20. கண்ணனின் உண்மை வடிவம்
மாபாரதப் போர் வாராமல் தடுக்க வழி என்ன என்று சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.

"நீ பாரத அமரில் யாவரையும் நீறுஆக்கிப்  
பூ பாரம் தீர்க்கப் புகுந்தாய்! புயல்வண்ணா! 
கோபாலா! போர்ஏறே! கோவிந்தா! நீஅன்றிப் 

மா பாரம் தீர்க்க மற்றார்கொல் வல்லாரே" 

என்று கூறத் தொடங்கிய சகாதேவன், "கண்ணா! நேராகக் கையால் பிடித்து நின்னை நான் கட்டுவனேல்,  வாராமல்  காக்கலாம் மாபாரதம்" என்று முடித்தான். 
"சகாதேவா! என்ன கூறுவாய்! நீ எதைச் செய்ய முடிந்தாலும், எல்லாம் வல்ல இறைவனாகிய என்னைக் கட்ட இயலுமா?" என்றான் கண்ணன்.
"உன்னை நீ தானும் உணராதவனான கண்ணா! உன் உண்மை உருவத்தைக் காட்டு நான் கட்டுகின்றேனா? இல்லையா? பார்!" என்றான்.
உடனே கண்ணன், தான் ஒருவனே பதினாறு ஆயிரம் வடிவு கொண்டு சகாதேவன் எதிரில் நின்றான். "இத்தனை வடிவங்களில் என் மூல வடிவம் கண்டு கட்டு பார்ப்போம்" என்றான் கண்ணன்.
பெருஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தில் மூல வடிவை அடையாளம் கண்டு அதனைத் தன்மனத்தினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
சகாதேவன் மனத்தின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன் "சகாதேவா! நீ வென்றுவிட்டாய்! நீ மனத்தால் கட்டிய இறுக்கம் தாங்க இயலவில்லை! என்னை விட்டு விடு!" என்று கெஞ்சினான் எம்பெருமான். 
இச்செய்தி மாபாரதத்தில் வில்லிபுத்துசாழ்வார் கூறியது. 
கண்ணனைக் கட்டியதுபோல், இராமனையும் கட்டி ரசிக்க வேண்டும் என்று பெரியாழ்வார் விரும்பினார். கண்ணன் சகாதேவன் மனத்தால் கட்டுண்டான். இராமனைப் பெரியாழ்வார் மல்லிகை மா மாலை கொண்டு, கட்டுவித்தார்.
திருமணம் ஆன புதிது. சீதையும் இராமனும் நூல் நடுவே நுழையினும் பொறுத்துக் கொள்ள இயலாத அன்றில்கள் போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில் ஈடுபட்டனர்.
வேடிக்கைப் பேச்சுக்களும் வினோதக் கதைகளும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
"என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்!" என்று கேட்டான் இராமன்.
"என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!" என்றாள் சீதை!
"என்னைக் கட்ட உன்னால் முடியுமா?" இராமன். 
"இதோ கட்டிக்காட்டுகின்றேன்" என்று கூறிக் கொண்டே சீதை, தன் கூந்தலில் சுற்றியிருந்த மல்லிகை மாலையை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த சண்பகக் கொடியில் கட்டி விட்டாள்.
மல்லிகைக் கொடி தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.
அது வெற்று மல்லிகைக் கொடியா? 
கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனத்தன்பைவிடப் பலமடங்கு அன்பு அம்மல்லிகை மாலையில் பிணைந்துள்ளதே! மல்லிகை மாலையை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ள காதலன்பை இராமனால் அறுக்க இயலுமா? 

 

அல்லியம்பூ மலர்க்கோதய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்!
சொல்லுகேன் கேட்டருளாய்! துணைமலர்க்கண் மடமானே! 
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில் 
மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்.

 

என்று இராமன், சீதையைத் தேடிக் காண அனுமனை அனுப்பிய போது. இச்செய்தியை அடையாளமாகக் கூறியனுப்பினான். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel