15. கர்ணனின் இடக்கைத் தானம்


இன்னும் எத்தனை பிறப்பெடுத்தாலும் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் ஈயும் வரமே வேண்டும். முத்திப் பேறும் வேண்டா என்று கண்ணனிடம் தன் உயிர் பிரியும் நிலையில் வரம் கேட்டவன் கர்ணன்.
இத்தகைய மனபாவம் படைத்தவன் ஆகையாலேயே அவன் தலையெழு வள்ளல்களில் முதன்மை பெற்றான்.
ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான். 
அப்போது ஓர் இரவலன், ‘பிக்ஷாம்தேகி’ (பிச்சையிடுக) என்று வந்தான்.
தங்கக் கிண்ணம் இடது கைப் பக்கமாக இருந்தது. கர்ணன் அதனைத் தன் இடக் கையாலேயே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான். இரவலன் மகிழ்வுடன் சென்றான்.
அருகிலிருந்த நண்பர் ஒருவர், "கர்ணனை நோக்கி  அங்கபூபதியே! இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே! தாங்கள் செய்தது அறநூலுக்கு மாறுபட்டதல்லவா? வலக்கையால் தானே தந்திருக்கவேண்டும்” என்றார்.
“நண்பரே! அந்த அற நூலை நான் நன்கு பயின்றவன் தான். ஆனால், மனித மனம் நிலையில்லாதது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது. இடக்கையருகே உள்ள தங்கக் கிண்ணத்தை அற நூலின்படி வலக்கையால் எடுக்கச் சில நொடிகள் தாமதமாகலாமே! அந்தச் சில நொடிளுக்குள், மனம் மாறிவிடலாமே! இவ்வளவு விலை உயர்ந்த கிண்ணத்தைத் தானமாகத் தரலாமா? என்று மனம் பகுத்தறிவைப் பேசத் தொடங்கிவிட்டால், என்ன ஆவது? என் கொடை தடுமாறிப் போகலாமே! அதனால் தான் இடக்கையால் அளித்தேன்” என்றான் கர்ணன்.
கர்ணனுக்குக் கொடையில் இருந்த ஆர்வம் கண்ட நண்பர் வியப்பில் மூழ்கினார். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel