19. சகாதேவனின் தரும நீதி

ஒரு காட்டில் ஒர் அதிசய விலங்கு வாழ்ந்திருந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.
அளவில்லாத வலிமை படைத்த அது. அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
வேற்றாளோ வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவை, அதற்கு இரையாகி விடும்.
ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டில் நுழைய நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது" என்று மகிழ்ந்து வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான். 
அவனைத் துரத்திய புருடமிருகம், அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவன் வலக்கால் தன் நாட்டிலும் இடக்கால் அக்காட்டிலும் இருந்தது.
“நீ என்னைப் பிடித்தது தவறு. நான் என் நாட்டைத் தொட்டுவிட்டேன். என்னை விட்டுவிடு” என்றான் வீமன்.
“இல்லை! இல்லை! நீ என் காட்டில் தான் பிடிபட்டாய்! ஆதலால் நான் உன்னை உண்பதில் தவறு இல்லை” என்று வாதிட்டது புருடமிருகம்.
“நம் வழக்கை நாமாகத் தீர்க்க முடியாது. இந்நாட்டு அரசரிடம் சென்று நீதிகேட்போம். அவர் சொற்படி நடப்போம்” என்றான் வீமன். வீமன் யோசனையைப் புருட மிருகமும் ஒப்பியது. இருவரும் தருமன் சபையை அடைந்து, தம் வழக்கை எடுத்துரைத்தனர். 
“உம் வழக்கில் தீர்ப்பு உரைப்பதற்குமுன், வீமன் பிடிபட்ட இடத்தைப் பார்க்க வேண்டும்” என்றான் தருமன்.
உடனே தருமனும் அமைச்சரும் வீமனும் புருடமிருகமும் அந்த இடத்தை அடைந்தனர்.
இடத்தை ஆராய்ந்த தருமன் தன் தீர்ப்பை வழங்கினான். “புருடமிருகமே! உன் பிரதிவாதி என் தம்பி என்பதற்காகப் பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கமாட்டேன். உன் காட்டில் வீமன் உடலின் ஒரு பகுதி இருந்துள்ளது. மறுபகுதி எங்கள் நாட்டில் இருந்துள்ளது. ஆதலால், உன் காட்டில் இருந்த வீமன் உடலில் சரி பாதியை நீ உண்ணலாம்” என்றான் தருமன்.
தண்டனை பெறுபவன் தம்பி என்று கூடப் பாராமல், நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கிய தருமனைப் புருடமிருகம் பாராட்டியது.
தீர்ப்பின்படி வீமன் உடலின் பாதியை உண்ணத் தொடங்கியது.
அப்போது சகாதேவன் முன்னே வந்தான். பாண்டவரில், அனைத்து நீதி நூல்களும் அறிந்தவன் சகாதேவன். பகை என்று வெறுப்பதும் உறவு என்று விரும்புவதும் செய்யாத சமத்துவ அறிஞன்.
அத்தகைய சகாதேவன், தன் அண்ணனை நோக்கி,  “அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கினீர்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்று தாங்கள் நிர்ணயமாகக் கூறவில்லையே” என்றான்.
“தம்பி சகாதேவா அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்பது சகலகலை வல்லவனாகிய உனக்குத்தான் நன்கு தெரியும். அதனை நீயே சொல்” என்றான் தருமன்.
“அண்ணா! புருடமிருகம் வீமன் உடலில் பாதி உண்னும் போது மறுபாதியில் சிறு இரணமோ வலியோ ஏற்படலாகாது. அந்த வகையில் புருடமிருகம் உண்ணட்டும்” என்றான் சகாதேவன். தருமன் சொன்ன தீர்ப்பைக் கண்டு அவனைப் பாராட்டிய புருடமிருகம், சகாதேவன் வழங்கிய திருத்தம் கண்டு மிகமிக மகிழ்ந்தது.
புருடமிருகம் தருமனை நோக்கி, அரசே! நான் அறக்கடவுள். உன் அறநீதியைப் பரிசோதிப்பதற்காகவே இப்படி ஒரு சோதனை மேற்கொண்டேன். இந்தச் சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். வீமன் தன் வலிமையால் என்னைக் கொல்லமுடியும். ஆயினும் அறத்துக்குக் கட்டுப்பட்டுத் தண்டனை பெற முன் வந்தான். சகாதேவன் தான் கற்ற கலைத் திறத்தாலும் சமயோசித புத்தியாலும் அறநுணுக்கத்தை உணர்த்தினான்.
“அறம் கர்ப்பதே கடனாகக் கொண்ட நீவிர் நெடுங்காலம் வாழ்க” என்று வாழ்த்தி, புருடமிருக உருவம் நீங்கிய அறக்கடவுள் மறைந்தது. 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel