21. அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் 
பாண்டவரும் கெளரவரும் துரோனரிடம் வித்தை பயின்றனர். பாண்டவர் புத்திசாலிகள் ஆகையால், வித்தையில் மிகமிகச் சிறப்புற்றனர். கெளரவர் எவ்வளவு முயன்று கற்றும் பின் தங்கியே நின்றனர்.
ஐராவத பூசைப் பெருவிழா நடத்தினால் தாங்களும் பாண்டவர்போல் புத்திசாலிகளாகலாம் என்று கெளரவர் கருதினர்.
பெரும் பொருட் செலவு செய்து, ஐராவத யானையின் உருவமைத்துப் பூசை செய்துமுடித்தனர்.
தானம் தட்சினைகள் தாராளமாக வழங்கினர். 
இதைக் கண்ட குந்தி தேவிக்கும் ஓர் ஆசை பிறந்தது. நம் மக்களும் இத்தகைய ஐராவத பூசை செய்தால் சிறப்படையலாமே என்று சிந்தித்தாள். ஆனாலும் நாம் கெளரவர் போல் பெரும் பொருட்செலவு செய்ய இயலாதே! என்று கவலையுற்றாள்.
அன்னையின் கவலை அறிந்த அர்ச்சுனன், அக்கவலையைக் கண்டிப்பாகத் தான் போக்குவதாக உறுதி அளித்தான்.
கெளரவர் செய்த பூசையைவிடப் பலமடங்கு சிறப்பாகச் செய்து காட்டவேண்டும் என்று கருதினான் அர்ச்சுனன்.
ஐராவதத்தின் உருவத்தைத் தானே அவர்கள் பூசித்தார்கள்? நாம் ஐராவத யானையையே நேரில் கொணர்ந்து பூசிப்போம் என்பது அவன் திட்டம்.
ஐராவதத்தை வரவழைப்பது எப்படி?
தேவர் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதினான் அர்ச்சுனன். அதைத் தன் அம்பில் பூட்டி விண்ணுலகுக்கு ஏவினான். 
தேவேந்திரன் சபையில் அவன் காலடியில் சென்று விழுந்தது அக்கடிதம். 
“அன்புள்ள தந்தையே! கெளரவர்கள் எங்களுக்கு இழைத்துவரும் தீமைகள் கொஞ்சமல்ல என்பதை அறிவீர்கள். அண்மையில் ஐராவத பூசைவிழா நடத்திப் பெரும் புகழ் பெற்றமையால் இறுமாப்பு அதிகமாகி விட்டது. அந்த இறுமாப்பினால், எங்களுக்கு மேலும் பல தீமைகள் செய்யத் திட்டம் தீட்டி வருகின்றனர்.
கெளரவர் எடுத்த விழாவைவிடச் சிறப்பாக நாங்கள் விழா கொண்டாடினால்தான் அவர்கள் கர்வம் அடங்கும். எங்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பர்.
ஐயா! ஆதலால், தங்கள் ஐராவதத்துடன் தாங்களும் விழாவுக்கு வந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகின்றேன்”
என்று அக்கடிதத்தில் எழுதப்படட்டிருந்தது.
கடிதத்தைக் கண்ட இந்திரன் புறப்படத் தயாரானான். தேவலோகத்திலுள்ள தன் பரிவாரங்களையும் உடன் வருமாறு கூறினான்.
மானிடர் அழைப்பை வானவர் ஏற்பது இழிவான செயல் என்று அவர்கள் வர மறுத்தனர். ஏன்? இந்திரன் மனைவி இந்திராணி கூட வர மறுத்தாள்.
தேவேந்திரன் என்ன செய்வான்? அப்போது அங்கு வந்த நாரதரிடம்  “நாரதபகவானே! அர்ச்சுனன் நடத்தும் பூசைக்கு வரத் தேவர் ஒருவரும் இசையவில்லை. நான் மட்டும் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக எப்படிச் செல்வது? இதற்கு ஒரு வழி நீவிர்தான் கூற வேண்டும்” என்றான் இந்திரன்.
தேவர்கள் வர மறுத்த செய்தி, நாரதர் மூலம் அறிந்த அர்ச்சுனனுக்குச் சினம் மூண்டது. விண்ணுலகத்தை நோக்கித் தன் காண்டீபத்தின் அம்புகளைச் செலுத்தலானான். 
அம்பின் அடிபொறுக்க முடியாத தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தங்கள் குருவாகிய வியாழ தேவரை அணுகினர். என்ன செய்யலாம்? அர்ச்சுனன் சினத்திலிருந்து எப்படித் தப்பலாம் என்று யோசனை கேட்டனர்.
வியாழபகவான் கூறிய அறிவுரையால் தேவர்கள் அனைவரும் ஐராவத யானையுடன் பூசை நடக்கும் இடத்துக்கு வந்தனர். அர்ச்சுனன் அம்புகளால் ஆகாயம்வரை ஒரு ஏணி அமைத்தான். அதன் வழியாக மகளிரும் மைந்தரும் சுகமாக இறங்கி வந்தனர்.
பூசைக்குரிய செலவு முழுவதும் விண்ணவர் ஏற்றுக் கொண்டனர். கெளரவரின் பூசையை விடப் பலமடங்கு சிறப்பாகப் பாண்டவர் பூசை அமைந்தது.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். கெளரவர் மட்டும் பொறாமைத் தீயில் வெதும்பினர் என்று சொல்லவும் வேண்டுமோ? 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel