11. எலும்பு சொன்ன இறை மந்திரம்
ஒரு நாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் "கண்ணா! கண்ணா!" என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் “கண்ணா! கண்ணா!” என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த அற்புத பக்தியை அறிந்த கண்ணன் அவ்விடம் வந்தான். அவன் பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரமன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.
அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தி கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். அர்ச்சுனன் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.
தெய்வப்பற்றுடையவர்கள் தம்மையறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுத்தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் அஞ்சலித்துப் பாராட்டினர்.
காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பான் மண்டையில் அடித்த போது “ஹேராம்!” என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் “ஹேராம்!” என்றார். கோட்சேயின் குண்டு உயிர் பறிக்கும் போதும் “ஹேராம்!” என்றே அவர் வாயில் இறைவன் நாமம் வெளிவந்தது.
இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு இங்கே நினைவு கூர்வது நலம் பயக்கும்.
பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார். அவர் தொழில் செய்யும் போதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் நடக்கும்போதும் நிற்கும்போதும் அவர் வாய் தானாகவே “விட்டல! விட்டல!” என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர்.
இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டு பிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.
இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள்.
ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது திகைத்து நின்றனர் சீடர்கள்.
அப்போது பெருஞாளியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார்.
“சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து “விட்டல! விட்டல!” என்ற ஒலி . வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம்” என்றார் நாம தேவர்.
என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, “விட்டல! விட்டல!” என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.
வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே உள்ளது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சேதாமேளரின் பரமபக்திய்யையும் அறிந்து கொள்ளலாம் அன்றோ?
புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ?