசிம்ம பல்லவனால் அக்கல்லூரி புதுப்பிக்கப்பட்டது என்றும், அங்கு வேதம், வியாகரணம், மீமாம்சை என்பன கற்றுக் கொடுக்கப்பட்டன என்றும் கூறுகின்றன. 
காஞ்சிக்கல்லூரியில் கடம்ப வல்லரசை நிறுவிய மயூரசர்மனும், நாளந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தர்மபாலரும் கலைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தனர் எனவும் அறிகின்றோம். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தென்னகம் வந்து சென்ற யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சியில் வடமொழிக் கல்லூரி ஒன்று சிறந்து விளங்கியதென்றும், அதற்கும் நாளந்தாக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும், காஞ்சியில் அதுகால் புத்த சமயக்கல்வி செழித்திருந்த காரணத்தால் இலங்கையிலிருந்து பல பௌத்த முனிவர் இங்கு வந்து கல்வி பயின்று சிறந்த அறிஞராய் விளங்கினர் என்றும் எழுதி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி இன்று இந்தியாவின் ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாய்வைத்து எண்ணப்படுகிறது. இங்குள்ள ஏகாம்பரநாதர் கோவிலும், வரதராசப்பெருமாள் கோவிலும் மிகப் புகழ் வாய்ந்தனவாகும். 
கடிகாசலம், பாகூர் இவ்விரண்டிடங்களிலும் விளங்கிய வடமொழிக் கல்லூரிகளில் முறையே நான்கு வேதங்களும், பதினான்கு கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் பாகூர் கல்லூரியில் பதினெட்டுவகை வித்தைகளும், மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியனவும் சொல்லித்தரப்பட்டன. 
பல்லவர் காலத்திலே சைவமும் வைணவமும் நன்கு வளர்க்கப்பட்டன. மகேந்திரன் அரசாட்சியின் தொடக்கத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றபோதிலும், சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர் ஆகியோரின் ஓயாத உழைப்பாலும், அவர் தம் பாக்களின் செல்வாக்காலும் சமணமும் பௌத்தமும் நிலை தடுமாறின. சங்ககாலத்திலே அரும்பிய சைவ வைணவ சமயங்கள் பிற்காலப் பல்லவர் காலத்திலே (கி. பி. 700-900) ஓங்கிய மரங்களாகச் செழித்துச் சீரும் சிறப்பும் கொண்டுவிளங்கின. மன்னன் ஆதரவும், மக்களின் பக்கபலமும் சேரச்சேர, காற்றொடு சேர்ந்த கனலெனச் சைவ வைணவ சமயங்கள் தமிழ்நாடு முழுதும் பரவலாயின. 


 பல்லவ மன்னர்கள் பழைய கோவில்களைப் புதுப்பித்தனர்; புதிய கோவில்களைக் கட்டினர். செங்கற் கோவில்கள் எல்லாம் கருங்கற் கோவில்களாக மாறின. மொட்டை மலைகள் எல்லாம் கோவில்களாக மாற்றப்பட்டன. மலைகளின் சரிவுகளிலே குடைவரைக் கோவில்கள் குடையப்பட்டன. மலைகள் கற்களாக உடைக்கப்பட்டு, அடுக்கப்பட்டுக் கோவில்களாகக் கட்டப்பட்டன. நாட்டுமக்களிடையே சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் வேகமாகப் பரவின. இதனால் - சைவமும் வைணவமும் நன்கு செழித்தன; ஓங்கின. பிற சமயங்கள் வீழ்ந்தன. 

பல்லவர் வளர்த்த கலைகள் 
தமிழக வரலாற்றிலே பல்லவர்க்குப் பல பொன்னேடுகளை அளித்தவை அவர்களால் வளர்க்கப்பட்ட கலைகளே. பல்லவர்கள் பல கலைகளையும் வளர்த்தபோதிலும் அவர்களுக்குப் பெருமை அளித்த கலைகள் சிற்பக்கலையும் கட்டடக் கலையுமாம். பல்லவராட்சியில் மண்ணாலும், மரத்தாலும் ஆன கோவில் எல்லாம் கற்கோவில்களாக மாறின. தமிழகத்திலே முதன் முதல் குகைக் கோவில்களும் கற்றளிகளும் ஏற்படுத்திய பெருமை பல்லவர்க்கே உரியது. பல்லவர் காலத்தில் செழிப்படைந்த கலைகள் சிற்பக்கலையும் (Sculpture). கட்டடக்கலையும் (Architecture) ஆம். பல்லவர் காலக் கோவில்கள் இரு வகைப்படும். முழு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோவில்கள்; கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட கற்றளிகள். சிற்பக் கலையை வளர்த்த பல்லவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இராசசிம்மன், அபராசிதவர்மன் என்போராவர். இந்நால்வரும் தனித்தனியே சிற்பக் கலையை வளர்த்தனர். ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிவகையான சிற்பங்களை வகுத்தனர். எனவே பல்லவர் காலச் சிற்பக்கலை நான்கு விதமான முறைகளை உடையது. 
 
 
(Upload an image to replace this placeholder.)

 
 

  
 கி. பி. 600-630 வரை தொண்டை நாட்டையும் சோழ வள நாட்டையும் ஆட்சி புரிந்த பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மனே கோவில் கட்டிட அமைப்பில் புதியதொரு முறையை உண்டாக்கினான். தென்னாட்டில் முதன் முதலில் கற்கோவில்களைக் கட்டத் தொடங்கிய பெருமை இவனுக்கே உரியது. பெரிய பெரிய கற்பாறைகளைக் குடைந்து, அவற்றுள் தூண்களும், சுவர்களும், முன்மண்டபமும், கருப்பக்கிருகமும் அமைத்து, கற்கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களை அமைத்த வகையைப்பற்றி மகேந்திரனது மண்டகப்பட்டு குகைக்கோவிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது. 
“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியன இல்லாமலே மும்மூர்த்திகளுக்கு இக்கோவில் விசித்திர சித்தன் என்னும் பேரரசனால் கட்டப்பட்டது." இதன் மூலம் விசித்திரசித்தன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மன், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு கோவில் எழுப்பும் பழைய முறையை மாற்றி, கருங்கற் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்களை அமைத்தான் என்பது நன்கு புலனாகும். இவ்வாறு இவன் அமைத்த குகைக் கோவில்கள், மாமண்டூர், தளவனூர், திருச்சி, பல்லாவரம் சீயமங்கலம், சித்தன்னவாசல், வல்லம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மேலைச்சேரி என்னும் இடங்களில் உள.
அடுத்து பட்டத்திற்கு வந்த மாமல்லனாகிய நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போன்று சிறந்த கலைஞன் ஆவான். இவன் மலைகளையே கோவில்களாக மாற்றினான். இவனும் இவனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த பரமேசுவரவர்மனும் மகாபலிபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோவில்களையும், இரதக் கோவில்களையும்  அமைத்தனர். மேலும் மாமல்லன் காலத்தில் கோவிற் சுவர்களில் பலவகை மிருகங்கள், பூக்கள், கொடிகள் செதுக்கப்பட்டன. எனவே அவை கோவிற்சுவரையே மறக்கச் செய்தன. மாமல்லபுரத்திலுள்ள பாண்டவர் இரதங்கள் நரசிம்மன் அமைத்தவையே. அர்ச்சுனன் தவம், இடையன் பால் கறத்தல் ஆகிய சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துவிடும் தகுதியுடையன. தவம் செய்யும் பூனை, அதன் அருகில் அச்சம் ஏதுமின்றி இருக்கும் சுண்டெலிகள் ஆகியன அமைந்த சிற்பம் பெரிதும் கலை நுணுக்கம் வாய்க்கப்பெற்று மாமல்லனின் கலை விருப்பத்தையும் சிற்பியின் நுண்கலைத்திறனையும் உலகம் உள்ளளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பல்லவர் துறைமுகமாகிய கடல்மல்லை நரசிம்மவர்மன் காலத்தில் பன்மடங்கு விரிவடைந்தது. தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்பதை நரசிம்மவர்மன் இதற்குச் சூட்டவே அன்றுமுதல் கடல்மல்லை மாமல்லபுரமாயிற்று. இன்று இது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு தமிழகத்தின் சிற்பக் கலையின் சீரிய பண்புகள் அனைத்தையும் காணலாம். திருமங்கை மன்னரால் பாராட்டப்பெற்றுள்ள இப்பதி செங்கற்பட்டிற்குக் கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ளது. 
கடல் மல்லையில் நாம் காணும் முதல் மண்டபம் மகிடாசுரமர்த்தனியின் குகைக்கோவிலாகும். இம் மண்டபத்தின் முற்புறத்தில் ஆறு தூண்கள் உள்ளன. இதன் உட்பாகம் கற்பாறையைக் குடைந்ததாகிய ஒரு கூடமாக விளங்குகிறது. இதனது நடுச்சுவர் மையத்தில் சிவன் உமையுடன் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு களிக்கலாம். நான்கு கரங்களோடு நந்தியின்மீது பதித்திருக்கின்ற இணையடியோடு இறைவன் விளங்குகின்றான். அயனும் அரியும் கூப்பிய கைய ராய் இறைவனுக்குப் பின்புறம் நிற்கின்றனர். இறைவியின் மடியில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தென்புறச் சுவரில் சிற்பி வெகு அழகாக துர்க்கை அரிமா மீதேறி மகிடாசுரனோடு போர் புரியும் காட்சியினை வெகு அற்புதமாய்ச் செதுக்கி உள்ளான். இங்குள்ள சிற்ப வேலைகள் எல்லாம் சுவர்ச்சிற்பமாக அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் காணும் குறிப்பிடத் தகுந்த மற்றொரு காட்சி ஆயிரம் தலைகளோடு கூடிய ஆதிசேடன் மீது திருமால் அரிதுயில் கொள்வதாகச் செதுக்கி இருப்பதாகும். 
அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது 'தருமராச இரதம்' என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாச்கந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று ஒன்றாய் இணைக்கின்றது. இவற்றிற்கு முன்னால் ஒரே கல்லில் வெட்டிய மதகரி, அரியேறு இவற்றின் சிலையுருவங்கள் விளங்குகின்றன. திரௌபதி இரதத்தின் மூலத்தானத்தில் துர்க்கையின் படிமத்தைக் காணலாம். இச்சிலையின் கீழ் பக்தனொருவன் தன் சிரத்தைத் தானே துணித்துக் கொள்ளும் பாவனையில் ஒரு சிற்பம் உள்ளது. இந்த இரதக்கோவில் சிறு கூரை வீடு போல் காட்சி தருகிறது. நகுல சகாதேவ இரதங்கள் எனக் கூறப்படுபவை முற்றுப் பெறாதவையாகும்; இவ்வொற்றைக் கற்கோவில்கள் இரத வடிவமாக அமைந்திருப்பதால் மக்கள் இவற்றை இரதங்கள் என அழைத்தனர் போலும். மேலும் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்றே நெடுங் காலமாக இவற்றை மக்கள் அழைத்து வருகின்றனர். 
மகேந்திரன் காலத்து வாழ்ந்த சிற்பியர் தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மரத் தச்சர் காட்டிய சிற்பத் திறமைகளை எல்லாம் கல்லிலே காட்டினர். மகேந்திரன் காலத்துத் தூண்கள் மேலே பொதிகைகளுடன், கீழே சதுரமான பீடங்களுடன், நடுவில் பட்டை தீட்டிய மூலைகளுடன், புறத்திலே மன்னனது விருதுப் பெயர்களுடன் விளங்குகின்றன. போதிகைகளிலும், பீடத்திலும் தாமரைப்பூ செதுக்கப்பட்டுள்ளது. நரசிம்மன் காலத்தில் கட்டிய கோவில்களில் காணும் படிமங்களும், வரிசை வரிசையாக வண்ணமுடன் விளங்கும் அன்னங்களும், சிறு மணிக்கோவை நிரைகளும், பூ வேலைகளும் மிகச் சிறந்து விளங்குகின்றன. இவன் கட்டிய தூண்களின் போதிகைகள் பந்து வடிவாக உருண்டு காணப்படுகின்றன. இதன் மேற்பாகத்தில் வெட்டப்பட்டிருக்கும் பள்ளமான கழுத்து வளையத்தின் மேல் ஒரு சதுரப் பலகையும், அதன்மீது சதுரக் கல்லும், இக்கல்லின்மீது தலைப்பொதிகைப் பலகையும் அமைந்துள்ளன. சிங்கத்தின் முதுகிலே தூண்கள் நிற்கின்ற முறையில் தம்ப பீடங்கள் காணப்படுகின்றன. 
அடுத்து வடகிழக்கில் முற்றுப் பெறாது காணும் குகைக் கோவிலின் தம்ப பீடங்கள் யானையுருவில் உள்ளன. இதைச் சார்ந்த மிகப் பெரிய பாறையில் சிற்பியர் தங்கள் கைவண்ணம் முழுவதையும் காட்டியுள்ளனர். இங்குதான் தவம் செய்யும் அர்ச்சுனனைக் காணலாம். இதனைப் 'பகீரதன் தவம்' என்றும் சொல்லுவர். பகீரதனைச் சுற்றிலும் பல மனித உருவங்களும், பல்வேறு விலங்குகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. குட்டியுடன் கூடிய யானையையும், குரங்குக் குடும்பத்தையும், தவஞ்செய்யும் பூனையையும் பார்ப்பவர் பரவசமுறாமலிருக்க முடியாது. இப்பாறைக்குச் சற்றுத்தள்ளி கண்ணனின் வெண்ணெய்த் திரள் என்று கூறப்படுகின்ற பாறையும், வராக சுவாமி கோவிலும் உள்ளன. இக்கோவிலில் மால் பூதேவியை அசுரரிடமிருந்து மீட்டு வந்த காட்சியை வெகு அழகாகச் சிற்பி படைத்துள்ளான். 
இறுதியில் நாம் காணவேண்டியது கரைக் கோவிலாகிய தலசயனக் கோவிலாகும். கடலலைகள் வந்து மோதும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் காண்போர் கண்களுக்குச் சிறந்ததொரு விருந்தாகும். 
இரண்டாம் நரசிம்மனான இராசசிம்மன் அமைத்த கோவில்கள், மகேந்திரன், நரசிம்மன் ஆகியோரின் கோவில்களினின்றும் வேறுபட்டவை. இவன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. சுண்ணம் சேர்க்காமல் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவில் கற்றளி ஆகும். காஞ்சியின்கண் உள்ள கைலாச நாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில், மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் ஆகியன இராசசிம்மனால் அமைக்கப்பட்டன.  1000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட இக்கோவில்கள் இன்றும் நல்ல நிலையில் நம் நாட்டத்தை எல்லாம் கவரும் வகையில் உள்ளன. இராசசிம்மன் அமைத்த கோவிலினின்றும் கலை நுணுக்கத்தில் சிறிது வளர்ந்த அமைப்புடைய கோவிலை அபராசிதவர்மன் அமைத்தான். புதுக்கோட்டையின் அருகில் உள்ள சித்தன்ன வாசல் குகைக் கோவில் இன்றும் பல்லவரின் கலைப்பற்றை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. 
பல்லவர் காலத்து வாழ்ந்த சிற்பிகள் மனிதரின் உருவங்களை உள்ளவாறே செதுக்குவதில் தலைசிறந்தோராவர். இவர்கள் செய்த உருவங்கள் மிகவும் பழைமை  வாய்ந்தனவாகும். மாமல்லபுரம் வராகப்பெருமாள் கோவிலில் உள்ள சிம்மவிட்டுணுவும் அவனது மனைவியரும் ஆகிய மூவரது உருவச் சிலைகளும், தருமராச இரதத்திலுள்ள நரசிம்மவர்மனது உருவச் சிலையும், அர்ச்சுனன் இரதம் என்னும் கோவிலில் காணும் பல பல்லவ அரசர்களது உருவச்சிலைகளும் இன்றும் அவர்தம் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இதே போன்று கைலாசநாதர் கோவிலிலும், சித்தன்னவாசல் குகைக்கோவிலிலும் காணப்படும் ஓவியங்கள் ஒப்பற்றனவாகும். சித்தன்ன வாசல் குகைக் கோவில் ஓவியம் தமிழ்நாட்டு மிகப் பழைய ஓவியமாகும். சித்தன்னவாசல் என்னும் ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை, இரு நடன மங்கையரின் ஓவியங்களும், தாமரை பூத்து விளங்கும் காதிகா பூமி என்னும் அகழியின் ஓவியமும், மகேந்திரன், இவன் அரசி இவர்களது ஓவியங்களுமாம். கைலாசநாதர் கோவில் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை பெரிதும் சிதைந்தும் அழிந்தும் உள்ளன. பல காலம் மறைந்திருந்த பல்லவர் காலத்து ஓவியங்களை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை பிரெஞ்சு அறிஞர் மூவோதூப்ராய் அவர்களுக்கே உரியது. 
பல்லவர் காலத்தில் இசைக்கலையும் பெரிதும் போற்றப்பட்டது. பல்லவ மன்னன் மகேந்திரன் சிறந்த இசைக் கலைஞன் ஆவான். இவன் புத்தம் புதிய இசை ஒன்றினைக் கண்டுபிடித்த காரணத்தால் சங்கீர்ணசாதி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மகேந்திரனது குடுமியா மலைச் சாசனம் தமிழ் நாட்டு இசையினைப்பற்றி நன்கு விளக்குகின்றது. இச்சாசனம் வடமொழியில் உள்ளது; பல சுரங்களின் தன்மையை நன்கு எடுத்தியம்புகின்றது. மகேந்திரனது மாமண்டூர் குகைக்கோவில் சாசனம் இம்மன்னன் 'தட்சண சித்திரம்' என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் எனக் கூறுகின்றது. 
இலக்கியம் 

பல்லவர் காலத்திலே எல்லாக் கலைகளோடு இலக்கியக் கலையும் ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. பல இலக்கியங்களும் இவர்கள் காலத்திலே தோன்றின. ஆனால் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலே தமிழைவிட வடமொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் பல்லவ அரசர்களால் அளிக்கப்பட்டது. வடமொழிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. மகேந்திர மன்னனே வடமொழியில் 'மத்த விலாசப் பிரகசனம்' என்று ஒரு நாடகம் எழுதியிருப்பது நாமறிந்த தொன்றே . தண்டின், பாரவி, திக் நாகர் என்பவர்கள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்ட வடமொழிப் புலவர்கள் ஆவார்கள். பாரவி எழுதிய வடமொழி நூல் ‘கிராதார்ச்சுனீயம்'; தண்டின் எழுதிய வடமொழி நூல் ‘காவ்யாதர்சம்'. திக்நாகர் ' நியாயப் பிரவேசம்' என்ற வடமொழி நூலை எழுதினார். இவ்வாறு வடமொழி பல்லவர் காலத்திலே நன்கு வளர்க்கப்பட்டபோதிலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஊறு செய்தமைக்குக் குறிப்புகள் காணோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தேவாரப் பாக்களும், இலக்கியச்சுவை ஒழுகும் நந்திக் கலம்பகமும், பெருந்தேவனார் எழுதிய பாரதமும் பல்லவர் காலத்திலே எழுந்தன. மற்றும் சிவத்தளி வெண்பா, யாப்பு இலக்கண நூல்கள், அணி இலக்கண நூல்கள் சிலவும் பல்லவர் காலத்திலே எழுதப்பட்டன. எனவே இதுவரை கூறியவாற்றால் பல்லவர்காலத்திலே வடமொழி இலக்கியங்கள் பேரளவிலும், தமிழ் இலக்கியங்கள் ஓரளவிலும் வளர்ந்தன என்பது தெளிவாகும்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel