30. கண்ணனை காட்டிக் கொடுத்த மணிகள்
தீராத விளையாட்டுப் பிள்ளை எனப் பெயர் பெற்றவன் கண்ணன். நவநீதசேரன், வெண்ணெய்த்திருடன் என்ற பட்டப் பெயர்களும் உண்டு.
ஆயர் வீடுகளில் வெண்ணெயை உறியில் தான் வைப்பார்கள். வீடுகள் என்பது சிறு குடிசைகள் தாம். கதவு வெறும் படல் தான். ஆயரில் ஆண்கள் காலிகளை மேய்க்கச் சென்று விடுவர்.
ஆய்ப்பெண்கள், பால், மோர் விற்கப் போய்விடுவர். வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இந்த நேரத்துக்காகக் காத்திருப்பான் கண்ணன். படலைத் தள்ளி உள்ளே புகுந்து, உறியில் உள்ள வெண்ணெய் முழுவதும் திருடி உண்டுவிடுவான்.
ஆய்ச்சியர் வந்து கேட்டால், நான் ஒன்றும் அறியேன் என்று சொல்லி விடுவான்.
வெண்ணெய் திருடு போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆய்ச்சியர் யோசித்தனர். கண்னன்தான் திருடுகின்றான் என்பதும் தெரியும் ஆயினும் கையும் களவுமாக அல்லவா பிடிக்க வேண்டும்
வீட்டிலுள்ள உறிகளில் மணிகளைக் கட்டி வைக்க வேண்டும். கண்ணன் திருடும்போது, மணி ஓசை எழுப்பும், அந்த ஒலி கேட்டு ஓடிச் சென்று கண்ணனைக் கையும் வெண்ணெயுமாகப் பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தனர்.
சிந்தித்ததை உடனே செயல்படுத்தினர் ஒவ்வொரு வீட்டிலும் உறிதோறும் வெண்கலமணி கட்டப்பட்டது. எப்போதும் போல், கண்ணன் வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுப் படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உறியில் மணி கட்டியிருப்பதை பார்த்தான்
வெண்ணெய் எடுத்தால், மணியொலித்துவிடும். உடனே மணி ஒலித்துவிடும். உடனே ஆய்ச்சியர் வந்து பிடித்து கொள்வர். மணி ஒலிக்காமலிருக்க என்ன செய்யலாம் என்று உபாயம் தேடினான்.
மணியைப் பார்த்து. “மணியே! மணியே! நான் வெண்ணெய் எடுக்கும் வரை நீ ஒலிக்காமல் இரு! உனக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று மணியிடம் வேண்டினான்.
மணியும் சம்மதித்தது
கண்ணன் உறியில் கைவிட்டு வெண்ணெயைக் கையில் எடுத்துக் கொண்டான். அதுவரை சொன்னவாக்குப்படி மணி ஒலிக்காமல் இருந்தது.
“இனியாரும் நம்மைப் பார்க்க இயலாது வெண்ணெயை ஆர அமர உண்ணலாம்” என்று மகிழ்ந்த கண்ணன், வெண்ணெயை வாயில் வைத்தான்.
வைத்தது தான் தாமதம். உடனே மணி வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.
கண்ணன் மணியைப் பார்த்து, “ஏ மணியே சொன்ன வாக்குத் தவறலாமா? ஒலிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது உரக்க ஒலிக்கின்றாயே ஆய்ச்சியர் வந்துவிடுவார்களே இப்படி என்னைக் காட்டிக் கொடுப்பது ஞாயமா?” என்று கேட்டான்.
“கண்ணா! நீ வெண்ணெய் எடுக்கும்போது தானே ஒலிக்க வேண்டாம் என்றாய்! நான் எடுக்கும் போது ஒலிக்கவில்லையே நீ உண்ணும்போது தானே ஒலித்தேன். இது எப்படி வாக்குத் தவறியதாகும்?”
“அது மட்டுமல்ல. ஆலயங்களில் இறைவன் நிவேதனம்(உணவு) கொள்ளும்போது, நான் ஒலிப்பது வழக்கம் அல்லவா? நான் ஒலிக்கலாகாது என்று இருந்தாலும் நெடுநாளாகத் தொடர்ந்து வரும் வழக்கம் மாறுமா? மாற்றத்தான் முடியுமா? மாற்றுவது மரபு ஆகுமா?” என்று மணி விரிவுரை நிகழத்தியது
அதற்குள் ஆயச்சியர் மணியோசை கேட்டு ஓடிவந்து, கண்ணனைப் பிடித்துக் கட்டி தாய் யசோதையிடம் புகார் செயய் அழைத்துச் சென்றனர்
இத்தகைய எத்தனையோ சுவையான கண்ணன் விளையாடலைப் பற்றிய செய்திகள் நாட்டுப்புறக் கதைகளாக வழங்கி வருகின்றன
பெரியாழ்வாரும், பாரதியாரும் பல கற்பனைகள் கலந்து கண்ணன் திருவிளையாடல்களுக்கு மெருகூட்டியுள்ளனர்