←i. முத்து வயிரவநாத சேதுபதி

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. முத்து விஜயரகுநாத சேதுபதி

iii. பவானி சங்கர சேதுபதி→

 

 

 

 

 


418948சேதுபதி மன்னர் வரலாறு — ii. முத்து விஜயரகுநாத சேதுபதிஎஸ். எம். கமால்

 

II முத்துவிஜயரகுநாத சேதுபதி
முத்துவயிரவநாத சேதுபதியின் இளைய சகோதரர் திருவுடையாத் தேவர் என்பவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். இதனை உறுதிப்படுத்தும் இவரது முதலாவது செப்பேடு கி.பி.1713ல் வழங்கப்பட்டுள்ளது.
திருவுடையாத் தேவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் விஜயதசமி (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவரது அதிகாரப் பூர்வமான பெயர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என வழங்கப்பட்டது. ஆனால் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற அடைமொழி இவருக்கு முன் இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும் ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இந்த மன்னரது ஆட்சி கி.பி.1725 வரை நீடித்த குறுகிய கால ஆட்சியாக இருந்தாலும் இந்தக் காலத்தில் சில அரிய சாதனைகளை இந்த மன்னர் நிகழ்த்தியுள்ளார். முதலாவதாகச் சேது நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சியில் சேதுநாட்டின் எல்லைகள் வடகிழக்கு வடக்கு. தெற்கு ஆகிய மூன்று திக்குகளிலும், விரிவடைந்த பொழுதிலும் அவரது ஆட்சிகாலத்தில் இந்த பெரிய நிலப்பரப்பின் நிர்வாகத்தைச் சீரமைக்க இயலவில்லை. அவரை அடுத்து சேதுபதிப் பட்டம் பெற்ற ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு உள்நாட்டின் குழப்பங்களைச் செம்மை செய்வதில் காலம் கழிந்ததால் நிர்வாகத் துறையில் புதியன எதையும் புகுத்த முடியவில்லை.
செம்மையான நிர்வாகம் நடைபெற
ஆதலால் இந்த மன்னர் அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்ததுடன் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்து அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி வெளிப்புற எதிரிகளிடமிருந்து சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் புதிதாக அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என இராமநாதபுரம் சமஸ்தான மேனுவல் தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் ஏற்கனவே திருப்பத்துர், காளையார்கோவில், மானாமதுரை, அனுமந்தக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் சேதுமன்னருக்குச் சொந்தமான கோட்டைகள் இருந்து வந்தன. இவையனைத்தும் தமிழ்நாட்டில் பாரம்பரிய முறைப்படி கோட்டைவாசல், கொத்தளங்கள், அகழி என்ற பகுப்புகளுடன் செவ்வக வடிவில்அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த மரபுகளினின்றும் மாறுபட்டதாக கமுதிக் கோட்டை குண்டாற்றின் வடக்குக் கரையின் பாறைகள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டது. தமிழகத்தில் இதனைப் போன்ற வட்டவடிவமான கோட்டை நாஞ்சில் நாட்டில் அமைக்கப்பட்ட உதயகிரி கோட்டை யாகும். இதனை நாஞ்சில் நாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மனுக்காக கி.பி.1751ல் டினாய்ஸ் என்ற டச்சுத்தளபதி அமைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கோட்டை இப்பொழுது உதயகிரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவதாக, இந்த மன்னர் சேதுநாட்டின் அத்தாணி மண்டபமான இராமலிங்க விலாசத்தை அழகிய சுவர் ஒவியங்களால் கலைக்கருவூலமாக அலங்கரிக்கச் செய்தார். மூன்று பகுதிகளை உடைய இந்தப் பெரிய மண்டபத்தின் உட்புறம் முழுவதும் ஒரு அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் முழுமையும், தெய்வீகத் திருவுருவங்களாலும், வரலாற்று காட்சிகளாலும் சேது நாட்டு சமுதாய வாழ்வைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாகவும் இந்த மண்டபத்தின் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஏறத்தாழ முன்னுற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும், இந்த சுவர் ஓவியங்கள் புதுமைப் பொலிவுடன் இன்றும் திகழ்ந்து வருகின்றன.
நான்காவதாக, கலைஉள்ளம் கொண்ட இந்த மன்னர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கி வந்தார் என்பதைச் சில வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இராமேஸ்வரம் திருக்கோயிலில் மூன்றாவது பிரகாரத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவரும் இந்த மன்னரே ஆகும். இந்தக் கோவிலின் பள்ளியறையில் சுவாமி அம்பாள் பயன்பாட்டிற்காக 18,000 வராகன் எடையில் வெள்ளி ஊஞ்சல் ஒன்றினையும் செய்து அளித்ததுடன் இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஆடிமாத விழாவின் போது சுவாமியும், அம்மனும் திருவுலா வருவதற்கான திருத்தேர் ஒன்றினையும் புதிதாகச் செய்வித்து அளித்தார். இந்தத் தேர்த் திருவிழாவின் முதலாவது தேர்ஒட்டத்தை இந்த மன்னர் முன்நின்று நடத்தித் தேரின் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார் எனத் ‘தேவை உலா'’ என்ற சிற்றிலக்கியத்தில் காணப்படுகிறது. மேலும் இராமேஸ்வரம் திருக்கோவிலின் உபயோகத்திற்காக மன்னார் வளைகுடாவில் முத்துச்சிலாபக் காலங்களில் இரண்டு தோணிகள் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையையும் ஒரு செப்பேட்டின் மூலம் இராமேஸ்வரம் கோவிலுக்குத் தானம் வழங்கியுள்ளார்.
இவை தவிர இராமநாதபுரம் ஆதிமுத்துராமலிங்க சுவாமி திருக்கோவில் இந்த மன்னரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிவாசகப் பெருமானால் திருப்பணி செய்யப்பட்டு திருவாசகப் பாடல்கள் பெற்ற திருப்பெருந்துறை ஆள்உடைய பரம சுவாமி ஆலயத்திற்கும் அந்தக் கோவிலினை நிர்வகித்து வருகின்ற திருவாவடுதுறை ஆதினத்திற்குமாகப் பல ஊர்களைக் குத்தகை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் அறக்கொடைகளாக வழங்கியுள்ளார். தஞ்சை மண்டலத்தில் உள்ள திருமறைக்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு மண்டபத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளார் இன்றும் அந்த மண்டபம் சேதுபதி மண்டபம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயத்திற்கு நம்பியூர் மாகாணத்து அன்னவாசல் என்ற ஊரினைத் தானமாக வழங்கியிருப்பதைத் திருவாரூர் கோயில் செப்பேடு ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ளே அமைந்து உள்ள கோதண்டராமசுவாமி ஆலயத்திற்குக் காாாம்பல் என்ற கிராமத்தைத் தானமாக வழங்கியது இந்த மன்னரது சமரச மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடன் அந்தக் கோவிலின் பராமரிப்புச் செலவிற்காகச் சேதுநாட்டுப் பெருங்குடி மக்கள் ஆண்டுதோறும் எவ்வளவு கலம் நெல் இந்தக் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததுடன் இடையர்குடியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் எவ்வளவு படி நெய்கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததை ஒரு செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.
இந்த மன்னரது இறை பக்தியையும் அறஉணர்வையும் வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி ஒன்று வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இராமேஸ்வரத்திற்குச் சேதுபாதை வழியாக கால்நடையாக மண்டபம் தோணித் துறைச் சத்திரத்திற்கு வந்துசேரும் பயணிகள் கடலைக் கடந்து இராமேஸ்வரம் சென்று தங்களது பயணத்தை முடித்து வந்தனர். இவர்களது செளகரியத்திற்காகத் தோணித்துறையிலிருந்து பாம்பன் கரைக்குப் படகுகளை இயக்குவதற்கும் பாம்பன் சத்திரத்தில் தங்கிய இந்தப் பயணிகள் இராமேஸ்வரம் செல்வதற்கும் வசதிகளைச் செய்வதற்காக தண்டத் தேவர் என்ற ஒருவரை இராமேஸ்வரம் தீவு ஆளுநராக நியமனம் செய்தார். இவர் மன்னரது இரு பெண் மக்களையும் மணந்தவர்.
நாளடைவில் தண்டத்தேவர் பாம்பனுக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் சாலை வசதி ஏற்படுத்துவதற்காக இராமேஸ்வரம் பயணிகளிடம் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக வசூலித்து வந்தார். மன்னரது ஒப்புதல் இல்லாமல் தண்டத்தேவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைக் கேள்விப்பட்ட மன்னர் மிக்க ஆத்திரம் அடைந்தார். அதனை மிகப்பெரிய சிவத்துரோகமாகக் கருதித் தண்டத்தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். திருவாரூர்ப் புராணத்தில் சொல்லப்படுகின்ற மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக இந்தச் சேதுபதி மன்னர் நடந்து கொண்டதால் அவரை மனுநீதி சேதுபதி என மக்கள் அழைத்தனர்.
இவ்விதம் நிர்வாகத்தில் மிகக் கடுமையான நேர்மையுடன் நடந்து வந்த இந்த மன்னர் உள்நாட்டு மக்களது அவலங்களைத் தீர்ப்பதற்கும் முயன்று வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. மதுரைச் சீமையிலிருந்து கிழக்கு நோக்கிச் சேதுபதியின் சீமை வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமம் ஆகின்ற வைகை ஆற்றின் நீரினைச் செம்மையாக பயன்படுத்துவதற்காகத் திட்டம் ஒன்றை வகுத்து நிறைவேற்றினார். அதன் முடிவு தான் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள பெரிய கண்மாய் என்ற நீர்த்தேக்கம் ஆகும். இதற்கு ஸ்ரீ இராமபிரானது பெயரால் இரகுநாத சமுத்திரம் என்று பெயர் சூட்டியதை அவரது செப்பேடு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது.
இதனைப் போன்ற மிகப் பரந்த வறண்ட நிலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த முதுகளத்தூர் வட்டத்தின் மேற்கு கிழக்குப் பகுதிகளை வளமைமிக்க கழனிகளாக மாற்றுவதற்கு மற்றுமொறு திட்டத்தை இந்த மன்னர் வகுத்தார். கமுதிக்கோட்டைக்குத் தெற்கே கிழக்கு மேற்காகச் செல்லும் குண்டாற்றின் வடகரையில் ஒரு கால்வாயினை அமைத்து அதன் மூலம் முதுகளத்தூர் இராமநாதபுரம் வட்டங்களின் பகுதிகள் குண்டாற்று நீரினால் பயனடையுமாறு செய்தார். இந்தக் கால்வாய்க்கு ரெகுநாத காவேரி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கால்வாய் ஏறத்தாழ 30 கல் தொலைவில் கிழக்கேயுள்ள களரிக் கண்மாயில் முடிவடைகிறது.
இவர் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார் என்பதற்குச் சான்றாக மதுரைச் சொக்கநாதப் புலவரின் பணவிடுதூது, தேவை உலா ஆகிய இருநூல்கள் இருந்து வருகின்றன.
இவ்விதம் சமுதாயத்திற்கும் தெய்வீகத்திற்கும் தமது அரசுப் பணியை உட்படுத்தி வந்த இந்த மன்னருக்கு எதிரியாகப் பவானி சங்கரத் தேவர் எழுந்தது ஆச்சரியம் இல்லை. ரெகுநாத கிழவன் சேதுபதியின் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காததால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட பவானி சங்கரத் தேவர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களது உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் மரணம் அடைந்தார். இது நிகழ்ந்தது கி.பி.1725ல்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel