33. கண்ணன் ஆடிய கூத்துக்கள்
கண்ணன் பேரன். அநிருத்தன். பானாசுரன் மகள் உஷை. அவள் அநிருத்தனைக் காதலித்தாள். அநிருத்தன் தூங்குகையில் அவனைத் தன் அந்தப்புரத்துக்குக் கடத்திச் சென்று விட்டாள்.
அவனை மீட்பதற்காகக் கண்ணன் பாணாசுரனது சோ நகருக்குச் சென்றான். அப்போது அங்கு அநிருத்தன் உள்ள இடம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வீதியிலே குடக்கூத்தும், பேடிக்கோலக் கூத்தும் ஆடிக் கொண்டு சென்றான் என்பது தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்தி.
அது மட்டுமன்று கஞ்சனைக் கொல்வதற்காக அல்லியத் தொகுதிக் கூத்து என ஒருவகைக் கூத்து ஆடினான் என்பதும். கஞ்சன் ஏவிய சாணூரன், முட்டிகன் என்ற மல்லரைக் கொல்வதற்காக மல்லாடல் என்ற கூத்தும் ஆடினான் என்பதும் தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிய செய்திகள். இவற்றைச் சிலப்பதிகாரம் மிகமிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.
சங்க நூல்களில் பொதுவாக, கண்ணன் வரலாறுகள் பல கூறப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வடநாட்டுக் காவியங்களில் உள்ளனவே.
கண்ணன் சூரியனைத் தந்தான் என ஒரு செய்தி குறிப்பிடப்படுகின்றது. அவ்வரலாறு வடமொழிக் காவியங்களில் இல்லை. தமிழ்நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்திதான் போலும்! ஆனால் அச்செய்தி விளக்கமாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை.