தமிழகத்தின் வரலாற்றில் மூவேந்தர்களுக்கும் பல்லவர்களுக்கும் அடுத்தபடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள் ஆவர். இந்த மன்னர்கள் சமயத் துறையிலும், சமுதாயப் பணிகளிலும் தமிழ் வளர்ச்சியிலும் மகத்தான தொண்டினை ஆற்றி இருக்கின்றனர். குறிப்பாக 17,18,19 வது நூற்றாண்டுகளில் தமிழகத்தை அந்நியர்களான வடுகர்களும், மராட்டியர்களும், ஆற்காட்டு நவாப்பும் சீர்குலைத்து வந்த நிலையில் தெய்வ சிந்தனையுடன் மக்கள் நலத்தை மதித்துப் போற்றி வந்த இந்த மரபினரது செயல்கள் என்றும் மறக்க முடியாதவை.

கி.பி.11.12 ஆம் நூற்றாண்டுகளில் வரலாற்றை அலங்கரித்த சோழப் பேரரசு நிலைகுலைந்த பிறகு பிற்காலப் பாண்டியர்கள் வலுவிழந்து வளமையிழந்து ஒடுங்கியிருந்தனர். ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சிறிய தன்னரசின் மன்னர்களான சேதுபதிகள் மிகச் சிறந்த சாதனைகளை இயற்றியுள்ளனர். திரு உத்திர கோசமங்கை, இராமேஸ்வரம், திருவாடானை, திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் விண்ணை அளாவிய இராஜ கோபுரங்களுடன் காட்சியளிக்கும் அந்தத் திருக்கோயில்களே அவர்களது தொண்டிற்குச் சாட்சியாக நின்று வருகின்றன.

இந்தத் திருக்கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் ஆறுகால, ஐந்து கால வழிபாடுகளுக்கும் ஆண்டு விழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றுக்கும் இந்த மன்னர்கள் வழங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஊர்களின் வருவாய்களிலிருந்து இன்னும் இந்தத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைப் போன்றே இந்த மன்னர்கள் திருமடங்களுக்கும் அன்ன சத்திரங்களுக்கும் பள்ளி வாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் பல கிராமங்களைச் சர்வ மானியமாக வழங்கியுள்ளனர். ஆனால் இந்த அறக்கொடைகளைப் பற்றிய விவரங்களைத் தருகின்ற ஆவணங்கள் பல கிடைத்தில. என்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள், பதிவேடுகள், சென்னை தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடுகள், ஒலை முறிகள், கல்வெட்டுக்கள் ஆகியவைகளில் இருந்து தொகுக்கப்பட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கண்டுள்ள அறக்கொடைகளைத் தவிர இன்னும் ஏராளமான அறக்கொடைகள் பற்றிய விவரங்களைக் காட்டுகின்ற ஆவணங்கள் பல இருந்து அழிந்து இருக்க வேண்டும். இந்த மன்னர்கள் சேது நாட்டு மக்களிடையே நல் உறவையும், தெய்வீகச் சிந்தனையையும் வளர்ப்பதில் தொண்டாற்றிய புலவர்கள், பண்டிதர்கள். அவதானிகள் மற்றும் மகா ஜனங்களுக்கும் இவர்கள் வழங்கிய சர்வமானியங்கள் - அகரப்பற்று. சதுர்வேதி மங்கலங்கள், ஜீவித காணிகள் ஆகியவைகள் பற்றிய அறக்கொடை விவரங்களுக்கான பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் சமண சமயத்தினரின் பள்ளிகளுக்கும் வழங்கிய பள்ளிச் சந்தம் என்ற வகை அறக்கொடை பற்றிய குறிப்புக்கள் கிடைத்த பொழுதிலும் அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறாதது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். குறிப்பாகச் சேதுபதிச் சீமையில் சமணர்களின் குடியிருப்புக்கள் அரியாண்குண்டு. மெய்யன் பள்ளி, அச்சன்பள்ளி, அறப்போது, முகிழ்த்தகம். நாகணி, நாகன்வயல், நாகமங்கலம், சாத்தன்பள்ளி, காட்டுச்சந்தை, அன்னவாசல், அரியன் ஏந்தல், அனுமந்தக்குடி, குணபதி மங்கலம், மச்சூர் ஆகிய கிராமங்களில் அமைந்திருந்ததை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களிலிருந்து திருக்கோயில்களுக்கு என தொகுக்கப்பட்டுள்ள சேது மன்னர்களது அறக்கொடைகள் நீங்கலாக சேது சமஸ்தானத்தின் பதிவேடு ஒன்றின் படி 11 கட்டளைகளும் இணைப்பு ‘அ’ சமஸ்தானத்தைச் சேர்ந்த 59. திருக்கோயில்களுக்கு கோயில்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள 311. அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘ஆ’ கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு இராமநாதபுரம் சமஸ்தானம் பதிவேட்டின் படி 28 அன்னசத்திரங்களுக்கு இந்த மன்னர்கள் வழங்கிய 61 அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘இ’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் அ ஆ இ களில் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கொடைகள் எந்தெந்த மன்னர்களால் எப்பொழுது வழங்கப்பட்டன என்பதற்கான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை

கருத்துக்கள்
இதுபோன்ற மேலும் கதைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு எங்கள் தந்தி குழுவில் சேரவும்.telegram channel