6. எச்சில் இலை எடுத்த இறைவன்

பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்திருந்தனர்.
“சபையில் முதலில் பூசிக்கத் தகுதியுடையவர் யார்?” என்று ஒரு வினா எழுந்தது.
பலகலை வல்லவனான சகாதேவன் எழுந்து, “ஆன்றோர்களே அரசர்களே”
"இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசை பெறத் தகுதியுடையவன் ஆவான்"
“அத்தகையவன் நம்மிடையேயுள்ள கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அவருக்கே பூசை செய்வோம். அப்படிச் செய்தால், எல்லா உயிர்களுக்கும் செய்ததாகும்” என்றான்.
அவன் சொல்லியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிசுபாலன் என்பவன் மட்டும் எதிர்த்தான்.
அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர்.
நிலைமை கொந்தளிப்பானதை அறிந்த கண்ணன், தன் சக்கரத்தால் சிசுபாலனை அழித்தார்.
பின்னர், சகாதேவன் சொல்லியபடியே கண்ணனுக்கு முதல் பூசை செய்தனர்.
கண்ணன் ஓர் இரத்தின சிம்மாதனத்தில் அமர்ந்த காட்சி அனைவருடைய கண்களுக்கும் விருந்தானது.
இராசசூய வேள்வியின் பிறி செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். ஒருபுறம் பல்லாயிரவருக்கு விருந்து நடந்துகொண்டிருந்தது. 
இரத்தின சிம்மாதனத்தில் வீற்றிருந்த கண்ணனைக்
காணவில்லை. முதல் பூசை பெற்ற கண்ணன் எங்கே! என்று
எல்லோரும் தேடலாயினர்.
நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.
இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் தென்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பாற் கொட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். முதற்பூசை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா என்று எல்லோரும் வியந்தனர்.
“கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் உள்ளனரே! நீ வந்து எடுக்கலாமா? முதற்பூசை பெற்ற உன்னை எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா! உடனே நிறுத்து. எச்சில்பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு, சிம்மாதனத்திலிருந்து திருக்காட்சி தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.
“எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா?” ஏவலர் எடுக்கும்போது அக்கறையில்லாமல், இங்கும் அங்கும் ஒழுக விட்டுத் தரையைச் சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்தால் மறுபந்திக்கு இடையூறு நேராதா!  ஆதலால், எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று ஏவலர்க்குச் செய்து காட்டினேன். சொல்லிக்காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே மிகப் பயனுடையதல்லவா?
“அதுமட்டுமா? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா? முதல் பூசை பெறுவதும் ஒரு தொழில் தான், எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில் தான். இரண்டுள்ளும் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூசை பெற்ற நான், எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதுவேனானால் பெற்ற முதல்பூசை தகுதிக்காகப் பெற்றதாகுமா? பகட்டுக்காகப் பெற்றதாகத் தானே இருக்கும்” என்றான் கண்ணன். 
கண்ணன் செயலும் வாக்கும் அவன் கூறியருளிய பகவத் கீதையின் சாரமாக அமைந்தது என்று ஞானிகளாகிய சகாதேவன் முதலியோர் பாராட்டினர்.
கண்ணனுக்கு முதல்பூசை தந்தது எவ்வளவு தகுதியானது என்று எண்ணி எண்ணி இன்புற்றனர்.
இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சி காந்தியடிகள் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதை இங்கு ஒப்பிட்டுக் காண்பது பயனுடையதாக இருக்கும்.
அடிகள் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகச் சத்தியாக்கிரகம் என்னும் புதுமுறைப் போர் நிகழ்த்தி ஓரளவு வெற்றி கண்டு இந்தியர்க்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தந்துவிட்டு நம்நாட்டுக்கு மீண்டார்.
அவர்தம் செயற்கரிய செயல்கண்டு நம்நாட்டு மக்கள் மகாத்மா என்று பாராட்டினர். கண்ணபிரானின் மறு அவதாரம் என்று கொண்டாடினர்.
அடிகள் இந்தியா வந்த சமயம் காங்கிரசு மாநாடு நடந்தது. மாநாட்டில் காந்தியடிகளுக்கு அளவில்லாத பாராட்டும் மரியாதையும் தரப்பட்டன. தலைவர்கள் அனைவரும் அண்ணலின் ஆலோசனைப்படி நடப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.
மாநாடு தொடங்கியது. தலைவர் பலர் பேசினர். காந்தியடிகள் பேசவேண்டிய முறை வந்தது. காந்தியடிகள் எங்கே? மேடையில் காணோம். எங்கும் தேடலாயினர். தென்படவே இல்லை.
இறுதியில் கழிப்பிடப்பகுதியில் கையில் வாளியும் விளக்குமாறும் வைத்துக் கொண்டு கழிப்பிடத்து அழுக்குமலம் அள்ளி அள்ளித் தூரத்தே கொட்டிக் கொண்டிருக்கக் கண்டனர்.
"ஐயோ! இது என்ன காரியம் செய்கின்றீர்கள் மகாத்மா ஆகிய நீங்கள் கண் காட்டினால் கணக்கில்லாதவர் காரியம் செய்யக் காத்துள்ளனரே! நீங்கள் மேடையில் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. உடனே குளித்து உடை மாற்றிக் கொண்டு வாருங்கள். தாங்கள் இக்காரியம் செய்கின்றோம்" என்று ஆளுக்கொரு வாளியும் விளக்குமாறும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் தாரியத்தில் இறங்கினர். 
"கழிப்பிடப் பகுதியைப் பார்த்தேன். பொதுமக்கள் மட்டுமல்லர் அவர்களுக்கு வழிகாட்டவேண்டிய தலைவர்கள் கூடக் கண்ட கண்ட இடங்களில் அகத்தம் செய்கின்றனர். இதைச் சொல்லினால் திருத்த இயலாது. செயலால் தான் திருத்த இயலும் என்று தோன்றியது. அதனால்தான் இச்செயலில் இறங்கினேன். 
"மேடையில் மாலை போட்டுக் கொண்டு பேசுவதற்கும். கழிப்பிடம் சுத்தம் செய்வதற்கும் வேறுபாடே இல்லை. தொழில் என்ற முறையில் இரண்டும் சமந்தான். கூர்ந்து நோக்கினால் மேடையில் பேசுவதைவிடக் கழிப்பறையைச் சுத்தம் செய்வதே இன்றியமையாத தொழில். மேலான தொழில் என் சொல்லுக்குக் கூட இவ்வளவு பயன் விளைந்திருக்காது. செயல் பல தலைவர்களுடைய மனப்போக்கை மாற்றியமைத்துள்ளது கண்டு மகிழ்கின்றேன்" என்று அண்ணல் கூறிவிட்டு மேடையேறித் தம் கடமையைச் செய்தார். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel