←i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. இராமன் இல்லாத அயோத்தி

iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு→

 

 

 

 

 


418954சேதுபதி மன்னர் வரலாறு — ii. இராமன் இல்லாத அயோத்திஎஸ். எம். கமால்

 

 

II இராமன் இல்லாத அயோத்தி

இதற்கிடையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதிகளில் மிகுந்த இராஜ விசுவாமுடைய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவர் மன்னரைத் திருச்சிச் சிறையிலிருந்து தப்புவிப்பதற்கான இரகசிய முயற்சிகளில் ஈடுபட்டார். சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் எப்பொழுதுமே இராச விசுவாசத்திலும் பராம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர் போன ஊர். கி.பி. 1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேதுநாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்தபோது நிர்வாகத்திற்குப் பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்தப் பகுதிக்குள் அந்நியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள். அத்தகைய ஊரில், பிறந்தவர்தான் தளபதி மயிலப்பன் சேர்வைக்காரர். சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். இவரது இயற்பெயரும் மயிலப்பன் என்பதல்ல. இவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பகுதியில் பேரும் புகழும் படைத்து வாழ்ந்த மயிலப்பன் என்ற பெருமகன் பெயராலேயே இந்தப் பெயர் இவருக்கு வழங்கப்பட்டு வந்தது.
மயிலப்பனது முயற்சிகள் பலனளிக்காததால் திருச்சியிலிருந்து சேதுநாடு திரும்பியபின் முதுகளத்துரா பகுதி மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இவரது திட்டத்தைப் பின்பற்றிய மறக்குடி மக்கள் கி.பி. 1796இல் முன்பு சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி இறைகளை ஆங்கிலக் கும்பெனியாருக்குக் கொடுக்க மறுத்தனர். அடுத்தபடியாக 1797ல் கும்பெனியார், குடிமக்களது நிலங்களைப் புதிய முறையில் நில அளவை செய்யும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். இத்தகைய கிளர்ச்சிப் போக்குகளை இராமநாதபுரம் சீமை கலெக்டரான காலின்ஸ் ஜாக்சன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். இதனால் சிறிது காலம் சோர்வுற்றிருந்த குடிமக்கள் மீண்டும் மயிலப்பன் சேர்வைக்காரரது போதனைகளினால் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.
சித்திரங்குடி சேர்வைக்காரரின் புரட்சி
1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வைகறைப் பொழுதில் மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பணியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்தும் சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கித் துணிகளைச் சூறை போட்டனர். இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியைத் தாக்கியதுடன் பெரிய நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர்.
இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்தப் பகுதியில் ஆங்காங்கு குடிமக்களிடமிருந்து தீர்வையாகப் பெற்றுச் சேமித்து வைத்திருந்த நெல் கொட்டாரங்கள் அனைத்தையும் மக்கள் கொள்ளையிட்டனர். தகவலறிந்த கலெக்டர் லூசிங்டன் அந்தப் பகுதி நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இயலாதவாறு செய்திப் போக்குவரத்துகளையும் துண்டித்து விட்டனர். காமன்கோட்டை வழியாக இராமநாதபுரத்திலிருந்து கர்னல் மார்ட்டின்ஸ் அழைத்துச் சென்ற போர் வீரர்களது அணியும் கமுதிக்குச் செல்ல முடியாமல் திரும்பிவிட்டது இதனால் மிகவும் கலவரமடைந்த இராமநாதபுரம் கலெக்டர் பாளையங்கோட்டைக்கு அவசரத் தபால்களை அனுப்பி அங்கிருந்து கும்பெனியார் அணிகள் முதுகளத்துர் பகுதிக்குப் புறப்பட்டு வருமாறு செய்தார். கும்பெனி அணிகளுக்கும். கிளர்ச்சிக்காரர்களுக்கும் கமுதி. கிடாத்திருக்கை, முதுகளத்தூர், கருமல் ஆகிய பகுதிகளில் நேரடியான மோதல்கள் ஏற்பட்டன. 42 நாள்கள் இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்துர் கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றதுடன் கும்பெனித் துருப்புக்களையும் எதிர்த்துப் போராடினார். இந்தக் கிளர்ச்சிகளின் கொடுமுடியாக நடந்த கமுதிக் கோட்டைச் சண்டையில் எதிர்பாரா நிலையில் எட்டையபுர வீரர்களும் சிவகங்கைச் சீமை வீரர்களும் கலந்து ஆங்கிலேயருக்கு உதவியதன் காரணமாக கிளர்ச்சிக் காரர்களுக்குக் கடுமையான சேதமும் தோல்வியும் ஏற்பட்டன. கமுதிக் கோட்டையிலிருந்து வடகிழக்கேயுள்ள கீழ்க்குளம் காடுகள் வரை கிளர்ச்சிக்காரர்களது சடலங்கள் சிதறிக் கிடந்தன. இந்தக் கிளர்ச்சியில் தீவிரப் பங்கு கொண்ட சிங்கன்செட்டி, ஷேக் இபுராஹிம் சாகிபு என்ற அவரது தோழர்கள் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்தப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியார் முயன்றனர். மயிலப்பன் சேர்வைக்காரரைத் தவிர அனைத்துக் கிளர்ச்சிக் காரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியில்லாமல் மயிலப்பன் சேர்வைக்காரர் மாறு வேடத்தில் சோழநாட்டிற்குச் சென்றார். எட்டு மாதங்கள் கழித்து மயிலப்பன் சேர்வைக்காரர் மறவர் சீமைக்குத் திரும்பினார். அதுவரை கும்பெனியாருக்கு உற்ற தோழர்களாக இருந்த சிவகங்கைப் பிரதானிகள் மருது சேர்வைக்காரர்கள் அப்பொழுது கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்ததை மயிலப்பன் உணர்ந்தார். அவர்களது வேண்டுகோளின்படி, அவர்களது அணியில் நின்று பாடுபட்டதுடன், பாஞ்சைப் பாளையக்காரர்கள், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது அந்நிய எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மயிலப்பன் சேர்வைக்காரரது நடவடிக்கைகளையும், அவர் மருது சகோதரர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு புரிந்துகொண்ட கலெக்டர் லூசிங்டன் மயிலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினர். ஏற்கனவே கும்பெனியாரை இறுதியாக எதிர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மருது சகோதரர்கள் கலெக்டர் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
மருது சகோதரர்களது இறுதி முயற்சியான காளையார் கோவில் போரில் 02-10-1801 ஆம் தேதி தோல்வியுற்றபின் 24-10-01 இல் தூக்கிலிடப்பட்டனர். அவர்களைச் சார்ந்திருந்த மக்கள் தலைவர்களில் பிரபலமான மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரையும், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரையும் பிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகளில் கும்பெனித் தலைமை இறங்கியது. முத்துக்கருப்பத் தேவர் கைது செய்யப்பட்டதால், தன்னந் தனியாக மயிலப்பன் சேர்வைக்காரர் முதுகளத்துர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றித் திரிந்தார். அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு 6.8.1802 இல் அபிராமத்தில் துக்கிலிடப்பட்டார். இவ்விதம் சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காகச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையெல்லாம் அறிந்த சேதுபதி மன்னர் சென்னைக் கோட்டையி லிருந்தவாறு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக 23-01-1809 ஆம் தேதி இரவில் மன்னர் காலமானார்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel