10. அர்ச்சுனன் அகந்தை
கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன் காண்டீபன். கண்ணன் திருவாயால் கீதை உபதேசம் கேட்ட அவனிடமும் அகந்தை சிறிது தலை நீட்டியது. .
அடியார்க்கு அருள் செய்வதைக் காட்டிலும் அவர்களிடமுள்ள அகந்தையை ஒழிப்பதையே கண்ணன் சிறப்பாகக் கருதுவான். அருளுக்கு உரியவரையும் அகந்தையானது அண்ணாத்தல் செய்யாத அளற்றில் (உண்டவரை மீள விடாத நரகத்தில்) தள்ளிவிடுமே! என்பது கண்ணன் நினைவு.
“நான் கண்ணனுக்கு நெருங்கிய நண்பன். கண்ணனுக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தும் செய்கின்றேன். கண்ணன் எது கேட்பினும் தருகின்றேன். என் உறுப்புக்களில் எதனைக் கேட்டாலும் தருவேன். ஆதலால் கண்ணனுக்கு என்னை விட உற்றாரோ உறவினரே யாரும் இருக்க இயலாது” என்பது அர்ச்சுனன் கொண்ட அகந்தை.
ஐயப்படாது அகத்தது உணர்கின்ற தெய்வமாகியவன் அன்றோ கண்ணன், அர்ச்சுனன் மனநிலை அறியாமல் போவானோ?
ஒருநாள் “அர்ச்சுனா! நாம் இருவரும் சற்று நேரம் உலாவப் போய் வருவோம்” என்றான் கண்ணன்.
இருவரும் சிறிது தூரம் சென்றனர். ஒரு சிறு குடிசை எதிர்ப்பட்டது. அந்த வீட்டில் கணவன், மனைவி, மகன் ஆக மூவர் மட்டும் இருந்தனர்.
கண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுந்து வந்து காலில் விழுந்து வணங்கி, விரிப்பிட்டு அமரும்படி வேண்டினர்.
“இறைவா! பல்லாயிரம் வருடங்கள் தவம் செய்து முனிவர்களும் தேவர்களும் காண இயலாத நின்காட்சி, எங்களுக்கு வலியக் கிடைத்துள்ளது. எங்களிடம் உனக்குக் காணிக்கையாகத் தர விலையுயர்ந்த பொருள் யாதொன்றும் இல்லை. உள்ளது எதுவாயினும் கேட்டுப் பெற்றுக் கொள்க!” என்று தந்தை மன்றாடினான்.
“ஐயா! உன்னிடம் விலையுயர்ந்த பொருள் ஏதும் இல்லையென்று பொய் சொல்கின்றாயே! உலகமே விலை பெறக்கூடிய ஒன்று உன்னிடம் உள்ளது. அதனைக் கேட்டால் தருவாயா?” என்றான் கண்ணன்.
“எங்களிடமா! விலையுயர்ந்த பொருளா! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே! இருந்தால், அதைத் தருகின்றோம். அப்பொருள் எது என்று நீயே கூறவேண்டும்!” என்றான் தந்தை.
“இதோ இருக்கின்றானே! உன் மகன்! இவன் உன்னிடம் உள்ள ஒப்பற்ற செல்வம் (நன்கலம்) அல்லவா? அவனைக் கொடு!" என்றான் கண்ணன்,
“என்னிடமுள்ளவை அனைத்தும் உனக்குரியனவே! என்மகனை இப்போதே தாரை வார்த்துத் தந்து விடுகின்றேன்” என்று மகனை அழைத்துக் கண்ணன்முன் நிறுத்தினான்.
“ஐயா! இப்படியே உன் மகனைத் தரலாகாது. நீயும் உன் மனைவியும் உச்சியிலிருந்து சரிபாதியாக ரம்பத்தால் அறுத்து வலப்பாதியை எனக்குத் தருதல் வேண்டும்” என்றான் கண்ணன்.
“ஆனால் அறுக்கும் போது, யார் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது” என்று ஒரு நிபந்தனையும் விதித்தான்.
கணவனும் மனைவியும் கணங்கூடத் தாமதம் செய்யாமல், ரம்பம் கொணர்ந்தனர். அறுபடத் தோதாக மகன், தானாகவே அவர்கள் நடுவே வந்து அமர்ந்து கொண்டான்.
ரம்பம் இயங்கியது. மகன் தலை அறுபட்டது. கணவனும் மனைவியும் சிறிதுகூடக் கலங்கவில்லை. கலங்கினால் தானே கண்ணீர் வரும். கண்ணீரே வரவில்லை. ஆனால், அறுபடும் மகனது இடக்கண்ணில் மட்டும் கண்ணிர் ஒழுகியது.
“உடனே கண்ணன், நிறுத்துங்கள், என்னிடம் வாக்குக் கொடுத்ததற்கு மாறாக உங்கள் மகன் கண்ணீர் சிந்துகின்றான். ஆகையால் உங்கள் காணிக்கை ஏற்க மாட்டேன்” என்றான் கண்ணன்.
“இறைவா! என் மகன் முகத்தை நன்கு பார்த்தீர்களா! இடக்கண்ணிலிருந்துதானே கண்ணிர் வருகின்றது. கண்ணனுக்குக் காணிக்கையாகும் பேறு உடலின் வலப்பகுதிக்குத் தானே கிடைத்தது. நமக்கு அப்பேறு கிட்டவில்லையே என்று இடப்பக்கம் அழுகின்றது. ஆதலால் இக்காணிக்கையை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கலாகாது” என்றனர் தாயும் தந்தையும்.
அவர்கள் தன்பால் கொண்டுள்ள பக்தியைக் கண்டு பரவசமான கண்ணன். அறுப்பதை நிறுத்துங்கள் என்றான். அறுப்பது நின்றது. நின்றவுடன், மகன் எவ்வித ஊனமுமின்றி, ஒளிமுறுவலுடன் வந்து கண்ணன் அடியில் விழுந்து வணங்கினான்.
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அர்ச்சுனனின் அகந்தை பறந்துவிட்டது. ஊன் உண்பவன் தவம்போல் ஒழிந்துவிட்டது.
கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "கண்ணா! நீ எனக்குச் சாரதியாக இருந்தாய்! கீதை உபதேசித்தாய்! பகைவரை அழிக்க உதவினாய்! இழந்த நாட்டை மீட்டுக் கொடுத்தாய்! இந்த உதவிக்கெல்லாம் உயர்வான உதவியை இப்போது நீ எனக்குச் செய்துள்ளாய்!"
“மீள இயலாத அகந்தைப் படுகுழியில் வீழாமல் பாதுகாததாய்! இனி நான் என்றும் தவறு செய்யாதவாறு தடுத்துவிட்டாய்!” என்று மனமார வாயார வாழ்த்தினான்.