9. தருமனின் ஆணவம்
கருவம் என்பது ஒரு பேய். எவ்வளவு பெரிய ஞானியரையும் பற்றிக் கொள்ளும். தருமமே உருவமான யுதிட்டிரனைக் கூட அந்தக் கருவம் பற்றிக் கொண்டது.
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் கண்ணன் தருமன் மனநிலை அறியமாட்டானா?
தருமன் ஆயினும் கருவம் வந்தால் தாழ்ந்து போவானே! அவன் கொண்ட கருவத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று கண்ணபிரானது கருணை உள்ளம் கருதியது.
ஒரு நாள் கண்ண்பிரான், தருமனைப் பாதல உலகிற்கு அழைத்துச் சென்றான்.
இறைவன் உலகம் அளந்தபோது, மூன்றாவது அடிக்கு இடமாகத் தன் தலையையே தந்தவன் மாவலி அவனை இறைவன் பாதலத்து அழுத்தி, அங்கு அரசனாக்கினான்.
பாதலத்துக்குத் தருமனுடன் சென்ற கண்ணன், முதலில் ஒரு சிறு வீட்டு வாசலில் நின்று. தாகத்துக்குத் தண்ணீர் கேட்டான். அந்த வீட்டுக்கரசி, இரு பொற்கலயங்களில் தண்ணீர் கொடுத்தாள். இவர்கள் இருவரும் நீர் பருகிவிட்டுப் பொற்கலயங்களை அவளிடம் தந்தனர். அவற்றை வாங்கிய அவள் தூரத்தே வீசி எறிந்து விட்டாள்.
அவள் செயல்கண்டு வியந்த தருமன், "அம்மா! பொற்கலயங்கள் விலை உயர்ந்தன அல்லவா? அவற்றை வீசி எறிந்து விட்டீர்களே!" என்றான்.
"எங்கள் மாவலி ஆட்சியில் வாழும் நாங்கள். ஒரு முறை பயன்படுத்தியது பொற்கலயமாயினும் மீண்டும் பயன்படுத்த மாட்டோம். வீசி எறியத் தான் செய்வோம்!" என்றாள் அவள்.
"எவ்வளவு செல்வச் செழிப்பு இருந்தால், இப்படி நடக்கும்?" என்று மருட்கை எய்தி கண்ணனைப் பின் தொடர்ந்தான் தருமன்.
மாவலியிடம் தருமனை அழைத்துச் சென்றான் கண்ணன்.
"மாவலி மன்னா! பாதல நாட்டில் நீ பெருங்கொடை வள்ளல். உன் புகழ் பல உலகங்களிலும் பரவியுள்ளது. இதோ என்னுடன் வந்துள்ளாரே! தருமர். இவர் பூவுலகின் ஏக சக்கராதிபதி. கொடையில் உனக்கு ஒப்பானவர். நாடோறும் பல்லாயிரம் பேருக்கு இல்லையென்னாமல் அன்னமும் சொன்னமும் தருகின்றார்!" என்று தருமன் புகழை விரித்தான் கண்ணன்.
கண்ணன் பேச்சைக் கேட்ட மாவலியின் முகம் சினத்தால் சிவந்தது. வெறுப்பால் விளர்த்தது.
"இந்தப் பாவியை இங்கு ஏன் அழைத்து வந்தாய்! இவன் முகத்தில் விழிப்பதே பாவம். உடனே அழைத்துச் சென்றுவிடு!" என்று சீறினான் மாவலி.
தருமனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாவலி ஏன் தன்னை வெறுக்க வேண்டும்? தான் செய்த தவறு என்ன? என்று எண்ணி நாணி நின்றான்.
"இந்தப் பாவி நேர்மையாக ஆட்சி செய்தால் நாட்டில் ஏழைகள் இருப்பரா? இவன் போடும் அன்னத்துக்கும் தரும் சொன்னத்துக்கும் இவனைத் தேடி வருவரா? இவனுக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை என்பது இதனால் விளங்கவில்லையா?
“வரிசைதப்பிய மன்னன் முகத்தில் விழிப்பது பாவந்தானே!" என்று மாவலியே தருமனின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.
தருமன் அங்கு நிற்பானா? கண்ணனுக்கு முன்பு நடையைக் கட்டினான்.
பல்லாயிரம் பேருக்கு அன்னமும் சொன்னமும் தரும் நமக்கு நிகரான அரசர் உண்டா? என்று தருமனிடம் தோன்றிய கருவம் பழங்கதையாய்ப் போனது. தருமனுக்குத் தன்னை இகழ்ந்த மாவலிபால் சினம்
தோன்றவில்லை. தன்னைக் கருவப் படுகுழியிலிருந்து மீட்ட உபகாரி என்று அவனை, அவன் மனம் பாராட்டியது.
“பசு, பால்அளவை மடியில் மறைப்பதுபோல்,
வழிப்போக்கன், மடியில் பணத்தை மறைப்பதுபோல்,
உழவு செய்தவன், விதைநட்டு மண்ணால்
மூடுவதுபோல் நற்செயலால் உனக்கு
வரும் பெருமையை மறை”
ஞானேச்வரி.