17. உயர்ந்த வேள்வி

பாரதப் போர் முடிந்தது. தருமன் முடி சூடினான். அரசர்க்கரசன் ஆதல் வேண்டும் என்னும் அவாவினால் அசுவமேத வேள்வி ஒன்று செய்தான்.
யாக முடிவில் வந்தவர் அனைவர்க்கும் வாரி வாரிப் பொன்னும் பொருளும் வழங்கினான்.அறுசுவை உண்டி அளித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ!
தருமன் தானம் வழங்கிக் கொண்டிருந்த போது ஒரு கீரி வந்தது. அது ஓர் அதிசயக் கீரி, அதன் உடலில் பாதி பொன்மயமாயிருந்தது.
அந்தக் கீரி, அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கியது:
“இந்த அசுவமேத வேள்வி வெகு சிறப்பாக நடந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆயினும் ஓர் ஏழை அந்தணன் குடும்பத்தார் செய்த வேள்விக்கு இது ஈடாகாது” என்றது. கீரி,
“அதிசயக்கீரியே இந்த வேள்வியை விடச் சிறப்பாக ஓர் ஏழை அந்தணன் என்ன செய்திருக்க முடியும்? நீ ஏதோ உளறுவது போல் தெரிகின்றது” என்றனர் அவையினர்.
“அந்த அந்தணன் செய்த வேள்வி பற்றிக் கூறுகின்றேன். அறிந்த பின்பு, கருத்தைக் கூறுங்கள். அவசரப்பட்டு ஏதும் பேசாதீர்கள்!” என்றது கீரி.
“ஓர் ஏழைப் பிராமணன் குருநிலத்திற்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பத்தில், அவன், அவனுடைய மனைவி, மகன், மருமகள் ஆக நால்வர் இருந்தனர். 
“அந்த அந்தணன் அறுவடை வயல்களில் சிந்திக் கிடக்கும் தானியமணிகளைப் பொறுக்கி வருவான். அவன் மனைவி அதைக் குத்திச சமைப்பாள். நால்வரும் உண்பர். பல நாள் தானிய மணி போதுமான அளவு கிடைக்காவிடின் அரைப்பட்டினி கால்பட்டினியாயிருப்பர்.
ஒரு நாள் சிறிதளவே தானியம் கிடைத்தது. அதைச் சமைத்து நாலு பங்காக்கி, நான்கு தட்டுக்களில் பரிமாறிக் கொண்டிருந்தாள் குடும்பத் தலைவி. அந்நேரம் ஒரு விருந்தினர் வந்து சேர்ந்தார். அவருக்குத் தாள முடியாத பசி,  “எனக்கு ஏதாவது உணவு தர இயலுமா?” என்று கேட்டார்.
குடும்பத்தலைவர் தன்பாகத்து உணவை அவர் முன் வைத்தார். அதனால் அந்த விருந்தினர் பசி அடங்கவில்லை. அந்தணர் மனைவி, தன் பங்கை அவருக்குத் தரமுன் வந்தாள்.
“மனைவியைக் காப்பாற்றுவது கணவன் கடமை. நீயோ பசியோடிருக்கின்றாய்! உன் உணவை வாங்கி விருந்தினர்க்கு அளிப்பது அறமாகாது” என்று அந்தணர் அவள் தந்ததை மறுத்தார்.  “தருமமும் பொருளும் நம் இருவருக்கும் பொதுவானது. விருந்தினர் பசி தணிப்பது இல்லறத்தார் கடமை. ஆதலால், என் உணவையும் விருந்தினர்க்கே அளித்து விடுங்கள்” என்று வற்புறுத்தினாள் மனைவி.
அப்போது, "உங்கள் இருவர் பங்கு உணவும் விருந்தினர்க்குப் போதாது என் பங்கையும் தருகின்றேன்” என்று மகனும் தன் பங்கை விருந்தினரின் முன் வைத்தான்.
மருமகளும்  “இந்த உணவு விருந்தினர்க்குப் போதாது. என் உணவையும் தருகின்றேன்” என்று தன் பங்கையும் பரிமாறிவிட்டாள். 
“பிற வேள்விகளில் செய்யும் தானங்களை விட நீங்கள் செய்தது மிகமிகச் சிறந்தது” என்று விருந்தினர் வியந்து பாராட்டினார். 
“அத் தருணத்தில் அழகான விமானம் ஒன்று வானின்று இறங்கியது. அந்த ஏழை அந்தணரையும் அவர் குடும்பத்தாரையும் ஏற்றிக் கொண்டு மோட்ச உலகிற்கு ஏகியது” அந்த விமானம். விருந்தினரும் சென்று விட்டார். “அவர்கள் சென்ற பிறகு விருந்தினர் உண்ட இடத்தில் சிந்திக்கிடந்த பருக்கையில் புரண்டேன். என் உடலில் பாதி பொன்மயமானது. மறுபாதியையும் பொன்மயமாக்க வேண்டும் என்று. வேள்வி நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று புரண்டு பார்த்து வருகின்றேன். மறுபாதி பொன்மயமாகவே இல்லை இங்கே நடக்கும்” வேள்வியிலும் அதே நிலைதான். 
“ஆதலால் அந்த ஏழை அந்தணர் குடும்பம் நடத்திய வேள்விக்கு எந்த வேள்வியும் ஈடாகாது” என்று கூறிவிட்டு மறைந்தது 
தன்னைவிடச் சிறந்த வேள்வியாளர் இலர் என்ற கர்வம் தருமனுக்குத் தலை தூக்கியது. அந்தக் கர்வத்தை இறைவன் கீரியில் வடிவில் வந்து அழித்து ஆட்கொண்டான். தன் வேள்வியைப் பழித்ததற்காகக் கீரியின் மேல் தருமன் சினம் கொள்ளவில்லை. தன்னை அகந்தைப் படுகுழியிலிருந்து ஈடேற்ற வந்த தெய்வம் என்று கீரி சென்ற திசையை நோக்கி வணங்கினான் தருமன். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel