16. காய்ந்த விறகு ஈந்த ஈர நெஞ்சன்
ஒரு நாள் ஒர் இரவலன் கர்ணனிடம் வந்து “ஐயா! ஒருவார்மாக மழை பெய்து கொண்டே உள்ளது. வீட்டில் அரிசியிருந்தும் பொங்குவதற்கு விறகு இல்லாமையால் பட்டினி கிடக்கின்றோம். காய்ந்த விறகு சிறிது கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்று வேண்டினான்.
கர்ணன் அங்க நாட்டு அரசன். அரசன் அரண்மனையில் விறகு இருக்குமா? ஆயினும் “இல்லை” என்ற சொல்லை அறியாத கர்ணன், அந்த இரவலனுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
அருகிலிருந்த நண்பர் ஒருவர் “கர்ணன், இந்த இரவலனுக்கு இல்லை என்று சொல்வதைத் தவிர வேறு வழிஇல்லை. இல்லை என்று சொல்லத்தான் போகின்றான்” என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆனால், கர்ணன் அந்த நண்பரின் நினைவைப் பொய்யாக்கிவிட்டான்.
அரண்மனைத் தாழ்வாரத்தில் போட்டிருந்த கை மரங்களில் சிலவற்றைப் பிரித்தெடுத்தான். நன்கு காய்ந்திருந்த அவற்றை அந்த இரவலனுக்குக் கொடுத்தனுப்பினான்.
அதைக் கண்ட நண்பர், வள்ளல் தன்மைக்கு ஒருவன் என்று உலகம் கர்ணணைப் பாராட்டுவது சரிதான் என்று எண்ணி விடை பெற்றார்.